Thursday 30 November 2017

ஆலா

மீசை ஆலா | Whiskered Tern
"ஏண்டா இப்படி ஆலாப் பறக்கிறே?”
என சொல்லக் கேட்டிருப்போம். 
ஆலா என்பது புலம்பெயர் பறவை. இவைப் புலம் பெயரும் போதும், இரை தேடும்போதும் விடாது பறப்பதை வைத்துதான் அப்படி ஒரு சொல்வழக்கு வந்திருக்க வேண்டும். ஆர்டிக் ஆலாக்கள் நீண்ட தொலைவிற்குத் தொடர்ந்து பறக்கும் திறனுள்ளவை.
மீசை ஆலாக்களை கிளியூர் குளத்தில் பார்த்தோம். இவற்றை படமெடுப்பது கடினம், ஏனெனில் இவைத் தொடர்ந்து பறந்துக்கொண்டே இருக்கும். இவை உட்கார்ந்து ஓய்வெடுப்பதை அன்றுதான் பார்த்தோம்.
- பாலா பாரதி


வக்கா என்ற இராக் கொக்கு

இராக்கொக்கு |Night Heron 
வக்கா என்று அழைக்கப்படும் இப்பறவைகள் நீர்நிலைகளை சார்ந்திருப்பவை.
இவை பகல் முழுதும் ஏதாவதொரு மரக்கிளையிலோ புதர்களிலோ ஓய்வெடுத்துவிட்டு, மாலைப்பொழுதுகளிலும் இரவிலும் வேட்டையாடக் கிளம்புகின்றன. இவற்றின் ஒலி காகம் கரைவதைப் போலிருப்பதால் "இரவின் காகம்" எனப்பொருள்படும் Nycticorax என்றப் பெயரை அளித்துள்ளனர்.
வக்காக்கள் நீரின் கரையருகே இரவிலும் அதிகாலையிலும் அசையாது தன் இரையின் அசைவுகளை பார்த்திருக்கும். சரியான நேரம் அமையும்போது இரையை கொத்திப்பிடித்து உண்கின்றன. இவற்றின் முக்கிய உணவு சிறியமீன்கள், தவளைகள், தேரைகள்,பூச்சிகள், ஓடுடைய நீர்வாழ் உயிரினங்களாகும்.
- பாலா பாரதி

தினைக்குருவி

தினைக்குருவி | Scaly-Breasted Munia 
முனியா.... ஏ... முனியா...
என்ன...யாரையோ கூப்பிடுவதாக நினைத்து விட்டீர்களா?
முனியா என்றழைக்கப்படும் தினைக்குருவிகள் சிட்டுக் குருவியை விடச் சிறியவை, தேன்சிட்டைவிட சற்றே பெரியவை. இவற்றின் அலகு மொத்தமாகவும் கூம்புவடிவிலும் இருக்கும். தானியங்களையும் மெல்லிய தோலுள்ள விதைகளையும் தோலை நீக்கிவிட்டு உண்ணும். சிட்டுக் குருவிகளை மாதிரி இல்லாமல் இவற்றைக் கூண்டில் அடைத்து வீட்டில் வளர்க்க முடியும். ஆமாம், வீட்டில் கூண்டில் அடைத்து வளர்க்கிறோமே அதேதான்.
நம்நாட்டில் ஆறு வகையான முனியாக்கள் காணப்படுகின்றன. தினையன், கருப்புவரையன் சிட்டு ஆழ்வார் சிட்டு, நெல்லுக் குருவி என்றெல்லாம் நாட்டு மக்களால் அழைக்கப்படுகின்றன.
'நிரைபறைக் குரீ இ யினம்'
'கிளையமல் குரீ இ'
என இக் குருவிகளை சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.
இவற்றுள் பொரிராட்டினம் என்றழைக்கப்படும் புள்ளி முனியா (Spotted Munia)வும் ஒன்று.
மனிதர்கள் தாங்கள் உயிர் வாழ இந்த முனியாக்களை பலியிட்டிருக்கிறார்கள். ஐம்பதுகளில் நிலக்கரி சுரங்கங்களில் வெடி வைத்துத் தகர்த்தப் பின் அந்த இடத்தில் ஆட்களுக்கு அபாயம் விளைவிக்கக் கூடிய விஷவாயு இருக்கிறதா என்று கண்டறிய ஒருவர் ஒரு கூண்டில் முனியாவை எடுத்துக் கொண்டு முன்னே செல்வாராம். முனியாவின் தலை சாய்ந்து உயிர் விட்டால் உடனே ஆட்கள் எல்லோரும் பின் வாங்கி விடுவார்களாம்.
'அறம்' படத்தில் குழந்தை சிக்கிக்கொள்ளும் போர்வெல் குழாயினுள் விஷவாயு இருக்கிறதா எனத் தெரிந்துகொள்ள கயிற்றில் கோழியைக் கட்டி இறக்கிப் பார்ப்பார்களே ... அதுபோலத்தான்.
பின்னர் குழாய்கள் மூலம் வெளிக் காற்றினை சுரங்கத்திற்குள் செலுத்தி விஷவாயுவை வெளி ஏற்றுவார்களாம்.
"மனிதன் உயிர் பிழைப்பதற்காக பாவம் இந்தப் பறவைகள் உயிர் விட்டிருக்கின்றன."
- பாலா பாரதி

