Wednesday, 3 January 2024

பேர்ட் வாட்ச்சிங் மேன் வாட்ச்சிங்கான கதை

 பேர்ட் வாட்ச்சிங் மேன் வாட்ச்சிங்கான கதை தெரியுமா?


இந்தப் பறவைங்களப் பத்தி படிக்கிறோமே ஒரு எட்டு அதுகங்ள நேராப்போய் பாத்துருவோமேன்னு பேர்ட் வாட்ச்சிங் கிளம்பும்போது நம்ம வாட்ஸ்அப் குழு நண்பர்கள் ஞாபகத்தில் வந்தாங்க. எங்க போனாலும் தனியாவே போறீங்களே சொன்னா நாங்களும் வரமாட்டமான்னு ரொம்ப உரிமையா கோவிச்சிக்கிறாங்களே இந்த தடவை அவங்களயும் கூட்டிப் போகலாம்னு யோசனை வந்துச்சு.

ஞாயிற்றுகிழமை போறதா திட்டம் போட்டு பேர்ட் வாட்ச்சிங் வர்ரவங்க காலைல 6 மணிக்கு வந்துரங்கன்னு மெசேஜ் போட்டேன். சரி கொஞ்சப் பேராவது வருவாங்ன்னு நம்பிக்கையில இருந்தால் கடைசியில ஒருத்தரும் வரலை. சரி போகாம லீவுப் போட்டுரலாம்னு யோசிச்சா, வீட்டுக்காரம்மா போறேன்னு சொனீங்களே போகலியான்னு கேட்டு நம்மை அனுப்புறதிலேயே குறியா இருக்க ஒரு வழியா தன் முயற்ச்சியில் சற்றும் மணம் தளராத விக்ரமாதித்தன் ரேஞ்சுக்கு தோளில வேதாளத்துக்குப் பதிலா கேமராப் பையை தூக்கிப் போட்டுக்கொண்டு கிளம்பினேன். இதுல ஒருத்தர் போன் பன்னி போங்க பின்னாடியே வர்ரேன்னு சிரிக்காம, போகிற இடத்தக்கூட கேக்காம, அங்க வந்திடரேன்னு சொல்லி நம்ம மெர்சலாக்கிட்டார். சரி பின்னாடி வர்ரேன்னு சொன்னாறேன்னு நானும் திரும்பி திரும்பி பாத்துக்கிட்டே போனேன்.


பறவைகலெல்லாம் மரத்துல கும்பலா ஓக்காந்துருக்கும் நாமெல்லாம் அதுங்களப் பாத்துக்கிட்டே போகலாம்னு கற்பனையோட இருந்தேன்.
அன்னிக்கின்னு பாத்து நெறய பறவைங்க மரத்துல ஒக்காந்திருந்தன. நான் போனவுடன் எல்லாம் அதுங்க வேலைய நிறுத்திட்டு எல்லாம் சேந்தமாதிரி திரும்பி பாத்தன. எனக்கு ஒருமாதிரியாயிருச்சி. சரி போட்டாவாவது எடுக்கலாமேன்னு கேமராவ எடுத்தா , இதுல கேமரா வேறயான்னு கேக்குறமாரி சில பறவைங்கப் மொறைக்க, கடைசில என்னா ஆச்சின்னா பறவைங்லெல்லாம் சேர்ந்து மேன் வாட்ச்சிங் பன்னிருக்குங்க.

...பாலா





பறவைகள் பலவிதம்...செங்குறிச்சி

 


