Sunday 31 December 2023

பறவைகள்...பலவிதம்.......கண்டோம் கம்புளை


 எனது பிள்ளைகளையும் பறவைகளைப் பார்த்தலுக்கு அழைத்துச் சென்றதாலோ என்னவோ அன்று சிறப்பான நாளாக அமைந்துவிட்டது. அப்புறம் என்னங்க சங்க இலக்கியங்களில் நமது புலவர்கள் வர்ணனைச் செய்த  பறவையை நேரில் பார்க்கும் வாய்ப்பு எல்லோருக்கும் கிடைத்துவிடுமா என்ன?

தினேஷ்தான் முதலில் அதைப் பார்த்தான்.



"அப்பா..அங்கப் பாருங்க"

அவன் சுட்டிய திசையில் எனக்கு ஒன்றும் தெரியவில்லை

"அங்க நல்லாப் பாருங்க"

என்ன இருந்தாலும் இளமையான கண்களுக்கும் சற்று வயதான கண்களுக்கும் வேறுபாடு இருக்கத்தானே செய்யும்.உற்றுப்பார்த்தால் வாய்க்காலின் நடுவிலிருந்த புதரொன்றினுள் அசையும் உருவம் புலப்பட்டது. வீட்டுக்கோழியின் அளவிலும், உடலின் மேற்பகுதி கருப்பாகவும் மார்புப்பகுதி வெள்ளையாகவும் காணப்பட...

அட...கம்புட்கோழி அல்லவா இது.


கம் என்றால் நீர், புள் என்றால் பறவை. நீரில் வாழும் பறவை எனும் பொருள் அமையுமாறு 'கம்புள்' என அழைக்கப்படுகிறது. இதை சம்பங்கோழியென்றும், கானாங்கோழியென்றும் சில பகுதிகளில் அழைக்கிறார்கள்.

"பழனக் கம்புள் பயிர்ப்பெடையகவும்
கழனி யூரநின் மொழிவ லென்றும்"
                                                                                         ஐங்குறுநூறு - 60

சங்க இலக்கியங்களில் பலவற்றில் கம்புள் என்றே அழைக்கப்படுகிறது.
வீட்டுக்கோழியின் அளவுள்ள, குட்டையான வாலையுடைய இவை நீர்நிலைகளுக்கருகில் புதர்களும் சேறும் கலந்து காணப்படும் இடங்களில் நடமாடும் இயல்பு கொண்டவை. ஆள் அரவம் கேட்டால் புதர்களுக்குள்ளும் கோரைகளுக்குள்ளும் ஒளிந்துகொள்ளும். இவற்றின் கால்விரல்கள் சேற்றிலும் நீர்த்தாவரங்களின் மேலும் நடக்க ஏதுவாக நீளமாக அமைந்திருக்கும்.

வெண்மார்புக் கானாங்கோழி (WHITE-BREASTED WATERHEN) எனப் பறவை நூலாரால் அழைக்கப்படும் இவற்றின் முகமும் மார்பும் வெள்ளையாகவும் உச்சந்தலையும் முதுகும் கருஞ்சாம்பல் நிறத்திலும் இருக்கும். கால்கள் பச்சையாகவும் அலகு மஞ்சளாகவும் இருக்கும்.
நன்றாக நீந்தக்கூடிய இவை புற்புதர்களில் அடிக்கடி ஓசையிட்டுக்கொண்டே இருக்கும். இவை வீட்டுக்கோழிகள், காட்டுக்கோழிகளைவிட சத்தம் எழுப்புகிறவை என சங்கப் புலவர்கள் பதிவு செய்துள்ளனர்.