கீச்சான்

பழுப்புக் கீச்சான்| கசாப்புக்காரக்குருவி | Brown Shrike

கீச்சான்கள் தாங்கள் வேட்டையாடும் வெட்டுக்கிளி, ஓணான், சுண்டெலி, சிறுபறவைகள் போன்றவற்றை, மரத்தின் நீண்ட முட்களில் குத்தி வைத்துக் கொண்டு பின்னர் நிதானமாக அவற்றை உண்ணும். வேறு ஏதேனும் பறவயோ, விலங்கோ அந்த மரத்தினை நெருங்கினால் அவற்றைத் துரத்தி விரட்டி அடிக்கும்.
(நா என்ன வியாபாரத்துக்கு கடையா போட்டுருக்கேன்? It is my meal...keep distance..)
மணிகண்டம் குளத்தருகே இவனைப் பார்த்தபோது, சரி இன்றைக்கு இவனோட 'மெனு' என்னவென்றுப் போய் பார்த்தால்
அவன் முள்ளில் குத்திவைத்திருந்தது....
"வௌவால்,...!"
இவனுக்கு கைவசம் இன்னொருத் தொழிலும் உள்ளது. இவன் ஒரு 'மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட்'. ரொம்ப போரடிச்சா மற்ற பறவைகளின் குரலில் பாட ஆரம்பித்துவிடுவான். சாரி... கத்த ஆரம்பித்துவிடுவான்.
குளிர்காலத்தில் தென்கிழக்கு ஆசியப்பகுதிகளிலிருந்து இங்கு வலசை வரும் பழுப்புக் கீச்சான்களை நீர்நிலைகளுக்கருகிலுள்ள முள்மரங்களில் பார்க்கலாம். இவற்றை ஆங்கிலத்தில் ஷ்ரைக் அல்லது புச்சர் பேர்ட் (Shrike or Butcher bird) என்று அழைப்பார்கள்.
கீச்சான் என்ற பெயரில் சிறிய கடல்மீனும் உள்ளது. புலி போலக் கோடுகள் கொண்ட இந்த சிறிய மீனை டைகர்ஃபிஷ் என்றும் அழைப்பர்.
(ஏலே கீச்சான் வெந்தாச்சு ...
நம்ம சூச பொண்ணும் வந்தாச்சு...)
- பாலா பாரதி


தகைவிலான் | Barn Swallow

"தலையில்லாக் குருவி"
தகைவிலான் | Barn Swallow
சிட்டுக்குருவியின் அளவுள்ள இக்குருவிகள் பெரும்பாலும் பறந்துக்கொண்டேதான் இருக்கும், சில நேரங்களில் சாலையோரங்களில், மின்கம்பிகளில் கூட்டமாக உட்கார்ந்திருக்கும். இவற்றின் வால் இரண்டாகப் பிளந்து கம்பிபோல் நீட்டிக்கொண்டிருப்பதை வைத்து இவற்றை இனம் காணலாம்.
இந்தியாவின் வடபகுதியிலிருந்து ஆகஸ்ட், செப்டம்பரில் வலசை வரத்தொடங்கும் இவை ஏப்ரல், மே மாதங்களில் திரும்பிச்சென்றுவிடும்.
ஆங்கிலத்தில் Swallows என அழைக்கப்படும் இவை தகைவிலான், தலையில்லாக் குருவி, தம்பாடி என பல பெயர்களால் அழைக்கப்படுகின்றன.
எப்போதும் பறந்துகொண்டே பூச்சிகளைப் பிடித்துக்கொண்டு இருப்பதால் தரையில் இல்லாத குருவி எனும் பொருள்படும்படி 'தரைநில்லா குருவி' என அழைக்கப்பட்டு பின்பு அப்பெயர் 'தலையில்லா குருவி' என மாறியிருக்க வேண்டும்.
ஐரோப்பாவில் இக்குருவிகள் மிகவும் பிரபலம். ஐரோப்பியர்கள் இவற்றை "தங்கள் பறவை" (Our Bird) என பெருமையுடன் அழைக்கின்றனர்.
சரி...நம்ம மக்கள் இக்குருவியைப்பற்றி என்ன கூறுகிறார்கள் எனப் பார்ப்போமா?
அங்கே ஒருத்தர் இருக்கிறார் அவரிடம் கேட்போம்...
"அதோ அந்த கம்பியில ஒக்காந்திருக்கே அந்த குருவியப் பத்தி சொல்லுங்களேன்."
"அதா சார்...அது ரொம்ப டேஸ்டா இருக்கும், வீட்ல சின்ன புள்ளங்களுக்கு சளி புடிச்சுச்சின்னா இதபுடிச்சி சூப்பு வெச்சி குடுத்தா சட்னு சரியாயிரும், மத்தபடி ரொம்ப நல்ல குருவி சார்..."
அட...கெரகம்புடிச்சவனுங்களா....!
- பாலா பாரதி


Tuesday 28 November 2017

சிறிய கரும்பருந்து | Black Winged Kite

சிறிய கரும்பருந்து | Black Winged Kite

இப்பருந்தின் உடல் வெள்ளையாகவும் இறக்கை கருப்பு நிறத்திலும் காணப்படும். இவற்றின் ரூபி நிறக்கண்களும், கண்களுக்குமேலே ஓடும் கருப்புநிறக் கோடும் தனித்துவமானவை. பெரும்பாலும் தனித்து உயரமான கம்பங்களின் மீதும் கட்டிடங்களின் மீதும் அமர்ந்திருப்பதைக்காணலாம்.