பறவைகளைப் பார்க்க திருச்சி மதுரை சாலையிலுள்ள செங்குறிச்சி எனும் ஊரிலுள்ள குளத்திற்கு 28-02-16 அன்று சென்றிருந்தேன். அதிகாலையில் அந்தக் குளத்தையும் அங்கு வந்திருந்தப் பறவைகளையும் பார்த்தது மகிழ்ச்சியாக இருந்தது.
இப்போதுதான் பறவைகளைப் பார்க்க ஆரம்பித்துள்ளேன். புத்தகங்களில் படங்களாகப் பார்த்த பறவைகளை நாமே நேரடியாகக்கண்டு அடையாளம் தெரிந்து கொள்வது உண்மையில் மகிழ்ச்சியான தருனங்கள்தான்.
கொக்கு, நாரை, சம்பக்கோழி, நீர்வாத்து, நீர்காகம், முக்குளிப்பான், அக்காண்டி முதலிய பறவைகளை குளத்திலும். கரிசான் குருவி எனப்படும் ரெட்டைவால் குருவி, மைனா முதலிய பறவைகளை கரைகளிலும் காணமுடிந்தது. 
கிராம மக்களிடம் இருக்கும் பறவைகளைப்பற்றிய அவர்களின் அறிவு வியப்பானது. அங்குக் காணப்பட்ட எல்லா பறவைகளும் அங்கிருந்த அனைவராலும் தனித்தனியாக இணம்காணமுடிகிறது. வயல் வேளைக்குக் கையில் கூடைப்பையுடன் சென்றப் பெண்கள் தொலைவில் தண்ணீரில் கொக்குககளுக்கிடையே நின்றுக்கொண்டிருந்த பறவைகளைக்காட்டினார்கள். வெள்ளை உடல் , கருமையான இறக்கை, நீண்ட கால்களுடன் காகம் அளவிற்கு இருந்த அந்தப் பறவையை அவர்கள் அக்காண்டி என்றழைக்கின்றனர். அக்காண்டி என்ற இப்பெயர் அவர்கள் பயன்படுத்தும் உள்ளுர் பெயர் எனத்தெரிகிறது. அக்காண்டியபத்தி ஒரு பாட்டு இருக்கு பாடவா என்றுக் கேட்டவாறு குழுவாகப் பாட ஆரம்பித்தனர்.

"அக்காண்டி அக்காண்டி
எங்கெங்கே முட்டயிட்ட
கலயத்துல முட்டையிட்டு
இட்ட முட மூனுமுட்ட
பொரிச்சது நாலு குஞ்சு"

அவர்கள் பாட பாட. அக்காண்டிக்குருவி அவர்களின் வாழ்வியலோடு கலந்திருப்பதை உணரமுடிகிறதல்லவா?
மூனுமுட்ட நாலு குஞ்சு என்பது விடுகதைப் போல ஒன்று.
இவர்களின் பாட்டுக்கு எதிர்பாட்டுப்பாடும் அக்காண்டியின் பாட்டைக் கேட்ட என் கண்ணில் கண்ணீர் திரையிட்டதை மறைக்க முயன்றுத்தோற்றேன்.

"நாலு குஞ்சுக்கு எரதேடி நாடெல்லாம் போய்வந்தேன்
மூனு குஞ்சுக்கு எரதேடி முக்காலமும் போய்வந்தேன்
ரெண்டு குஞ்சுக்கு எரதேடி ரேகமெல்லாம் போய்வந்தேன்
கடைசி குஞ்சுக்கு எரதேடி காடெல்லாம் போய்வந்தேன்
மாயகொறத்தி மவன் வழி மறிச்சி
கண்ணி வச்சான்
காலு ரெண்டும் கண்ணிக்குள்ள
எறகு ரெண்டும் மாரடிக்க
நா விட்ட கண்ணீரு குண்டுகுழி ரொப்பி
குதுர குளுப்பாட்டி ஆன குளுப்பாட்டி
நா விட்ட கண்ணீரு நார்தக்கு பாஞ்சி
எலுமிச்சக்கு பாஞ்சி மஞ்சக்கு பாயயில
மடக்குனு போனதம்மா அம்மாவோட உசிரு"

குருவி பாடுவதைப்போல இப்பாடலை அவர்கள் அமைத்திருந்தாலும் உண்மையில் இது அவர்களின் துயரத்தை, அவரவர்களின் பாடுகளை நினைத்துப் பாடுவதாகத்தான் உள்ளது.

