எனது பிள்ளைகளையும் பறவைகளைப் பார்த்தலுக்கு அழைத்துச் சென்றதாலோ என்னவோ அன்று சிறப்பான நாளாக அமைந்துவிட்டது. அப்புறம் என்னங்க சங்க இலக்கியங்களில் நமது புலவர்கள் வர்ணனைச் செய்த பறவையை நேரில் பார்க்கும் வாய்ப்பு எல்லோருக்கும் கிடைத்துவிடுமா என்ன?
தினேஷ்தான் முதலில் அதைப் பார்த்தான்.
"அப்பா..அங்கப் பாருங்க"
அவன் சுட்டிய திசையில் எனக்கு ஒன்றும் தெரியவில்லை
"அங்க நல்லாப் பாருங்க"
என்ன இருந்தாலும் இளமையான கண்களுக்கும் சற்று வயதான கண்களுக்கும் வேறுபாடு இருக்கத்தானே செய்யும்.உற்றுப்பார்த்தால் வாய்க்காலின் நடுவிலிருந்த புதரொன்றினுள் அசையும் உருவம் புலப்பட்டது. வீட்டுக்கோழியின் அளவிலும், உடலின் மேற்பகுதி கருப்பாகவும் மார்புப்பகுதி வெள்ளையாகவும் காணப்பட...
அட...கம்புட்கோழி அல்லவா இது.
கம் என்றால் நீர், புள் என்றால் பறவை. நீரில் வாழும் பறவை எனும் பொருள் அமையுமாறு 'கம்புள்' என அழைக்கப்படுகிறது. இதை சம்பங்கோழியென்றும், கானாங்கோழியென்றும் சில பகுதிகளில் அழைக்கிறார்கள்.
"பழனக் கம்புள் பயிர்ப்பெடையகவும்
கழனி யூரநின் மொழிவ லென்றும்"
கழனி யூரநின் மொழிவ லென்றும்"
ஐங்குறுநூறு - 60
சங்க இலக்கியங்களில் பலவற்றில் கம்புள் என்றே அழைக்கப்படுகிறது.
வீட்டுக்கோழியின் அளவுள்ள, குட்டையான வாலையுடைய இவை நீர்நிலைகளுக்கருகில் புதர்களும் சேறும் கலந்து காணப்படும் இடங்களில் நடமாடும் இயல்பு கொண்டவை. ஆள் அரவம் கேட்டால் புதர்களுக்குள்ளும் கோரைகளுக்குள்ளும் ஒளிந்துகொள்ளும். இவற்றின் கால்விரல்கள் சேற்றிலும் நீர்த்தாவரங்களின் மேலும் நடக்க ஏதுவாக நீளமாக அமைந்திருக்கும்.
வெண்மார்புக் கானாங்கோழி (WHITE-BREASTED WATERHEN) எனப் பறவை நூலாரால் அழைக்கப்படும் இவற்றின் முகமும் மார்பும் வெள்ளையாகவும் உச்சந்தலையும் முதுகும் கருஞ்சாம்பல் நிறத்திலும் இருக்கும். கால்கள் பச்சையாகவும் அலகு மஞ்சளாகவும் இருக்கும்.
நன்றாக நீந்தக்கூடிய இவை புற்புதர்களில் அடிக்கடி ஓசையிட்டுக்கொண்டே இருக்கும். இவை வீட்டுக்கோழிகள், காட்டுக்கோழிகளைவிட சத்தம் எழுப்புகிறவை என சங்கப் புலவர்கள் பதிவு செய்துள்ளனர்.
"மனைக் கோழிப் பைம்பயி ரினனே
கானக் கோழிக் கவர்குரலொடு
நீர்க் கோழிக் கூப் பெயர் குந்து"
கானக் கோழிக் கவர்குரலொடு
நீர்க் கோழிக் கூப் பெயர் குந்து"
புறம் 395
பறநானூற்றில் நீர்க்கோழிகள் எனக்கூறப்படும் இவை வீட்டுக்கோழிகள் கூப்பிடுவதையும், கானக்கோழிகள் குரலிடுவதையும் ஒப்பிட்டு கானாங்கோழிகள் கூக்குரலிடுவதைப் புலவர் கூறியுள்ளது இங்கு நோக்கத்தக்கது. இவை காலையிலும் மாலையிலும் 'கிரெக்' 'கிரெக்' எனக் கத்திக்கோண்டேயிருப்பதையே "கூப் பெயர்க்குந்து" எனக் கூறியுள்ளனர். ஒரே ஓசையை அடிக்கடி தொடர்ந்து வெளியிடுவதால் "அரிக்குரல்" எனவு அழைக்கப்பட்டிருக்கிறது. நாட்டு மக்களும் 'சணப்பங்கோழி போல தொண தொணக்கிற' என்று கூறும் வழக்கு சம்பங்கோழியின் இந்தக் குரலைத் தெளிவாகச் சுட்டிக் காட்டுகின்றது.
பாலா பாரதி
No comments:
Post a Comment