திறந்த, புள்வெளிப்பகுதிகளில் அதிகம் காணப்படும். தேவையேற்படும்போது உள்நாட்டுக்குள்ளேயே வலசை வரும் இயல்புடையன.

-பாலா பாரதி

தையல்காரக் குருவி | Tailor Bird


தையல்காரக் குருவி | Tailor Bird | Manikandam | Trichy

சென்றமுறை கசாப்புக்காரரை சந்தித்தோமில்லையா? இன்று தையல்காரரை சந்திப்போமா.

Tailor Bird என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்தத் தையல்காரக் குருவிகளை வீட்டுத்தோட்டங்களிலும் புதர் அடர்ந்த இடங்களிலும் இவரைக் காணலாம். வாலை ஆட்டியபடி சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் இவரைப் பார்த்திருக்காவிட்டாலும் இவரின் குரலை கேட்டிருப்போம். இரண்டு விதமான கீச்சல்களை எழுப்பியபடி கிளைக்கு கிளை தாவிக்கொண்டே இருப்பார். ஆலிவ் பச்சை நிறத்தில் முதுகுப்பகுதியையும் வெள்ளை நிற வயிற்றுப் பகுதியையும் கொண்டிருக்கும் இவருக்குப் பிடித்த டிஸ் புழு, பூச்சிகள். மனிதர்கள் புழங்கும் இடங்களில் இயல்பாக செயல்படும் இவரை படமெடுப்பது சற்றுக் கடினம்தான்.

சிட்டுக்குருவியின் அளவில் இருப்பார், ஆண் குருவியின் வால்இறகுகளில் நடு இரண்டு இறகுகள் நீண்டிருக்கும். இவரை தையல்காரக்குருவி என்று அழைக்கக் காரணம் இவர் தன் கூட்டினை அமைக்கும் முறை. எப்படித் தெரியுமா?...

சற்றே அகலமான இலையைத் தேர்ந்தெடுத்து அதனை வளைத்துப் பிடித்துக் கொண்டு சிலந்தி வலையினைக் கொண்டு சுற்றி ஒட்டுவார். பின்னர் அவ்வாறு தயார் செய்த கூம்பு போன்ற குழாய் உள்ளே பஞ்சினைக் கொண்டு வந்து வைப்பார்.

பிறகு தனது கூர்மையான அலகினைக் கொண்டு இலையின் ஓரத்தில் சிறு துவாரங்கள் செய்து அத்துவாரங்களின் வழியே பஞ்சினை வெளியே இழுத்து அதைத் தட்டையாக்குவார். அதாவது 'ரிவீட்' அடிப்பார். கூம்பின் அடிப்பாகத்தில் பஞ்சால் குழிவாக மெத்தைப்போன்று தயார் செய்து அதில் முட்டைகளை இடுமாறு அமைப்பார்.

- பாலா பாரதி

ஒரு மரம் எத்தனை பறவைகளுக்கு உணவளிக்க முடியும்?...

ஒரு மரம் எத்தனை பறவைகளுக்கு உணவளிக்க முடியும்?...
ஒருநாள் தொட்டபெட்டா பகுதியில் பறவைகள் பார்த்தலின் போது திடீரென இந்த வினா மனத்தில் எழ, அங்கிருந்த ஒரு மரத்தின், ஒரு கிளையின், ஒரு கொப்பைத் தேர்ந்தெடுத்து அரைமணி நேரம் அதைக் கண்காணிக்க முடிவுசெய்த நமக்கு கிடைத்த விடையோ சுவாரஸ்யமானது.
அது என்ன மரம் என்றுகூட நமக்கு தெரியவில்லை, ஆனால் அம்மரத்தின் ஒரு கிளையில் உள்ள ஒரு கொப்பில், அது பூவா, சிறிய பழமா எனத் தெரியவில்லை. அதைச் சாப்பிட அந்த அரைமணி நேரத்தில் ஒரு கரிச்சான், ஒரு கொண்டைக்குருவி, இரண்டு மாம்பழச்சிட்டுகள் என நான்குப் பறவைகள் வந்ததைப் பதிவு செய்தோம்.
ஒரு மரத்தின், ஒரு கிளையின், ஒரு கொப்பு அரைமணியில் நான்கு உயிரினங்களுக்கு உணவளிக்க முடியுமெனில், காட்டிலுள்ள மரங்கள் அனைத்தும் சேர்ந்து எத்தனை பறவைகளுக்கு உணவளிக்க முடியும் என எண்ணி காட்டின் பிரமாண்டத்தை வியந்தவாறே வீடுவந்து சேர்ந்தோம்.
- பாலா பாரதி