...பாலா





Tuesday, 2 January 2024

பறவைகள்... பலவிதம்...நீர்க்காகங்கள்

 

                        சென்றமுறை பறவைகள் பார்த்தலின்போது மிகவும் மகிழ்ந்தேன். 
காரணம் ...
                     ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்ப் புலவர்கள் கண்ட காட்சியை, அவர்கள் சங்க இலக்கியங்களில் பதிவு செய்த காட்சிகளை இப்போது நாம் நேரடியாகக் காணும்போது மகிழ்வது இயற்கைத்தானே!

ஆமாம்...

திருச்சி உய்யகொண்டான் வாய்க்காலில் பறவைகளைப் படமெடுத்துக்கொண்டிருந்தபோது நீர்க்காகங்களின் செயல்பாடுகளைக் காணநேர்ந்தது. பெரியக் கூட்டமாக இல்லையென்றாலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக நீரில் மூழ்கி இரைத் தேடிக்கொண்டிருந்தன.

நீரில் மூழ்கி மீனுடன் வெளியேவரும் அவை அலகிலுள்ள மீனை அப்படியே நேரடியாக விழுங்காமல், அப்படியே மேலே தூக்கிப்போட்டு தலைப்பகுதி முதலில் உள்ளே போகுமாறு விழுங்குவதைக் கண்டபோது, சங்க புலவர்கள் விவரித்தக் காட்சி நினைவில்வர, மீண்டும் அவற்றைப் படிக்க வாய்ப்புக் கிட்டியது.
இந்நீர்க்காகங்கள் சிலப்பதிகாரத்திலும் கம்பராமாயணத்திலும் நீர்க் காக்கைகள் என்று அழைக்கப்படுகின்றன. கம்பராமாயணத்தில் நீர்க் காக்கையினத்தில் காணப்படும் இருவகைகளும் கூறப்பட்டுள்ளன.

“ஒழுகு சாற்றகன் கூனையின் ஊழ்முறை
முழுகி நீர்க்கருங் காக்கை முளைக்குமே”
“எவ்வம் ஓங்கிய இறப்பொடு பிறப்பு இவை என்னக்
கவ்வு மீனெடு முழுகுவ எழுவன கரண்டம்.”

LITTLE CORMORANT என்றழைக்கப்படும் நீர்க்கருங் காக்கை சிலஇடங்களில் கடற்காக்கை என அழைக்கப்படுகின்றன. ‘நீர்க்காகம்’ என்றழைப்பதே சரியானது. இதுபோன்றே இருக்கும் மற்றொரு பறவை INDIAN SHAG கம்பராமாயணத்தில் ‘கரண்டம்’ என்று அழைக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு பறவைகளும் உடல் முழுவதும் கருப்பு நிறமானவை. நீரில் மூழ்கி நீருக்கடியில் நீந்தி மீனைத் துரத்திப் பிடிக்கும். பின்னர் அலகில் மீனொடு எழும்பும். கம்பரும் அழகாக நீர்க்கருங்காக்கை முழுகி முளைக்கும் என்றும்

‘கரணடம் முழுகுவ, கவ்வு மீனொடு எழுவ’
என்றும் கூறியுள்ளார். அப்பரும் தேவாரத்தில்
‘கரண்ட மலி தடம்பொய்கை காழியர்கோன்’
கரண்டி போன்ற மூக்குள்ளதால் கரண்டம் என்ற பெயர் வந்திருக்கலாம்.


பாலா பாரதி






Sunday, 31 December 2023

பறவைகள்...பலவிதம்.......கண்டோம் கம்புளை


 எனது பிள்ளைகளையும் பறவைகளைப் பார்த்தலுக்கு அழைத்துச் சென்றதாலோ என்னவோ அன்று சிறப்பான நாளாக அமைந்துவிட்டது. அப்புறம் என்னங்க சங்க இலக்கியங்களில் நமது புலவர்கள் வர்ணனைச் செய்த  பறவையை நேரில் பார்க்கும் வாய்ப்பு எல்லோருக்கும் கிடைத்துவிடுமா என்ன?

தினேஷ்தான் முதலில் அதைப் பார்த்தான்.