"மனைக் கோழிப் பைம்பயி ரினனே
கானக் கோழிக் கவர்குரலொடு
நீர்க் கோழிக் கூப் பெயர் குந்து"
                                                                                                          புறம் 395

பறநானூற்றில் நீர்க்கோழிகள் எனக்கூறப்படும் இவை வீட்டுக்கோழிகள் கூப்பிடுவதையும், கானக்கோழிகள் குரலிடுவதையும் ஒப்பிட்டு கானாங்கோழிகள் கூக்குரலிடுவதைப் புலவர் கூறியுள்ளது இங்கு நோக்கத்தக்கது. இவை காலையிலும் மாலையிலும் 'கிரெக்' 'கிரெக்' எனக் கத்திக்கோண்டேயிருப்பதையே "கூப் பெயர்க்குந்து" எனக் கூறியுள்ளனர். ஒரே ஓசையை அடிக்கடி தொடர்ந்து வெளியிடுவதால் "அரிக்குரல்" எனவு அழைக்கப்பட்டிருக்கிறது. நாட்டு மக்களும் 'சணப்பங்கோழி போல தொண தொணக்கிற' என்று கூறும் வழக்கு சம்பங்கோழியின் இந்தக் குரலைத் தெளிவாகச் சுட்டிக் காட்டுகின்றது.

பாலா பாரதி

பறவைகள்...பலவிதம்... உள்ளான் ஐயா


திருச்சி - மதுரை சாலையில் மனிகண்டம் அருகிலுள்ள ஒரு நீர்நிலைக்கருகில் நெடுங்கால் உள்ளான் சோடியை வழக்கமாகப் பார்ப்பேன். ஆரம்பத்தில், சோடியாக இரை தேடிக்கொண்டிருந்த இந்தப் பறவைகளில் ஒன்று என்னைப் பார்த்தவுடன் திடீரென மேலே பறந்து "கீக்கி . . . கீக்கி" என சத்தமாகக் கத்திக்கொண்டே தலைக்கு மேல் வட்டமடிக்கும்.

தினமும் இதே கதைதான் சிலநாட்கள் சென்றவுடன், இவனால் ஆபத்தில்லை என்று உணர்ந்துக்கொண்டு கத்துவதில்லை. போகப்போக நாம் போகும்போது ஒருமுறை ஏறெடுத்துப் பார்த்துவிட்டு இயல்பாகத் தன் வேலையைப் பார்த்துக்கொள்ளும். இப்படியாக எங்கள் நட்பு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்துவந்த நிலையில்,

ஒரு டுவிஸ்ட்...

அன்று வழக்கம்போல அங்கு போயிருந்தபோது...

"புல்டோசர்" ஒன்று அந்த நீர்நிலையில் மண்ணைப்போட்டு மூடிக்கொண்டிருந்தது.

" பைபாஸ் ரோட்டை ஒட்டி இருக்குதுள்ள அதான் பெட்ரோல் பங்க் வருது"

ஓட்டுநர் இதைச் சொல்லிவிட்டு ரிவர்ஸ் எடுக்க, நம் நினைவுகளும் ரிவர்ஸ் எடுத்தது.

சரி...இந்த சோடி எங்கே போயிருக்கும்? வேறு இடம் தேடிப் போயிருக்குமா? இல்ல இவி்ங்க அடிச்சி சைட்டிஸ் ஆக்கிருப்பானுங்களா? மில்லியன் டாலர் கேள்விகளுடன் அவற்றை ஒவ்வொரு நீர்நிலைகளாகத் தேட ஆரம்பித்தேன். அவை கண்ணில் படாமல் நம்பிக்கை இழந்திருந்த வேலையில்தான்...

இன்று நாகமங்கலம் அருகிலுள்ள ஒரு பள்ளியின் நிகழ்ச்சியை முடித்துவிட்டு திரும்பிவரும் வழியில் சாலையின் இடப்புறமுள்ள ஒரு சிறிய, நீர்த்தேங்கிய குளத்தின் நடுவே இரண்டு பறவைளைக் கண்டவுடன் வண்டியை ஓரமாக நிருத்திவிட்டு, கேமராவில் ஜூம் செய்துப் பார்த்தால்...
அதே சோடி...
அது மகிழ்ச்சியானத் தருணமாக அமைந்தது.