கிளியூர் பறவைகள்

கிளியூருக்குப் படையெடுக்கும் வெளிநாட்டுப் பறவைகள்...
திருச்சியில் ஒரு 'வேடந்தாங்கல்'!
விகடன்
Posted Date : 17:38 (22/11/2017) Last updated : 17:38 (22/11/2017)
ஜெ.பஷீர் அஹமது
கோ.ராகவேந்திரகுமார்
பறவைகள் என்றதுமே வேடந்தாங்கல்தான் நமக்கு நினைவுக்கு வரும். பறவைகள் சரணாலயமான இங்கு வருடந்தோறும் ஆயிரக்கணக்கான வெளிநாட்டுப் பறவைகள் வந்துசெல்லும். இதேபோல, தற்போது திருச்சியில் இருக்கும் கிளியூருக்குப் படையெடுத்துள்ளன வெளிநாட்டுப் பறவைகள்.
கிளியூர் பறவைகள்
ஐரோப்பாவில் இருந்து வருகைதரும் காட்டு வாத்து இனத்தைச் சேர்ந்த நீலச்சிறகு வாத்து, ஆண்டி வாத்து எனப் பல்வேறு இனப் பறவைகள் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகில் உள்ள கிளியூர் கிராமத்தின் குளத்தில் வந்து அமர்ந்துள்ளன. இதனால் அந்தப் பகுதி முழுவதும் ரம்மியமாக காட்சியளிக்கிறது. இந்தப் பறவைகளின் சிறப்பம்சங்கள்குறித்து நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார் பறவைகள் ஆர்வலர் பாலா பாரதி.
"பறவைகளிடமுள்ள வினோதங்களில் ஒன்று, இடம்பெயர்தல் என்ற வலசை போதல் (Bird Migration). ஒவ்வொரு வருடமும் ஒரு பருவ காலத்தில் இது நடக்கும். இடம் பெயர்வது என்றால் ஒன்றோ இரண்டோ அல்ல. விதவிதமான பறவைகள் லட்சக்கணக்கான எண்ணிக்கையில் இடம்பெயரும்.
பாலபாரதிபல்லாயிரம் மைல் தூரத்தைக் கடந்து பறவைகள் வலசை போவதற்கான முதன்மையானக் காரணங்களில் ஒன்று உணவுத்தேடல்; மற்றொன்று, கூடுகட்டி இனப்பெருக்கம் செய்ய ஏதுவான சூழல். ஒவ்வொரு பருவத்திலும், பறவைகள் உணவு குறைவாகக் கிடைக்கும் இடத்தில் இருந்து உணவு அதிகம் கிடைக்கும் இடத்தை நோக்கி இடம் பெயர்கின்றன. பருவகாலம் மாறியதும், மீண்டும் இடம்பெயர்ந்துவிடும். இவ்வாறு இவை வெகுதொலைவுக்குப் பறக்கும்போது பல சவால்களைச் சந்திக்க வேண்டும். இதுபோன்ற சவால்களை சமாளிக்குமாறு அவை தகவமைப்பைப் பெற்றுள்ளன.
இடம்பெயர்ந்து செல்வதற்கு முன்பாக சில வாரங்களுக்கு நிறைய உணவை உட்கொண்டு அதைக் கொழுப்பாக மாற்றி உடலில் சேமித்து வைத்துக்கொள்ளும். இக்கொழுப்பையே நீண்ட தொலைவுக்குப் பறக்கும்போது தேவைப்படும் ஆற்றலாக மாற்றிக்கொள்கின்றன. இப்போது கூட, இங்கே கிளியூரில் அவை ஓய்வெடுப்பதுபோலத் தெரிவது, அவற்றின் கொழுப்புச் சேர்தலுக்காகவே (Fat Accumulation). ஆர்டிக் ஆலா போன்றப் பறவைகள் ஒரே முயற்சியில் தாங்கள் செல்ல வேண்டிய பன்னிரண்டாயிரம் கிலோ மீட்டர்கள் தொலைவையும் கடக்கும் திறன்பெற்றவை. சில பறவையினங்கள் இடையிடையே தங்கி, தங்கள் உடலில் கொழுப்பைச் சேர்த்துக்கொண்டு மீண்டும் பயணத்தைத் தொடர்பவை. இப்படித்தான் ஐரோப்பாவில் இருந்து இங்கே பறவைகள் வந்துசெல்கின்றன. இடம்பெயரும்போது நிறைய பாதைகள் உள்ளன. இவற்றில் வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஓசியானா மற்றும் ஆப்பிரிக்க யூரேசிய வான்வழித்தடம், தென்கிழக்கு ஆசியாவை உள்ளடக்கிய கிழக்காசிய ஆஸ்திரேலிய வான்வழித்தடம் போன்ற வழித்தடங்கள் முதன்மையானவை.
வெளிநாட்டு பறவைகள்
கிளியூர் குளத்தில் தற்போது நீலச்சிறகி, ஆண்டி வாத்து, சீழ்க்கை சிறகி, ஊசிவால் வாத்து உள்ளிட்ட வெளிநாட்டுப் பறவைகள் அதிகளவில் இருக்கின்றன. இவ்வாறாக நீண்ட தொலைவு இடம்பெயர்ந்து வரும் பறவைகள் யாவும் நீர்ப்பறவைகளே, மேலும், இவற்றின் வாழ்வாதாரம் நீரைச் சார்ந்தே உள்ளது. பலர் வாத்துகளுக்குப் பறக்கத் தெரியாது என நினைக்கிறார்கள். ஆனால், பறவைகளில் காட்டு வாத்துகள் அதிகத் தொலைவு பறக்கும் இயல்புள்ளவை. வெறும் 10 சதவிகிதம் மட்டுமே ஆக்சிஜன் உள்ள இமயமலையையே, பட்டைத்தலை வாத்துகள் (Bar-Headed Goose) கடந்துவிடும்.
சூழலியல் அச்சுறுத்தல்கள்
பருவமழை பொய்த்தலும், நீர்மாசுபடுதலும் இவற்றின் வாழ்வாதாரத்தை அதிகம் பாதிக்கும் காரணிகள். இயற்கைப் பேரிடர்களையும் பிற இன்னல்களையும் கடந்து இங்கு வலசைவரும் இவ்வலசைப் பறவைகள் இங்கே நீரில்லாக் குளங்களையும், பிளாஸ்டிக் பைகளால் நிரம்பி இருக்கும் மாசுப்பட்ட நீர்நிலைகளையும் எதிர்கொள்கின்றன. இதுபோன்ற சூழலியல் சீர்கேடுகள் இவற்றுக்கு ஆபத்து விளைவிக்கக்கூடியவை. இந்தக் கிளியூர் குளம் இன்னும் மாசடையாமல் இருக்கிறது. இதைத் தொடர்ந்து இதேபோலப் பாதுகாக்க வேண்டியது அவசியம்.
பறவைகள் இடம்பெயர்வதின் மூலம்தான் மகரந்தச்சேர்க்கை, மண்வளம் பெருகுதல், விதைகள் பரப்பப்படுதல் போன்ற வழிகளில் பல்லுயிர்ப் பெருக்கம் அதிகரிக்கிறது. பறவைகள் இடம்பெயர்ந்து அமரும் இடங்களில் விவசாயம் செழிப்பாகும்; இதன் முக்கியத்துத்தை உணர்ந்து இந்தப் பகுதியை பறவைகள் சரணாலயமாக அறிவிக்கவேண்டும் என்பதே இங்கிருப்பவர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது" என்கிறார் பாலா பாரதி.








