Wednesday, 3 January 2024

பறவைகள் பலவிதம்...செங்குறிச்சி

 


பறவைகளைப் பார்க்க திருச்சி மதுரை சாலையிலுள்ள செங்குறிச்சி எனும் ஊரிலுள்ள குளத்திற்கு 28-02-16 அன்று சென்றிருந்தேன். அதிகாலையில் அந்தக் குளத்தையும் அங்கு வந்திருந்தப் பறவைகளையும் பார்த்தது மகிழ்ச்சியாக இருந்தது.
இப்போதுதான் பறவைகளைப் பார்க்க ஆரம்பித்துள்ளேன். புத்தகங்களில் படங்களாகப் பார்த்த பறவைகளை நாமே நேரடியாகக்கண்டு அடையாளம் தெரிந்து கொள்வது உண்மையில் மகிழ்ச்சியான தருனங்கள்தான்.
கொக்கு, நாரை, சம்பக்கோழி, நீர்வாத்து, நீர்காகம், முக்குளிப்பான், அக்காண்டி முதலிய பறவைகளை குளத்திலும். கரிசான் குருவி எனப்படும் ரெட்டைவால் குருவி, மைனா முதலிய பறவைகளை கரைகளிலும் காணமுடிந்தது. 
கிராம மக்களிடம் இருக்கும் பறவைகளைப்பற்றிய அவர்களின் அறிவு வியப்பானது. அங்குக் காணப்பட்ட எல்லா பறவைகளும் அங்கிருந்த அனைவராலும் தனித்தனியாக இணம்காணமுடிகிறது. வயல் வேளைக்குக் கையில் கூடைப்பையுடன் சென்றப் பெண்கள் தொலைவில் தண்ணீரில் கொக்குககளுக்கிடையே நின்றுக்கொண்டிருந்த பறவைகளைக்காட்டினார்கள். வெள்ளை உடல் , கருமையான இறக்கை, நீண்ட கால்களுடன் காகம் அளவிற்கு இருந்த அந்தப் பறவையை அவர்கள் அக்காண்டி என்றழைக்கின்றனர். அக்காண்டி என்ற இப்பெயர் அவர்கள் பயன்படுத்தும் உள்ளுர் பெயர் எனத்தெரிகிறது. அக்காண்டியபத்தி ஒரு பாட்டு இருக்கு பாடவா என்றுக் கேட்டவாறு குழுவாகப் பாட ஆரம்பித்தனர்.

"அக்காண்டி அக்காண்டி
எங்கெங்கே முட்டயிட்ட
கலயத்துல முட்டையிட்டு
இட்ட முட மூனுமுட்ட
பொரிச்சது நாலு குஞ்சு"

அவர்கள் பாட பாட. அக்காண்டிக்குருவி அவர்களின் வாழ்வியலோடு கலந்திருப்பதை உணரமுடிகிறதல்லவா?
மூனுமுட்ட நாலு குஞ்சு என்பது விடுகதைப் போல ஒன்று.
இவர்களின் பாட்டுக்கு எதிர்பாட்டுப்பாடும் அக்காண்டியின் பாட்டைக் கேட்ட என் கண்ணில் கண்ணீர் திரையிட்டதை மறைக்க முயன்றுத்தோற்றேன்.

"நாலு குஞ்சுக்கு எரதேடி நாடெல்லாம் போய்வந்தேன்
மூனு குஞ்சுக்கு எரதேடி முக்காலமும் போய்வந்தேன்
ரெண்டு குஞ்சுக்கு எரதேடி ரேகமெல்லாம் போய்வந்தேன்
கடைசி குஞ்சுக்கு எரதேடி காடெல்லாம் போய்வந்தேன்
மாயகொறத்தி மவன் வழி மறிச்சி
கண்ணி வச்சான்
காலு ரெண்டும் கண்ணிக்குள்ள
எறகு ரெண்டும் மாரடிக்க
நா விட்ட கண்ணீரு குண்டுகுழி ரொப்பி
குதுர குளுப்பாட்டி ஆன குளுப்பாட்டி
நா விட்ட கண்ணீரு நார்தக்கு பாஞ்சி
எலுமிச்சக்கு பாஞ்சி மஞ்சக்கு பாயயில
மடக்குனு போனதம்மா அம்மாவோட உசிரு"

குருவி பாடுவதைப்போல இப்பாடலை அவர்கள் அமைத்திருந்தாலும் உண்மையில் இது அவர்களின் துயரத்தை, அவரவர்களின் பாடுகளை நினைத்துப் பாடுவதாகத்தான் உள்ளது.

...பாலா





No comments:

Post a Comment