பாலா பாரதி

பறவைகள்...பலவிதம்... நீலத் தாழைக்கோழி

நீலத் தாழைக்கோழி அல்லது நீலக்கோழி அல்லது மயில்கால் கோழி 

வீட்டுக்கோழியின் அளவை ஒத்ததும் நீலநிறமான உடலைக்கொண்டதுமான அழகானப்  பறவைகளை நீர்நீலைகளை ஒட்டிய இடங்களில் சோடியாக நிற்பதைக் காணலாம்.  இப்பறவைகள் ஓரளவிற்குப் பறக்கும் திறன்கொண்டவை. சிவந்த நிறக்கால்களைக்கொண்ட இவற்றின் விரல்களிடையே சவ்வு இல்லையென்றாலும் நன்றாக நீந்தக் கூடியவை.
இவற்றின் உணவு நீர்த்தாவரங்கள், சிறு உயிரிகளான தவளை, நத்தை, வாத்துக்குஞ்சுகள் போன்றவை. இவை மற்றப் பறவைகளின் முட்டைகளைத் திருடித் தின்பதிலும் கில்லாடியாம்.

"நீருறை கோழி நீலச் சேவல்
கூருகிர்ப் பேடை வாயா அமூர"



                                                         -  ஐங்குறுநூறு 51

நீரீல் உறைகின்ற நீலச் சேவற்கோழி என்று ஐங்குறுநூறு கூறுகின்றது. இவற்றின் நீண்ட சிவந்த கால்களில் கூர்மையான நகங்கள் உள்ளன. இவற்றை "கூருகிர்" என்கிறார் புலவர். நீர்க்கோழிகளைப் போலவே நீலக்கோழிகளும்  சத்தமிட்டுக்கொண்டே இருக்கும்.
"நீலச்செங்கண் சேவல்" எனப் புலவர்கள் கூறியிருப்பதிலிருந்து இவற்றின் கண்கள் சிவப்பாக இருக்கும் எனப் புலனாகிறதல்லவா?

நீலக்கோழியை ஆங்கிலத்தில் THE PURPLE MOORHEN என்றும் பறவை நூலர் PROPYRIO PROPYRIO எனவும் அழைக்கின்றனர்.


- பாலா பாரதி



பறவைகள்... பலவிதம்...முக்குளிப்பான்


ஏரிகளிலும் குளங்களிலிலும் நீந்திக்கொண்டும் சட்டென்று நீரில் மூழ்கி கண நேரத்தில் மறைந்து வேறொரு இடத்தில் தலைக்காட்டும் பறவையைப் பார்த்திருப்பீர்கள். நீரில் நீந்தி வாழும் இந்தப் பறவை அடிக்கடி நீருக்குள் முங்கி முங்கிக் குளிப்பதால், பெயரே முக்குளிப்பான் ஆகிவிட்டது.

மாலை வேலைகளில் தண்ணீரின் பரப்பில் ஒன்றையொன்று விரட்டிக் கொண்டு 'கிச் கிச்' என்ற ஒலி எழுப்பும். வரிகளை உடைய உடலைப் பெற்றிருக்கும் இவற்றின் குஞ்சுகள் தாய்ப்பறவையின் முதுகில் ஏறி சவாரி செய்யும் காட்சி அழகானது.
முக்குளிப்பான் (Little Gerbe) 

(Tachybaptus ruficollis)  முக்குளிப்பான் என்ற பேரினத்தைச் சார்ந்த குட்டைச் சிறகுடைய வாலில்லாத நீர்ப்பறவை ஆகும். பழுப்பு நிறமும் உருண்டு திரண்ட உடலையும் இவைப் பெற்றுள்ளன. குட்டையான, கூரான அலகைக்கொண்ட வாலற்ற இந்தப் பறவைகள் ஏரிகளிலும் , குளங்களிலும் இணையாகவோ கூட்டமாகவோ காணப்படும். முட்டையிடும் காலத்தில் தலையும் கழுத்தும், அடர்ந்த மாநிறமாகவும், வாயின் அடிப்பாகம் மஞ்சள் நிறமாக மாறும். 