கொண்டைக் குயில் | சுடலைக் குயில் | Pied Cuckoo | Jacobin Cuckoo

"இசையை அருந்தும் சாதகப்பறவை போல நானும் வாழ்கிறேன்...
உறக்கமில்லை எனினும் கண்ணில் கனவு சுமந்து போகிறேன்..."
இசையை அருந்தி வாழும் பறவை உண்டா?
மழைத்துளியை அருந்தி வாழும் பறவை உண்டா?
கொண்டைக் குயில் | சுடலைக் குயில் | Pied Cuckoo | Jacobin Cuckoo | Koothappar | Trichy
மழை வருவதை முன்கூட்டியே இப்பறவையின் வருகை அறிவிப்பதாக ஒரு நம்பிக்கை உள்ளது. இந்தியாவில் பருவமழை பரவப்பரவ இந்தப் பறவை இந்தியா முழுவதும் புலம்பெயரும். இதனால், இந்தப் பறவை வந்துப் பாடித்தான் மழைபொழிகிறது என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்க வேண்டும்.
வடமொழி இலக்கியங்களில் இது சாதகப் பறவை எனக் கூறப்பட்டுள்ளது. இது தலையை மேலே உயர்த்தி அலகை விரித்தவாறு வானத்தையேப் பார்த்து வைராக்கியமாக, வேறு எந்த நீரையும் குடிக்காது மழை நீரை மட்டுமே குடிக்கும் என்று விவரிக்கப்பட்டுள்ளது. மேலும் அவற்றுக்கு தாகம் ஏற்பட்டால் வானத்தைப் பார்த்துப் பாடுவதாகவும் அப்போது வானமே இரங்கி மழையை அனுப்புவதாகவும் பாடப்பட்டுள்ளது.
மற்றப் பறவைகளைப் போலவே இந்தப் பறவையும் நீர்நிலைகளில் இருந்துதான் நீரை அருந்தும். வெறும் மழைநீரை குடித்தோ இசையைக் கேட்டோ வாழ்வதில்லை. அப்படி வாழவும் முடியாது.
- பாலா பாரதி

குருகு

"நெஞ்சை எடுத்து நெருப்பினில் வைத்து ...
போனவன் போனான்டி ... ஹோய்
நீரை எடுத்து நெருப்பை
அணைக்க...
வந்தாலும் வருவான்டி...
ஹோய்..."
குருகு / Bittern
சங்ககாலத்தில் மிக நுணுக்கமான முறையில் பதிவு செய்யப்பட்ட பறவைகளுள் இதுவும் ஒன்று.
கபிலரின் குறுந்தொகைப் பாடலில்:
“யாரும் இல்லை; தானே கள்வன்;
தான் அது பொய்ப்பின், யான் எவன் செய்கோ?
தினைத்தாள் அன்ன சிறுபசுங் கால
ஒழுகுநீர் ஆரல் பார்க்கும்
குருகும் உண்டு தான் மணந்த ஞான்றே!”
(குறு – 25)
பிறரறியாமல் தலைவனும் தலைவியும் காதலிக்கின்றனர். ஊரறிய மணம் செய்துகொள்ள நினைக்கின்றாள் தலைவி. ஆனால், தலைவனோ, மணம் புரியக் காலம் நீட்டிக்கின்றான். தலைவிக்கோ, மனதில் குழப்பம். காதலித்தவன் ஒருவேளை தன்னை கைவிட்டு விட்டால் என்ன செய்வது? என்று!
இப்படிப் பதறுகின்ற பெண்ணின் இயல்பான புலம்பலைப் பதிவு செய்திருக்கின்றார் புலவர்.
“நான் அவனுடன் கூடிய அந்நாளில் தினைச்செடியின் அடித்தாள் போல் சிறிய மென்மையான கால்களைக் கொண்ட, ஓடும் நீரில் ஆரல்மீனை பார்த்ததுபோல நின்ற குருகும் அருகே இருந்தது”
இதில் சுவையான செய்தி மறைந்துள்ளது. புதர்களின் ஓரம் மறைந்திருக்கும் இப்பறவையைப் பார்ப்பது சற்று கடினமே. வயல்களிலேயே நடமாடுகிறவர்களுக்குக்கூட அவ்வளவு எளிதில் தென்படாது. கூச்ச சுபாவம் மிக்கது. நாணல்களுக்குள் ஒளிந்து உட்கார்ந்திருக்கும்.
இந்த கண்ணில் படுவதற்கே அபூர்வமான பறவை ஒன்றே எங்கள் காதலுக்கு சாட்சி எனக் காதலியின் கூற்றில் துயரம் மறைந்துள்ளது.
-பாலா பாரதி


