Tuesday 28 August 2018

சிறிய உழவாரன்

கரிக்கியூர் பாறைஓவியங்களைப் பார்க்க நண்பர்களுடன் சென்றிருந்தபோது, ஓவியங்கள் இருந்த மலையில், 100 அடி உயரத்தில் இதுவரை கண்டிராதக் காட்சி நம்மை வியப்பில் ஆழ்த்தியது. சிறிய உழவாரன்(Little Swift) குருவி ஒன்று சிலந்தி பின்னிய வலையில் மாட்டிக்கொண்டு தப்பிக்க துடித்துக்கொண்டே இருந்தது. சிலந்திவலைக்கு அவ்வளவு வலிமை உண்டு என அப்போதுதான் புரிந்தது. அக்குருவி தப்பிக்க தொடர்ந்து முயன்றுக்கொண்டே இருந்ததைப் பார்த்தவாறே அவ்விடத்தைவிட்டுக் கிம்பினோம். (படங்கள் நண்பர் ஆனந்தன் எடுத்தவை)




கல்லப்புறா Collared Dove

கல்லப்புறா Collared Dove

தனது கழுத்தில் இருக்கும் கருப்புநிறக் கோட்டின் காரணமாக Collared Dove என்ற பெயர் பெற்றிருக்கும் இப்புறாக்களை நமது வீட்டருகிலேயே எளிதாகக் காணலாம். கல்லப்புறா என நாட்டுமக்கள் அழைப்பதைக் கேட்டிருக்கலாம். இவை தானியங்களைப் பொறுக்கும்போது சிறு கூழாங்கற்களையும் சேர்த்து விழுங்குகின்றன. இக்கற்கள் அவற்றின் தொண்டைப்பகுதியில் தங்கி, உணவை கூழாக அரைக்கின்றன.
கோழிகளும் இவ்வாறு செய்வதைப் பார்த்திருப்பீர்கள். வேட்டைக்காரர்கள் இதன் தொண்டைப்பகுதியைக் 'கல்குடல்' எனவும் அழைத்திருக்கிறார்கள். கற்களையும் சேர்த்து உண்பதால் 'கல்லப்புறா' எனப் பெயர் பெற்றது.
பட்டினப்பாலையில் 58 ஆவது வரியில் புலவர் இப்புறாவை
" தூதுணம் புறவொடு துச்சிற் சேக்கும் "
எனக் குறிப்பிடுகிறார்.
அதேபோல்
கலித்தொகை 56 ஆவது பாடல் 16 ஆவது வரியில்
" தூது உண் அம் புறவு எனத் துதைந்த நின் எழில் நலம் "
எனவும் புலவர் குறிப்பிடுகிறார்.
தூதுணம் = தூது + உணம்
தூது = கல், உணம் = உண்கிற
அதாவது கல்லை உண்கிற எனப்பொருள்.
- பாலா பாரதி


நெடுங்கால் உள்ளான்

திருச்சி - மதுரை சாலையில் மணிகண்டம் அருகிலுள்ள ஒரு நீர்நிலைக்கருகில் நெடுங்கால் உள்ளான் சோடியை வழக்கமாகப் பார்ப்போம். ஆரம்பத்தில், சோடியாக இரை தேடிக்கொண்டிருந்த இந்தப் பறவைகளில் ஒன்று நம்மைப் பார்த்தவுடன் திடீரென மேலே பறந்து "கீக்கி . . . கீக்கி" என சத்தமாகக் கத்திக்கொண்டே தலைக்கு மேல் வட்டமடிக்கும்.
தினமும் இதே கதைதான் சிலநாட்கள் சென்றவுடன், இவனால் ஆபத்தில்லை என்று உணர்ந்துக்கொண்டு கத்துவதில்லை. போகப்போக நாம் போகும்போது ஒருமுறை ஏறெடுத்துப் பார்த்துவிட்டு இயல்பாகத் தன் வேலையைப் பார்த்துக்கொள்ளும். இப்படியாக எங்கள் நட்பு நாளொரு மேனியும் பொழுதொரு வன்னமுமாக வளர்ந்துவந்த நிலையில்,
ஒரு டுவிஸ்ட்...
அன்று வழக்கம்போல அங்கு போயிருந்தபோது...
"புல்டோசர்" ஒன்று அந்த நீர்நிலையில் மண்ணைப்போட்டு மூடிக்கொண்டிருந்தது.
" இந்த இடம் பைபாஸ் ரோட்டை ஒட்டி இருக்குதுள்ள அதான் இங்க பெட்ரோல் பங்க் வருது சார்"
ஓட்டுநர் இதைச் சொல்லிவிட்டு ரிவர்ஸ் எடுக்க, நம் நினைவுகளும் ரிவர்ஸ் எடுத்தது.
சரி...இந்த சோடி எங்கே போயிருக்கும்? வேறு இடம் தேடிப் போயிருக்குமா? இல்ல இவி்ங்க அடிச்சி சைட்டிஸ் ஆக்கிருப்பானுங்களா? மில்லியன் டாலர் கேள்விகளுடன் அவற்றை ஒவ்வொரு நீர்நிலைகளாகத் தேட ஆரம்பித்தோம். அவை கண்ணில் படாமல் நம்பிக்கை இழந்திருந்த வேலையில்தான்...
இன்று நாகமங்கலம் அருகிலுள்ள ஒரு பள்ளியின் நிகழ்ச்சியை முடித்துவிட்டு திரும்பிவரும் வழியில் சாலையின் இடப்புறமுள்ள ஒரு சிறிய, நீர்த்தேங்கிய குளத்தின் நடுவே இரண்டு பறவைளைக் கண்டவுடன் வண்டியை ஓரமாக நிருத்திவிட்டு, கேமராவில் ஜூம் செய்துப் பார்த்தால்...
அதே சோடி...
அது மகிழ்ச்சியானத் தருணமாக அமைந்தது.
பாலா பாரதி