இவை குட்டையான சிறகுகளைப் பெற்றிருப்பினும் நன்றாகப் பறக்கக்கூடியவை.  அவை வாழும் குளத்தில் நீர் வற்றி விட்டால்  தொலைவிலுள்ள மற்றொரு குளத்திற்குப் பறந்து செல்லும்.

இவற்றின் உணவுகள் நீர்ப்பூச்சிகள், புழுக்கள்,  தலைப்பிரட்டைகள்,  தவளைகள்,  நத்தைகள், சிறுமீன்கள் ஆகும்.முக்குளிப்பான்கள் தனது கூடுகளை புற்களாலும், செடிகளாலும், தண்ணீருக்கடியில் மூழ்கி நிற்கும் செடிகளின் மேல்கட்டி மூன்று முதல் ஐந்து முட்டைகள்வரை இடும். இந்திய வாத்தான இதை நீர்ப்புள் எனவும் அழைப்பர்.


பாலா பாரதி

பறவைகள் பலவிதம்...டோடோ பறவையின் சோகக்கதை

பறவைகள் பலவிதம்...
டோடோ பறவையின் சோகக்கதையைக் கேட்கிறீர்களா? டோடோ அல்லது டூடூ என்ழைக்கப்படும் இப்பறவைகள் மொரீஷியஸ் தீவில் மனித நடமாட்டம் இன்றி இருந்த நாட்களில் மிக அதிக அளவில் வாழ்ந்த ஒரு பறவை இனம் ஆகும். சுமார் மூன்றடி உயரமும் 20 முதல் 25 கிலோ வரையான எடையும் கொண்ட இப் பறவை புறா இனத்தைச் சேர்ந்து.


இறக்கையென ஒரு உறுப்பு இருந்தும் பறக்க முடியாத பறவை இது. ஒரு காலத்தில் இந்தப் பறவைக்கு எதிரிகள் யாரும் இருக்கவில்லை. பெருமளவில் வாழ்ந்துவந்த இதன் மாமிசம் உண்ண லாயக்கற்றதாக இருந்ததாம். ஆனாலும் மொரீஷியஸ் வழியே கப்பல்களில் சென்ற மாலுமிகள் அதன் சுருள் சுருளான சிறகுகளுக்காக அவற்றை ஒரு தடி கொண்டு அடித்துக் கொன்றனராம். தன்னை அடிக்க வருகிறானே என்று அந்தப் பறவையும் ஓடித் தப்பிக்காது. அருகில் நின்றிருக்கும் மற்றப் பறவைகளும் ஓடித் தப்பிக்காமல் அசடுபோல் அங்கேயே நின்று கொண்டு வேடிக்கை பார்த்திருக்கும். அடுத்து அதன் உயிர் போகும் என்பது தெரியாது அதற்கு. அதனால்தான் அசடுபோல மந்தமாக இருக்ப்பவர்களுக்கு டோடோ பறவையின் பெயரை வைத்து அழைப்பார்கள். எனது மாணவன் ஒருவனை அவன் நண்பர்கள் டூடூ சரவணன் என்று பட்டபெயருடன் அழைத்ததை கேட்டிருக்கிறேன்.
பின் நாட்களில் மக்கள் அத்தீவில் குடியேறிய போது அவர்களுடன் வந்த பூனை, நாய் போன்ற மிருகங்கள் எஞ்சி இருந்த டோடோக்களை முற்றிலுமாக அழித்தன.
டோடோவின் மறைவு, இத்தீவின் உயிரினங்கள் மனிதரால் எவ்வாறு சீரழிக்கப்பட்டன என்பதைக் காட்டுகின்றது.
இவை அழிந்தபோது அங்கு இருந்த கல்வாரியா மரங்களும பெருமளவில் அழிய ஆரம்பித்தன. இவை அழியும்போது இந்த மரங்களும் ஏன் அழிய வேண்டும். காரணம் இருந்தது.
அக்காரணம்.....
டோடோ பறவை இனம் அழிந்தவுடன் "கல்வாரியா" எனப்படும் மரமும் அழிய ஆரமித்தது..! மரங்கள் அழிவுக்கு காரணம் என்னவென்று பார்த்த போதுதான் ஒரு உண்மை தெரிந்தது டோடோ பறவை கல்வாரியா மரத்தின் பழங்களை விரும்பி உண்ணக் கூடியவை. அவ்வாறு உண்டு, தன் வயிற்றில் செரித்து வெளியேறும் கழிவுகளில் கலந்து விழும் விதைகள் மட்டுமே அந்த மரத்தை முளைக்க வைக்கும் தன்மை கொண்டது..
மனித மண்டையோட்டைப்போல் கடினமான உறையுடைய விதைகளைக் கொண்ட இந்த மரத்தின் பழங்களை டோடோ தின்றுவிட்டு கொட்டைகளைத் துப்புவது வழக்கம். டோடோக்களின் வயிற்றினுள் புகுந்து வந்த கல்வாரியா விதைகள் மட்டுமே முளைக்கும்திறன் பெற்றவையாக இருந்தது. வேறு எந்த விதத்திலும் அந்த விதையை முளைக்க வைக்க முடியவில்லை..! 