Friday 22 September 2017

ஜக்கானா... தாமரைக்கோழி

"அங்கே பாருங்க....ஜக்கானா... ஜக்கானா...அந்த...
அந்த செடிங்களுக்கு நடுல..."
அதியன் காட்டிய திசையில் பார்த்தால் முதலில் நமக்கு ஒன்றுமே தெரியவில்லை. கொஞ்சம் நேரம் சென்றவுடன் லேசாக தெரிய ஆரம்பித்தது. அட... இவ்வளவு அழகான பறவையை தவறவிட இருந்தோமே எனத் தோன்றியது.
கூத்தப்பார் ஏரியில், பறவை பார்த்தலின் போது நண்பர் தங்கமணி அவர்களின், நான்காம் வகுப்பு படிக்கும் அவரது மகன் அதியன் காட்டியதிசையில் அல்லிச் செடிகளினூடே அந்த அழகான பறவை உட்கார்ந்திருந்தது.
சரி...அது என்ன ஜக்கானா...?
"தண்கயத்துத் தாமரை நீள் சேவலைத் தாழ்பெடை
புண்கயத் துள்ளும் வயலூர- வண்கயம்
போலுநின் மார்பு புளிவேட்கைத் தென்றிவள்
மாலுமா றாநோய் மருந்து"
திணைமாலை 142
ஆம்...ஜக்கானா... தாமரைக்கோழிதான்...
தாமரை, அல்லி இலைகளின் மீது நடந்து செல்வதற்கு ஏற்ப கால்விரல்கள் நீளமாகவும் நீண்ட நகங்களையும் கொண்டுள்ளன. இவற்றின் நீண்ட விரல்கள் இலையின் மீது பரவியிருப்பதால் கீழே அமுங்காதபடி இலைகள் தாங்கிப்பிடிக்கின்றன.
தாமரை, அல்லிச் செடிகளினூடே வாழும் இப்பறவை நீளவால் இலைக்கோழி,தாமரை நீள் சேவல், அல்லிக்குருவி, மீவால் குருவி எனப்பல காரணப் பெயர்களால் உள்நாட்டிலும், PHEASANT TAILED JACANA என்று ஆங்கிலத்திலும், HYDROPHASIANUS CHIRURGUS என்று பறவை நூல்களிலும் அழைக்கப்படுகின்றன.
இணைசேரும் பருவத்தில் இவற்றின் வால் நீண்டு மேல்புறம் வளைந்து அழகாகக் காணப்படும். ஏரிகள், குளங்களில் காணப்படும் தாமரை, அல்லிச் செடிகளில் மட்டுமே இவற்றைக்காண முடியும். இச்சூழல் இவற்றிக்கு இன்றியமையாதது. தாமரைக்குளங்களும், அல்லிக்குளங்களும் அழிந்தால் இந்த அழகானப் பறவையும் அழியும்.
- பாலா பாரதி


குடுமிக்கழுகு Crested Hawk Eagle

குடுமிக்கழுகு | Crested Hawk Eagle | Theni Sep'17
பாறைஓவியங்களைக் காண ஆண்டிப்பட்டி பகுதியில் சுற்றிக்கொண்டிருந்தபோது தீடீரென காட்சியளித்தான்.

Friday 28 April 2017

INDIAN SKYLARK வானம்பாடி


பாடும் வானம்பாடி..ஹா...
பாடும் வானம்பாடி..ஹா...
மார்கழி... மாதமோ...
பார்வைகள்..ஓ. ஈரமோ..ஓ.
ஏனோ...ஏனோ....

நண்பர் தங்கமணி அவர்களுடன் செங்குறிச்சி குளத்தில் பறவைகளைப் படமெடுத்துக் கொண்டிருந்தபோது 'வானம்பாடி' பறவையையும் படமெடுத்தோம். அப்போதுதான் வானம்பாடி குறித்து மக்களிடையே நிலவிவரும் நம்பிக்கையும் நினைவு வந்தது.

பறவை பாடி மழையா பெய்யும்?

பருவமழையே குறைந்துவருகிற வேளையில், செயற்கை மழை வருவித்தலும் தோற்ற வேளையில், கேட்க நன்றாகத்தான் இருக்கிறது, பறவை பாடினால் மழை பெய்யுமென்பது.ஆனால், வானம்பாடி பறவை வானில் உயரே சென்று பாடினால் மழை பெய்யும் என்ற நம்பிக்கை இன்றும் நம்மிடையே உள்ளது.

வானம் பாடி வறங்களைந் தானா
தழிதுளி தலைஇய புறவிற் காண்வர
                                                                                                                                                      - ஐங்குநுறூறு 418

தற்பாடிய தளியுணவிற்
புட்டேம்பப் புயன்மாறி
- பட்டினப்பாலை வரி 3-4

மேலேயுள்ள பாடல்களில் மழைத்துளியை விரும்பி உண்ணும் பறவையைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது.இப்பறவையை வானம்பாடி என்று கூறுகிறோம். வானம்பாடி மழைக்காக ஏங்கிப்பாடுமென்றும் அதனால் மழை பொழியுமென்றும் ஐங்குறு நூற்றில் கூறப்பட்டுள்ளது. வானம்பாடி பாடியும் மேகம் அருளாது மழை பெய்யவில்லை என்று அகநானூறு கூறியுள்ளது.