"அப்பா..அங்கப் பாருங்க"

அவன் சுட்டிய திசையில் எனக்கு ஒன்றும் தெரியவில்லை

"அங்க நல்லாப் பாருங்க"

என்ன இருந்தாலும் இளமையான கண்களுக்கும் சற்று வயதான கண்களுக்கும் வேறுபாடு இருக்கத்தானே செய்யும்.உற்றுப்பார்த்தால் வாய்க்காலின் நடுவிலிருந்த புதரொன்றினுள் அசையும் உருவம் புலப்பட்டது. வீட்டுக்கோழியின் அளவிலும், உடலின் மேற்பகுதி கருப்பாகவும் மார்புப்பகுதி வெள்ளையாகவும் காணப்பட...

அட...கம்புட்கோழி அல்லவா இது.


கம் என்றால் நீர், புள் என்றால் பறவை. நீரில் வாழும் பறவை எனும் பொருள் அமையுமாறு 'கம்புள்' என அழைக்கப்படுகிறது. இதை சம்பங்கோழியென்றும், கானாங்கோழியென்றும் சில பகுதிகளில் அழைக்கிறார்கள்.

"பழனக் கம்புள் பயிர்ப்பெடையகவும்
கழனி யூரநின் மொழிவ லென்றும்"
                                                                                         ஐங்குறுநூறு - 60

சங்க இலக்கியங்களில் பலவற்றில் கம்புள் என்றே அழைக்கப்படுகிறது.
வீட்டுக்கோழியின் அளவுள்ள, குட்டையான வாலையுடைய இவை நீர்நிலைகளுக்கருகில் புதர்களும் சேறும் கலந்து காணப்படும் இடங்களில் நடமாடும் இயல்பு கொண்டவை. ஆள் அரவம் கேட்டால் புதர்களுக்குள்ளும் கோரைகளுக்குள்ளும் ஒளிந்துகொள்ளும். இவற்றின் கால்விரல்கள் சேற்றிலும் நீர்த்தாவரங்களின் மேலும் நடக்க ஏதுவாக நீளமாக அமைந்திருக்கும்.

வெண்மார்புக் கானாங்கோழி (WHITE-BREASTED WATERHEN) எனப் பறவை நூலாரால் அழைக்கப்படும் இவற்றின் முகமும் மார்பும் வெள்ளையாகவும் உச்சந்தலையும் முதுகும் கருஞ்சாம்பல் நிறத்திலும் இருக்கும். கால்கள் பச்சையாகவும் அலகு மஞ்சளாகவும் இருக்கும்.
நன்றாக நீந்தக்கூடிய இவை புற்புதர்களில் அடிக்கடி ஓசையிட்டுக்கொண்டே இருக்கும். இவை வீட்டுக்கோழிகள், காட்டுக்கோழிகளைவிட சத்தம் எழுப்புகிறவை என சங்கப் புலவர்கள் பதிவு செய்துள்ளனர்.

"மனைக் கோழிப் பைம்பயி ரினனே
கானக் கோழிக் கவர்குரலொடு
நீர்க் கோழிக் கூப் பெயர் குந்து"
                                                                                                          புறம் 395

பறநானூற்றில் நீர்க்கோழிகள் எனக்கூறப்படும் இவை வீட்டுக்கோழிகள் கூப்பிடுவதையும், கானக்கோழிகள் குரலிடுவதையும் ஒப்பிட்டு கானாங்கோழிகள் கூக்குரலிடுவதைப் புலவர் கூறியுள்ளது இங்கு நோக்கத்தக்கது. இவை காலையிலும் மாலையிலும் 'கிரெக்' 'கிரெக்' எனக் கத்திக்கோண்டேயிருப்பதையே "கூப் பெயர்க்குந்து" எனக் கூறியுள்ளனர். ஒரே ஓசையை அடிக்கடி தொடர்ந்து வெளியிடுவதால் "அரிக்குரல்" எனவு அழைக்கப்பட்டிருக்கிறது. நாட்டு மக்களும் 'சணப்பங்கோழி போல தொண தொணக்கிற' என்று கூறும் வழக்கு சம்பங்கோழியின் இந்தக் குரலைத் தெளிவாகச் சுட்டிக் காட்டுகின்றது.

