நீலத் தாழைக்கோழி அல்லது நீலக்கோழி அல்லது மயில்கால் கோழி
வீட்டுக்கோழியின் அளவை ஒத்ததும் நீலநிறமான உடலைக்கொண்டதுமான அழகானப் பறவைகளை நீர்நீலைகளை ஒட்டிய இடங்களில் சோடியாக நிற்பதைக் காணலாம். இப்பறவைகள் ஓரளவிற்குப் பறக்கும் திறன்கொண்டவை. சிவந்த நிறக்கால்களைக்கொண்ட இவற்றின் விரல்களிடையே சவ்வு இல்லையென்றாலும் நன்றாக நீந்தக் கூடியவை.
இவற்றின் உணவு நீர்த்தாவரங்கள், சிறு உயிரிகளான தவளை, நத்தை, வாத்துக்குஞ்சுகள் போன்றவை. இவை மற்றப் பறவைகளின் முட்டைகளைத் திருடித் தின்பதிலும் கில்லாடியாம்.
"நீருறை கோழி நீலச் சேவல்
கூருகிர்ப் பேடை வாயா அமூர"
- ஐங்குறுநூறு 51
நீரீல் உறைகின்ற நீலச் சேவற்கோழி என்று ஐங்குறுநூறு கூறுகின்றது. இவற்றின் நீண்ட சிவந்த கால்களில் கூர்மையான நகங்கள் உள்ளன. இவற்றை "கூருகிர்" என்கிறார் புலவர். நீர்க்கோழிகளைப் போலவே நீலக்கோழிகளும் சத்தமிட்டுக்கொண்டே இருக்கும்.
"நீலச்செங்கண் சேவல்" எனப் புலவர்கள் கூறியிருப்பதிலிருந்து இவற்றின் கண்கள் சிவப்பாக இருக்கும் எனப் புலனாகிறதல்லவா?
நீலக்கோழியை ஆங்கிலத்தில் THE PURPLE MOORHEN என்றும் பறவை நூலர் PROPYRIO PROPYRIO எனவும் அழைக்கின்றனர்.
- பாலா பாரதி
No comments:
Post a Comment