Tuesday, 2 January 2024

பறவைகள்... பலவிதம்...நீர்க்காகங்கள்

 

                        சென்றமுறை பறவைகள் பார்த்தலின்போது மிகவும் மகிழ்ந்தேன். 
காரணம் ...
                     ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்ப் புலவர்கள் கண்ட காட்சியை, அவர்கள் சங்க இலக்கியங்களில் பதிவு செய்த காட்சிகளை இப்போது நாம் நேரடியாகக் காணும்போது மகிழ்வது இயற்கைத்தானே!

ஆமாம்...

திருச்சி உய்யகொண்டான் வாய்க்காலில் பறவைகளைப் படமெடுத்துக்கொண்டிருந்தபோது நீர்க்காகங்களின் செயல்பாடுகளைக் காணநேர்ந்தது. பெரியக் கூட்டமாக இல்லையென்றாலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக நீரில் மூழ்கி இரைத் தேடிக்கொண்டிருந்தன.

நீரில் மூழ்கி மீனுடன் வெளியேவரும் அவை அலகிலுள்ள மீனை அப்படியே நேரடியாக விழுங்காமல், அப்படியே மேலே தூக்கிப்போட்டு தலைப்பகுதி முதலில் உள்ளே போகுமாறு விழுங்குவதைக் கண்டபோது, சங்க புலவர்கள் விவரித்தக் காட்சி நினைவில்வர, மீண்டும் அவற்றைப் படிக்க வாய்ப்புக் கிட்டியது.
இந்நீர்க்காகங்கள் சிலப்பதிகாரத்திலும் கம்பராமாயணத்திலும் நீர்க் காக்கைகள் என்று அழைக்கப்படுகின்றன. கம்பராமாயணத்தில் நீர்க் காக்கையினத்தில் காணப்படும் இருவகைகளும் கூறப்பட்டுள்ளன.

“ஒழுகு சாற்றகன் கூனையின் ஊழ்முறை
முழுகி நீர்க்கருங் காக்கை முளைக்குமே”
“எவ்வம் ஓங்கிய இறப்பொடு பிறப்பு இவை என்னக்
கவ்வு மீனெடு முழுகுவ எழுவன கரண்டம்.”

LITTLE CORMORANT என்றழைக்கப்படும் நீர்க்கருங் காக்கை சிலஇடங்களில் கடற்காக்கை என அழைக்கப்படுகின்றன. ‘நீர்க்காகம்’ என்றழைப்பதே சரியானது. இதுபோன்றே இருக்கும் மற்றொரு பறவை INDIAN SHAG கம்பராமாயணத்தில் ‘கரண்டம்’ என்று அழைக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு பறவைகளும் உடல் முழுவதும் கருப்பு நிறமானவை. நீரில் மூழ்கி நீருக்கடியில் நீந்தி மீனைத் துரத்திப் பிடிக்கும். பின்னர் அலகில் மீனொடு எழும்பும். கம்பரும் அழகாக நீர்க்கருங்காக்கை முழுகி முளைக்கும் என்றும்

‘கரணடம் முழுகுவ, கவ்வு மீனொடு எழுவ’
என்றும் கூறியுள்ளார். அப்பரும் தேவாரத்தில்
‘கரண்ட மலி தடம்பொய்கை காழியர்கோன்’
கரண்டி போன்ற மூக்குள்ளதால் கரண்டம் என்ற பெயர் வந்திருக்கலாம்.


பாலா பாரதி






No comments:

Post a Comment