Friday 22 September 2017

ஜக்கானா... தாமரைக்கோழி

"அங்கே பாருங்க....ஜக்கானா... ஜக்கானா...அந்த...
அந்த செடிங்களுக்கு நடுல..."
அதியன் காட்டிய திசையில் பார்த்தால் முதலில் நமக்கு ஒன்றுமே தெரியவில்லை. கொஞ்சம் நேரம் சென்றவுடன் லேசாக தெரிய ஆரம்பித்தது. அட... இவ்வளவு அழகான பறவையை தவறவிட இருந்தோமே எனத் தோன்றியது.
கூத்தப்பார் ஏரியில், பறவை பார்த்தலின் போது நண்பர் தங்கமணி அவர்களின், நான்காம் வகுப்பு படிக்கும் அவரது மகன் அதியன் காட்டியதிசையில் அல்லிச் செடிகளினூடே அந்த அழகான பறவை உட்கார்ந்திருந்தது.
சரி...அது என்ன ஜக்கானா...?
"தண்கயத்துத் தாமரை நீள் சேவலைத் தாழ்பெடை
புண்கயத் துள்ளும் வயலூர- வண்கயம்
போலுநின் மார்பு புளிவேட்கைத் தென்றிவள்
மாலுமா றாநோய் மருந்து"
திணைமாலை 142
ஆம்...ஜக்கானா... தாமரைக்கோழிதான்...
தாமரை, அல்லி இலைகளின் மீது நடந்து செல்வதற்கு ஏற்ப கால்விரல்கள் நீளமாகவும் நீண்ட நகங்களையும் கொண்டுள்ளன. இவற்றின் நீண்ட விரல்கள் இலையின் மீது பரவியிருப்பதால் கீழே அமுங்காதபடி இலைகள் தாங்கிப்பிடிக்கின்றன.
தாமரை, அல்லிச் செடிகளினூடே வாழும் இப்பறவை நீளவால் இலைக்கோழி,தாமரை நீள் சேவல், அல்லிக்குருவி, மீவால் குருவி எனப்பல காரணப் பெயர்களால் உள்நாட்டிலும், PHEASANT TAILED JACANA என்று ஆங்கிலத்திலும், HYDROPHASIANUS CHIRURGUS என்று பறவை நூல்களிலும் அழைக்கப்படுகின்றன.
இணைசேரும் பருவத்தில் இவற்றின் வால் நீண்டு மேல்புறம் வளைந்து அழகாகக் காணப்படும். ஏரிகள், குளங்களில் காணப்படும் தாமரை, அல்லிச் செடிகளில் மட்டுமே இவற்றைக்காண முடியும். இச்சூழல் இவற்றிக்கு இன்றியமையாதது. தாமரைக்குளங்களும், அல்லிக்குளங்களும் அழிந்தால் இந்த அழகானப் பறவையும் அழியும்.
- பாலா பாரதி


குடுமிக்கழுகு Crested Hawk Eagle

குடுமிக்கழுகு | Crested Hawk Eagle | Theni Sep'17
பாறைஓவியங்களைக் காண ஆண்டிப்பட்டி பகுதியில் சுற்றிக்கொண்டிருந்தபோது தீடீரென காட்சியளித்தான்.