இப்படியொரு ஆச்சரிய உறவு பறவைக்கும், மரத்திற்கும் இருந்திருக்கிறது.
பிற்காலத்தில் வான்கோழிகளுக்கு இம்மரப் பழங்களைச் சாப்பிட கொடுத்து, அதன் விதைகளில் சில முளைப்புத் திறனைப் திரும்பப் பெற்றன. அதனால் இப்போது அம்மரங்கள் டோடோ மரங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
100 ஆண்டுகளுக்குள் முற்றிலுமாக அந்த இனமே அழிக்கப்பட்டது! கடைசி பறவையும் 1681 இல் இறந்தது..!!
இன்று உலகிலேயே இரண்டு பதப்படுத்தப்பட்ட டோடோ பறவைகள்தான் உண்டு. ஒன்று மொரிஷியஸ்ஸின் தலைநகரிலுள்ள அருங்காட்சியகத்தில். இரண்டாவது நியூயார்க் இயற்கை வரலாற்றியல் அருங்காட்சியத்திலுள்ளது.
இரண்டுமே ஏற்கனவே கிடைத்த எலும்புக்கூகளை வைத்து உருவாக்கியது. எல்லா எலும்புகளும் கிடைத்திருந்தாலும், டோடோவின் நிறம் என்ன, இறகுகள் எவ்வாறு அமைந்திருந்தன என்பது பற்றிய குறிப்பேதுமில்லாமல் அருங்காட்சியகத்தினர் திண்டாடிக் கொண்டிருந்போது சற்றும் எதிர்பாராத இடமொன்றிலிருந்து செய்தி ஒன்று வந்தது, லெனின்கிராடிலிருந்து, அங்குள்ள உலகப்புகழ்பெற்ற ஹெர்மிடாஷ் எனும் அருங்காட்சியத்திலுள்ள மொகலாய சிற்றோவியம் ஒன்றில் டோடோ பறவை தீட்டப்பட்டுள்ளது. இது சாம்பல் நிறப் பறவை என்பது தெரிய வந்தது.
இந்திய சிற்றோவியம் ஒன்றில் இப்பறவை இடம்பெற்றது எப்படி? மொகலாய மன்னர் ஒருவருக்கு பிரஞ்சு அதிகாரி அல்லது வணிகர் ஒருவரால் பரிசாக அளிக்கப்பட்ட ஒரு டோடோ பறவை மொகலாய சக்ரவர்த்தியின் பூங்காவில் விடப்பட்டிருந்தது. அதை ஒரு ஓவியர் வரைய, அவ்வோவியம் ரஷ்யா போய்ச் சேர்ந்துவிட்டது. இந்த ஓவியத்தின் அடிப்படையில்தான் இரண்டு டோடோ பறவைகள் மீள் உருவாக்கம் செய்யப்பட்டன.
சரி, இன்று டோடோவை சந்தித்தேன்
என்று குறிப்பிட்டேன் அல்லவா அது இன்று திருச்சி கோளரங்கத்திற்கு சென்றிருந்தேன், அங்கு டோடோவின் மாதிரியை செய்து வைத்திருந்தனர். அதைத்தான் குறிப்பிட்டேன்.