வானம்பாடி மழைத்துளியை விரும்பி உயரத்தில் பறந்து பாடினால் மழை வரும் என்ற நம்பிக்கை சங்க காலத்திலேயே இருந்திருக்கின்றது. இந்த நம்பிக்கை நாட்டு மக்களிடையே வழங்கி வந்திருக்கலாம். ஆனால் மழைத்துளியை உணவாகக் கொள்ளும் பறவை இயற்கையில் எதுவும் இல்லை.

'துளிநசைப்புள்என்று புறநானூறு வானம் பாடியை அழைக்கின்றது. வறட்சி மிக்க காலத்தில் மழைத் துளிக்கு அலையும் புள் என்று கலித்தொகை கூறியுள்ளது.
இது 'தற்பாடி' என்றூம் அழைக்கப்படுகிறது. 'தன்' என்பதற்கு 'தண்ணீர்' என்று பொருள். தன்+பூசணி=தற்பூசணி அதாவது நீர்பூசணி என்றழைக்கப்படுவது போல
தன்+பாடி= தற்பாடி என்ற பெயர் வந்துள்ளது.
(தற்பூசணியை நாம் அதன் பொருளறியாமல் தர்பூசணி என்றழைக்கிறோம்.)

வானம்பாடியை ஆங்கிலத்தில் “THE INDIAN SKYLARK” என்றும் பறவை நூலில் ALAUDA GULGULA என்றும் கூறப்பட்டுள்ளது.

- பாலா பாரதி

INDIAN EAGLE OWL கொம்பன் ஆந்தை

குடிஞை | கொம்பன் ஆந்தை | INDIAN EAGLE OWL | BUBO BENGALENSIS | APR'17
குடிஞை ஒரு பேராந்தை ஆகும். இது மரங்களிளும் மலை முகடுகளிலும் தூங்கியபடி பகற்பொழுதைக் கழிக்கும். இது இரவாடிப் பறவை, இரவில் வெளிப்பட்டுக் காடை, கௌதாரி முயல், ஓணான், பாம்பு ஆகியவற்றை வேட்டையாடும். மக்கள் குடியிருப்புகளில் அவர்கள் வளர்க்கும் கோழி, புறா போன்றவற்றையும் தூக்கிச் செல்லும். இலக்கியங்களில், நெடுந்தொலைவு கேட்கும் படியாக ஹம் ஹம் எனக் கத்தும் என்ற விளக்கம் பறவையியலார் விவரங்களோடு ஒத்துப்போகிறது.
“மரந்தலை மணந்த நனந்தலைக் கானத்து
அலந்தலை ஞெமையத்து இருந்த குடிஞை

பொன்செய் கொல்லனின் இனிய தெளிர்ப்ப” – நற்றிணை - 394
பொற்கொல்லர்கள் குழல்கொண்டுத் தணலை ஊதும்போது ‘ஹும் - ஹும்' என்ற ஓசை எழுப்புவதுபோலப் குடிஞையின் குரலோசை இருந்ததாக நற்றிணை கூறுகிறது.
‘பொன்செய் கொல்லனின் இனிய தெளிர்ப்ப’ - நற்றிணை - 394
இப்பாடலும் குடிஞையின் குரலைக் கூறுகிறது.
“மயில்க ளாலக் குடிஞை யிரட்டும்
துறுகல் லடுக்கத் ததுவே” - ஐங்குறு நூறு - 291
'குடிஞை இரட்ட' என்பது குடிஞை ‘பூம்- பூம்' என்று குரலோசையிடுவது பொற்கொல்லர்கள் ‘பூம் - பூம்’ என்று ஊதுவதுபோல் மாறிமாறி ஒலிப்பதையே ‘முன்னிய இரட்ட’ என்று பாடல் கூறுவது சுவையானது.
“திரிவயின் தெவிட்டுஞ் சேட்புலக் குடிஞைப்
பைதல் மென்குரல் ஐதுவந் திசைத்தொறும்” – அகநானூறு 283
அகநானூறு 283 ஆம் பாடலில் குடிஞையின் குரலோசை மாவரைக்கும் 'திரிகை' எழுப்பும் ஓசையைப்போல இருந்ததாகக் கூறுவது நுட்பமான விளக்கமாகும்.
“உருத்தெழு குரல குடிஞைச் சேவல்
புல்சாய் விடரகம் புலம்ப வரைய
கல்லெறி இசையின் இரட்டும் ஆங்கண்” – அகநானூறு - 89
மலையின் மீதிருந்து கல் விழுவதைப் போன்றிருந்ததாம் குடிஞை வெகுண்டு எழுப்பும் குரலோசை. கல் உருளும் ஓசையைக் குடிஞை வெகுண்டு செய்யும் ஓசைக்கு ஓப்பிட்டது அழகிய உவமையாகும்.
இவ்வாந்தை மலையாளத்தில் 'காட்டுமூங்கா' எனவும், ஆங்கிலத்தில் ' INDIAN OR HORNED EAGLE OWL' எனவும், பறவை நூலில் 'BUBO BENGALENSIS' அழைக்கப்படுகிறது.
இவ்வாந்தைகள் மாந்திரீக செயல்களுக்காக வேட்டையாடப் படுவதால் இவற்றைப் பார்த்த இடத்தைக் குறிப்பிடவில்லை.