பாலா பாரதி

பறவைகள்...பலவிதம்... உள்ளான் ஐயா


திருச்சி - மதுரை சாலையில் மனிகண்டம் அருகிலுள்ள ஒரு நீர்நிலைக்கருகில் நெடுங்கால் உள்ளான் சோடியை வழக்கமாகப் பார்ப்பேன். ஆரம்பத்தில், சோடியாக இரை தேடிக்கொண்டிருந்த இந்தப் பறவைகளில் ஒன்று என்னைப் பார்த்தவுடன் திடீரென மேலே பறந்து "கீக்கி . . . கீக்கி" என சத்தமாகக் கத்திக்கொண்டே தலைக்கு மேல் வட்டமடிக்கும்.

தினமும் இதே கதைதான் சிலநாட்கள் சென்றவுடன், இவனால் ஆபத்தில்லை என்று உணர்ந்துக்கொண்டு கத்துவதில்லை. போகப்போக நாம் போகும்போது ஒருமுறை ஏறெடுத்துப் பார்த்துவிட்டு இயல்பாகத் தன் வேலையைப் பார்த்துக்கொள்ளும். இப்படியாக எங்கள் நட்பு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்துவந்த நிலையில்,

ஒரு டுவிஸ்ட்...

அன்று வழக்கம்போல அங்கு போயிருந்தபோது...

"புல்டோசர்" ஒன்று அந்த நீர்நிலையில் மண்ணைப்போட்டு மூடிக்கொண்டிருந்தது.

" பைபாஸ் ரோட்டை ஒட்டி இருக்குதுள்ள அதான் பெட்ரோல் பங்க் வருது"

ஓட்டுநர் இதைச் சொல்லிவிட்டு ரிவர்ஸ் எடுக்க, நம் நினைவுகளும் ரிவர்ஸ் எடுத்தது.

சரி...இந்த சோடி எங்கே போயிருக்கும்? வேறு இடம் தேடிப் போயிருக்குமா? இல்ல இவி்ங்க அடிச்சி சைட்டிஸ் ஆக்கிருப்பானுங்களா? மில்லியன் டாலர் கேள்விகளுடன் அவற்றை ஒவ்வொரு நீர்நிலைகளாகத் தேட ஆரம்பித்தேன். அவை கண்ணில் படாமல் நம்பிக்கை இழந்திருந்த வேலையில்தான்...

இன்று நாகமங்கலம் அருகிலுள்ள ஒரு பள்ளியின் நிகழ்ச்சியை முடித்துவிட்டு திரும்பிவரும் வழியில் சாலையின் இடப்புறமுள்ள ஒரு சிறிய, நீர்த்தேங்கிய குளத்தின் நடுவே இரண்டு பறவைளைக் கண்டவுடன் வண்டியை ஓரமாக நிருத்திவிட்டு, கேமராவில் ஜூம் செய்துப் பார்த்தால்...
அதே சோடி...
அது மகிழ்ச்சியானத் தருணமாக அமைந்தது.

பாலா பாரதி

பறவைகள்...பலவிதம்... நீலத் தாழைக்கோழி

நீலத் தாழைக்கோழி அல்லது நீலக்கோழி அல்லது மயில்கால் கோழி 

வீட்டுக்கோழியின் அளவை ஒத்ததும் நீலநிறமான உடலைக்கொண்டதுமான அழகானப்  பறவைகளை நீர்நீலைகளை ஒட்டிய இடங்களில் சோடியாக நிற்பதைக் காணலாம்.  இப்பறவைகள் ஓரளவிற்குப் பறக்கும் திறன்கொண்டவை. சிவந்த நிறக்கால்களைக்கொண்ட இவற்றின் விரல்களிடையே சவ்வு இல்லையென்றாலும் நன்றாக நீந்தக் கூடியவை.
இவற்றின் உணவு நீர்த்தாவரங்கள், சிறு உயிரிகளான தவளை, நத்தை, வாத்துக்குஞ்சுகள் போன்றவை. இவை மற்றப் பறவைகளின் முட்டைகளைத் திருடித் தின்பதிலும் கில்லாடியாம்.