நன்றி
பாலா

பறவைகள் வலசை போதல்

பறவைகளிடமுள்ள வினோதங்களில் இடம்பெயர்தல் என்ற வலசை போதல் அதாவது ஒவ்வொரு வருடமும் ஒரு பருவ காலத்தில் இடம் பெயர்ந்து வாழ்தல் ஆகும்(Bird Migration). 

 

இடம் பெயர்வது என்றால் ஒன்றோ இரண்டோ அல்ல. வித விதமான பறவைகள் கோடிக் கணக்கான எண்ணிக்கையில் இடம்பெயரும். அவ்வாறு இடம் பெயர்வதற்காக பறவைகள் பறக்கும் தூரம் சில நூறு மைல்களில் இருந்து பல ஆயிரக் கணக்கான மைல்கள் வரை.



இடம்பெயர்தல் என்றால் நாம் ஒரே ஊரில் அல்லது ஒரே நாட்டில் வீடு மாறுவது போல் அல்லாமல் வட துருவப் பிரதேசத்திலிருந்து தென் துருவப் பிரதேசம் வரை இடம்பெயர்கின்றன. பல பறவைகள்சுமார் 10,000மைல்களிலிருந்து 14,000 மைல்கள் தூரத்திற்கு பறக்கின்றன. அது அந்தப் பறவைகளால் கடும் குளிரினைத் தாங்க முடியாமல் போவதால் அல்லபோதுமான அளவு உணவு கிடைக்காததாலும் இனப்பெருக்கம் செய்வதற்காகவும்தான்.

  
பறவைகள் இடம் பெயர்தல் குறித்து பல ஆராய்ச்சிகள் நடத்தப் படுகின்றன. அவற்றால் பல வியப்பான உண்மைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.   பறவைகளுக்கு வளயம் அல்லது காப்புப் போடுதல்(Bird ringing or banding) மூலமாக அவற்றின் நடமாட்டம் கவனிக்கப்படுகிறது.


பறவைகளைப் பிடித்து அதன் காலிலோ இறக்கையிலோ அலுமினியம் அல்லது ப்ளாஸ்டிக்கினால் ஆன காப்பினைமாட்டி விடுவர்.  அந்தக் காப்பில் ஒரு எண்ணும் காப்பினை மாட்டியவரின் முகவரியோ தொலைபேசி எண்னோ இருக்கும்.


இப்போதெல்லாம் பறவைகளின் உடலில் மிக நுண்ணிய மின் அலை பரப்பியினைப் பொருத்தி அதிலிருந்து எழும் மின்அலைகளை தரையில் உள்ள மின்அலை வாங்கி நிலயங்களின் மூலமோ அல்லது செயற்கைக் கோள்களின் மூலமோ கிடைக்கப் பெற்று அந்தப் பறவை உள்ள இடம், பறக்கும் உயரம், வேகம் போன்ற தகவல்கள் துல்லியமாகக் கண்டறியப்படுகின்றன.

நாமெல்லாம் பக்கத்து ஊருக்கு போனாலே கையில் முகவரியை வைத்துக்கொண்டு போகிற வருகிறவர்களையெல்லாம் டார்ச்சர் கொடுப்போம் இல்லையா? ஒரு ஆலா செய்த வேலையைப் பாருங்கள்.