கம்புட்கோழி

எனது பிள்ளைகளையும் பறவைகளைப் பார்த்தலுக்கு அழைத்துச் சென்றதாலோ என்னவோ அன்று சிறப்பான நாளாக அமைந்துவிட்டது.
அப்புறம் என்னங்க...
சங்க இலக்கியங்களில் நமது புலவர்கள் வர்ணனைச் செய்த பறவையை நேரில் பார்க்கும் வாய்ப்பு எல்லோருக்கும் கிடைத்துவிடுமா என்ன?
தினேஷ்தான் முதலில் அதைப் பார்த்தான்.
"அப்பா..அங்கப் பாருங்க.."
அவன் சுட்டிய திசையில் எனக்கு ஒன்றும் தெரியவில்லை
"அங்க நல்லாப் பாருங்க"
என்ன இருந்தாலும் இளமையான கண்களுக்கும் 'சற்று' வயதான கண்களுக்கும் வேறுபாடு இருக்கத்தானே செய்யும்.
உற்றுப்பார்த்தால் வாய்க்காலின் நடுவிலிருந்த புதரொன்றினுள் அசையும் உருவம் புலப்பட்டது. வீட்டுக்கோழியின் அளவிலும், உடலின் மேற்பகுதி கருப்பாகவும் மார்புப்பகுதி வெள்ளையாகவும் காணப்பட...
அட...நம்ம....கம்புட்கோழி....
கம் என்றால் நீர், புள் என்றால் பறவை. நீரில் வாழும் பறவை எனும் பொருள் அமையுமாறு 'கம்புள்' என அழைக்கப்படுகிறது. இதை சம்பங்கோழியென்றும், கானாங்கோழியென்றும் சில பகுதிகளில் அழைக்கிறார்கள்.
"பழனக் கம்புள் பயிர்ப்பெடையகவும்
கழனி யூரநின் மொழிவ லென்றும்"
ஐங்குறுநூறு - 60
சங்க இலக்கியங்களில் பலவற்றில் கம்புள் என்றே அழைக்கப்படுகிறது.
வெண்மார்புக் கானாங்கோழி (WHITE-BREASTED WATERHEN) எனப் பறவை நூலாரால் அழைக்கப்படும் இவற்றின் முகமும் மார்பும் வெள்ளையாகவும் உச்சந்தலையும் முதுகும் கருஞ்சாம்பல் நிறத்திலும் இருக்கும். கால்கள் பச்சையாகவும் அலகு மஞ்சளாகவும் இருக்கும்.
இவை காலையிலும் மாலையிலும் 'கிரெக்' 'கிரெக்' எனக் கத்திக்கோண்டேயிருப்பதையே "கூப் பெயர்க்குந்து" எனக் கூறியுள்ளனர். ஒரே ஓசையை அடிக்கடி தொடர்ந்து வெளியிடுவதால் "அரிக்குரல்" எனவு அழைக்கப்பட்டிருக்கிறது.
நாட்டு மக்களும் 'சணப்பங்கோழி போல தொண தொணக்கிற' என்று கூறும் வழக்கு சம்பங்கோழியின் இந்தக் குரலைத் தெளிவாகச் சுட்டிக் காட்டுகின்றது.
- பாலா பாரதி