"நீருறை கோழி நீலச் சேவல்
கூருகிர்ப் பேடை வாயா அமூர"



                                                         -  ஐங்குறுநூறு 51

நீரீல் உறைகின்ற நீலச் சேவற்கோழி என்று ஐங்குறுநூறு கூறுகின்றது. இவற்றின் நீண்ட சிவந்த கால்களில் கூர்மையான நகங்கள் உள்ளன. இவற்றை "கூருகிர்" என்கிறார் புலவர். நீர்க்கோழிகளைப் போலவே நீலக்கோழிகளும்  சத்தமிட்டுக்கொண்டே இருக்கும்.
"நீலச்செங்கண் சேவல்" எனப் புலவர்கள் கூறியிருப்பதிலிருந்து இவற்றின் கண்கள் சிவப்பாக இருக்கும் எனப் புலனாகிறதல்லவா?

நீலக்கோழியை ஆங்கிலத்தில் THE PURPLE MOORHEN என்றும் பறவை நூலர் PROPYRIO PROPYRIO எனவும் அழைக்கின்றனர்.


- பாலா பாரதி



பறவைகள்... பலவிதம்...முக்குளிப்பான்


ஏரிகளிலும் குளங்களிலிலும் நீந்திக்கொண்டும் சட்டென்று நீரில் மூழ்கி கண நேரத்தில் மறைந்து வேறொரு இடத்தில் தலைக்காட்டும் பறவையைப் பார்த்திருப்பீர்கள். நீரில் நீந்தி வாழும் இந்தப் பறவை அடிக்கடி நீருக்குள் முங்கி முங்கிக் குளிப்பதால், பெயரே முக்குளிப்பான் ஆகிவிட்டது.

மாலை வேலைகளில் தண்ணீரின் பரப்பில் ஒன்றையொன்று விரட்டிக் கொண்டு 'கிச் கிச்' என்ற ஒலி எழுப்பும். வரிகளை உடைய உடலைப் பெற்றிருக்கும் இவற்றின் குஞ்சுகள் தாய்ப்பறவையின் முதுகில் ஏறி சவாரி செய்யும் காட்சி அழகானது.
முக்குளிப்பான் (Little Gerbe) 

(Tachybaptus ruficollis)  முக்குளிப்பான் என்ற பேரினத்தைச் சார்ந்த குட்டைச் சிறகுடைய வாலில்லாத நீர்ப்பறவை ஆகும். பழுப்பு நிறமும் உருண்டு திரண்ட உடலையும் இவைப் பெற்றுள்ளன. குட்டையான, கூரான அலகைக்கொண்ட வாலற்ற இந்தப் பறவைகள் ஏரிகளிலும் , குளங்களிலும் இணையாகவோ கூட்டமாகவோ காணப்படும். முட்டையிடும் காலத்தில் தலையும் கழுத்தும், அடர்ந்த மாநிறமாகவும், வாயின் அடிப்பாகம் மஞ்சள் நிறமாக மாறும். 




இவை குட்டையான சிறகுகளைப் பெற்றிருப்பினும் நன்றாகப் பறக்கக்கூடியவை.  அவை வாழும் குளத்தில் நீர் வற்றி விட்டால்  தொலைவிலுள்ள மற்றொரு குளத்திற்குப் பறந்து செல்லும்.

இவற்றின் உணவுகள் நீர்ப்பூச்சிகள், புழுக்கள்,  தலைப்பிரட்டைகள்,  தவளைகள்,  நத்தைகள், சிறுமீன்கள் ஆகும்.முக்குளிப்பான்கள் தனது கூடுகளை புற்களாலும், செடிகளாலும், தண்ணீருக்கடியில் மூழ்கி நிற்கும் செடிகளின் மேல்கட்டி மூன்று முதல் ஐந்து முட்டைகள்வரை இடும். இந்திய வாத்தான இதை நீர்ப்புள் எனவும் அழைப்பர்.


பாலா பாரதி