பிறந்து சில நாட்களேயான ஆலா குஞ்சு ஒன்று கண்காணிக்கப்பட்டது. காப்பு போடப்பட்ட இந்த ஆர்டிக் ஆலா இங்கிலாந்தின் கிழக்குக் கரையில் இருந்து கிளம்பியது. மூன்று மாதங்களில்  14,000 மைல்கள் கடந்து ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்னை அடைந்தது.

நம்ம கல்பொருக்கியின் கதையை கேளுங்கள்.




இதுவரை வலசை போகும் போது உலகிலேயே அதிக தூரம் சுமார் 4,800 கிலோமீட்டர்கள் ஒரே மூச்சில் நிற்காமல் பறந்து சாதனை செய்திருக்கிறது கல் பொறுக்கி என்று தமிழ் நாட்டில் அழைக்கப் படும் கோல்டன் ப்ளோவர் (Golden Plover) ஆகும். 
இந்தப் பறவைக்கு கல் பொறுக்கி என்ற பெயர் ஏன் வந்தது தெரியுமா?  இது தரையில் உள்ள சிறு கற்களைத் தள்ளி அதனடியில் கிடைக்கும் புழு பூச்சிகளைத் தின்னும் இது கோல்டன் ப்ளோவர்(GOLDEN PLOVER) என்றும் அழைக்கப்படுகிறது.


நீண்டதூரம் பறந்து சாதனைப்புரிந்து முதல் இடத்தில் இருந்த கல் பொருக்கியை தோற்கடித்தது நம்ம 'மூக்கான்'. தமிழ்நாட்டில் மூக்கான் என அழைக்கப் படும் GODWIT பறவை இந்த சாதனையை எவ்வாறு புரிந்தது எனப்பாருங்கள்.                                                                                   

நியூசிலாந்தின் வடக்குத் தீவில் உள்ள மிராண்டா எனும் இடத்திலிருந்து  2007 இல் கிளம்பிய பெண்மூக்கான் ஒன்றின் உடலில் சிறிய ரேடியோ மின் அலைபரப்பி பொருத்தப்பட்டது.
E-7 என்று பெயர் கொடுக்கப்பட்ட இதன் போக்குவரத்து செயற்கைக் கோள் மூலம் கண்காணிக்கப்பட்டது.                  



 மார்ச் 17ஆம் தேதி மிராண்டாவிலிருந்து கிளம்பிய மூக்கான் எங்கும் தரையிறங்காமல் 6,300 மைல் தூரத்தில் சீனாவில் உள்ள 'யாலு ஜியாங்' என்ற இடத்தை 8 நாட்களில் அடைந்தது. பின், 5 வார ஓய்வுக்குப் பின் அங்கிருந்து கிளம்பிய மூக்கான்  நாட்களில் 4,500 மைல் தூரத்தில் உள்ள மேற்கு அலாஸ்காவின் யூகான்-குஷாக்வின் முகத்துவார பிரதேசத்தை அடைந்தது.  இந்த இடம் தான் அது இனப் பெருக்கம் செய்யும் இடம்.
பின்னர் ஆகஸ்ட் 29ஆம் தேதி கிளம்பி வேறு பாதயில்  7,200 மைல் தூரம் ஒரே மூச்சில் பறந்து எட்டரை நாட்களில் நியூசிலாந்தின் மிராண்டாவை அடைந்தது. அதாவது கிளம்பிய இடத்துக்கு வந்து சேர்ந்தது.





 மூக்கான்களை கோடியக்கரையில் நவம்பர் முதல் பிப்ரவரி வரை காணமுடியும்.
(நன்றி :கல்பட்டு நடராஜன்)

நன்றி

பாலா பாரதி



Friday 29 December 2023

பூமன் ஆந்தை | BROWN FISH OWL

              பூமன் ஆந்தை இனத்தைச் சேர்ந்த பறவை. இதை ஊமைக் கோட்டான் என்றும் அழைப்பார்கள். ஊமைக் கோட்டான் கண்களை மூடாது உற்றுப் பார்ப்பதைக் கண்டு, விடை கூறாமல் முறைத்துப் பார்க்கும் மனிதனுக்குப் பெயராக்கினர். இம்முறையாகப் பயமுறுத்துவதற்கு ஊமாண்டி காட்டுதல் என்ற வழக்கும் உள்ளது.