- பாலா பாரதி

Monday 17 April 2017

Amur falcon அமூர் வல்லூறு

அமூர் வல்லூறு | Amur falcon | Falco Amurensis | Koonthakulam | Dec'16
நமது அடுத்தபயணம், தமிழ்நாட்டுக்கு அறிதாகவே வரும் அமூர் வல்லூறு எனும் ஆற்றல் மிக்க பறவையைப் பார்க்க கூந்தக்குளம் நோக்கி அமைந்தது.
நண்பர் திரு ரவீந்திரன் நடராஜன் நம்மை கூந்தக்குளம் அழைத்துச் சென்று பல்வேறு பறவைகளைப் பற்றி விளக்கினார். ஆமூர் வல்லூறு என அழைக்கப்படும் ஃபால்கனிடோ குடும்பத்தில் ஃபால்கோ என்ற பேரினத்தைச் சேர்ந்த இப்பறவைகள் மிகவிரைவாகப் பறந்து இரையைத் தாக்கும் இயல்புடையவை. இவை இனப்பெருக்கம் செய்யும் கிழக்காசியப் பகுதியில் ஓடும் அமூர் என்ற ஆற்றின் பெயராலேயே இவை அழைக்கப்படுகிறது. இந்த அமூர் ஆற்றின் பெயரால் அமூர்புலி, அமூர் சிறுத்தைப்புலி ஆகிய உயிரினங்கள் அழைக்கப்படுவது சிறப்பு.
சீனாவின் வடகிழக்குப் பகுதியிலிருந்து ஆப்ரிக்கக் கண்டத்தின் தென்பகுதிவரை மிகநீண்ட தொலைவுக்கு அதாவது 15,000 கிலோமீட்டர் வலசை செல்கின்றன. செப்டம்பர் - அக்டோபரில் வலசையைத் துவங்கும் இவை டிசம்பர் மாதத்தில் ஆப்ரிக்கா சென்றடைகின்றன. பெரும்பாலும் இந்தியாவின் மையப்பகுதியைக் கடக்கும் இவை இந்த வருடம் தமிழ்நாட்டின் வழியே சென்றது அவற்றைப் பார்க்க நமக்கு ஒரு வாய்ப்பாக அமைந்தது.
- பாலா பாரதி

Like
Comment

பச்சைகாலி

Common Greenshank | பச்சைகாலி | Tringa Nebularia | Kizhiyur Trichy | Mar'17
உள்ளான் இனத்தைச் சேர்ந்த இவை வடஐராப்பாவிலிருந்து ஆசியாவரையுள்ள பகுதிகளில் இனப்பெருக்கம் செய்பவை. குளிர்காலத்தில் இந்தியா, ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியாவரை இடப்பெயர்ச்சி செய்பவை. இவற்றின் பச்சைநிறக் கால்களையும் சற்றே மேல் நோக்கி வளைந்த அலகையும் கொண்டு இவற்றை மற்ற உள்ளான்களிலிருந்து பிரித்தறியலாம்.
- பாலா பாரதி

Vernal Hanging Parrot குட்டைக்கிளி

குட்டைக்கிளி | Vernal Hanging Parrot | Loriculus Vernalis |Vellerikkombai Nilgiris | March'17
இவ்வகைக் கிளிகள் கிழக்கு, மேற்குத் தொடர்ச்சிமலைகளின் காடுகளில் காணப்படுகின்றன. வலசை செல்லாத இப்பறவைகள் தலைகீழாகக் தொங்கியபடி தூங்கும் வினோதமான பழக்கம் உடையவை. பழங்கள், பூக்களைத்தேடி மரத்திற்கு மரம் தாவியபடியும் கிளைகளில் நடந்தபடியும் இருப்பதைக் காணலாம்.
வீட்டுக் குருவியைவிட சற்றே பெரிய அளவுடைய இவற்றின் அலகும் பின்புற இறக்கையும் சிவப்பு நிறத்தில் இருக்கும். தொண்டைப்பகுதி ஆண்பறவைகளுக்கு நீல நிறத்திலும் பெண்பறவைகளுக்கு பச்சை நிறத்திலும் காணப்படும். மரபொந்துகளில் இலைகளைக்கொண்டு கூடமைத்து இரண்டு முதல் நான்கு முட்டைகள் இடும்.
- பாலா பாரதி

மஞ்சக்காட்டு மைனா

"மஞ்சக்காட்டு மைனா என்னை கொஞ்சி கொஞ்சி போனா..."
காட்டு மைனா | Jungle Myna | Nilgiris | March'17
சாதாரண மைனாவிலிருந்து சற்று மாறுபட்ட இவற்றிற்கு சாதாரன மைனாவுக்கு கண்களைச் சுற்றிக் காணப்படும் பிரகாசமான மஞ்சள் நிறத் திட்டு இருக்காது. மூக்குக்கு மேல்புறம் தலையில் கொண்டை போலக் காணப்படும்.
'ஸ்டார்லிங்' குடும்பத்தைச் சேர்ந்த இவை தெற்காசியாவின் வெப்பமண்டல பகுதிகளில் இந்தியா, மியான்மர் தொடங்கி கிழக்கில் இந்தோனேசியா வரை காணப்படுகின்றன.
காடுகள், நீர்நிலைகள் வயல்வெளிகளில் காணப்படும் இவை மரப் பொந்துகளில் கூடு அமைத்து 3 முதல் 6 முட்டைகள் வரை இடும்.
- பாலா பாரதி