 "ஏன்டா இப்படி ஊமக்கோட்டான் மாதிரி முழிக்கிற?"

என்ற வழக்கைக் கேட்டிருப்போம். ஊமைக் கோட்டானைக் கூமன் என்றும் அழைப்பர். இப்போது பூமன் என்றும் அழைக்கின்றனர். ஊமன் கோட்டான் ஊமக்கோட்டான் ஆனது போல கூமன் பூமன் ஆகியிருக்க வேண்டும். சங்க இலக்கியத்தில் ஆந்தையினத்தில் ஐந்து வகைகள் கூறப்பட்டுள்ளன. அவை கூகை, குரால், குடிஞை, ஊமன், ஆண்டலை என்பவையாகும். ஆந்தை அல்லது கோட்டான் என்பது இந்த இனத்திற்கானப் பொதுப் பெயர்களாகும். பூமனுக்குத் தலையில் இரு கொண்டைகள் இருக்கும் இவற்றை வைத்து இதனை அடையாளம் காணலாம். ஊமனை ஆங்கிலத்தில் BROWN FISH OWL என்றும் பறவை நூலார் BUBA ZEY LONENSIS LESCHENAULT என்றும் அழைக்கின்றனர்.

“சிறுகூகை யுட்கவிழிக்க வூமன் வெருட்ட”

-மூத்த திருப்பதிகம், காரைக்காலம்மையார். 2-3

காரைக்காலம்மையாரின் மூத்த திருப்பதிகத்தில் ஊமன் என்ற பெயர் ஊமைக் கோட்டான் என்ற இந்தப் பெரிய ஆந்தையையே குறிப்பிட்டுள்ளதைக் கவனிக்க வேண்டும். இதை ஊமத்தங் கூகை என்றும் நாட்டுமக்கள் அழைப்பர். ஊமடங்குருவி, ஊமத்தங்கோழி என்றும் அழைப்பதுண்டு. இந்த ஊமன் என்ற பேராந்தையைக் கடற்கரையோரங்களிலும் நீர் நிலையருகிலும் மரச்சூழலில் காணலாம். மீன்களை மட்டுமே உணவாக உட்கொள்ளும் இந்தப் பேராந்தை ‘ஊம்-ஊம் என்று குரலோசை செய்வதால் இதற்கு ஊமன் என்று பெயரிட்டனர். ஊமன் கூவுவதைத் கிராமங்களில் நல்ல சகுனமாகக் கருதுவதுண்டு. ஊமன் கூவினால் குழந்தையைத் தாலாட்டக் கூவுவதாகவும், குழந்தை பிறக்கும் என்றும் நம்பும் வழக்கமும் காணப்படுகிறது.

                                                        - பாலா பாரதி
May be an image of hawk and owl
All reactions:
Rajagopal Venkatachalam, Ashok Renu and 120 others

பனங்காடை | Indian Roller

     மின்கம்பியின் மீதோ, வேலிகற்களின் மீதோ, இலைகளில்லா கிளைகளிலோ தனித்தோ, இணையாகவோ அமர்ந்து சுற்றிலும் நோட்டம் விட்டபடி இருக்கும் நீலநிற பனங்காடையை நாம் பார்த்திருப்போம். இதை ‘காடை' என்றும் ‘பாலக்குருவி’ என்றும் அழைப்பர்.புறா அளவில் இருக்கும் இப்பறவை இறகு விரித்துப் பறக்கும்போது பளீரென்ற நீலநிறத்துடன் தெரியும். உற்சாக 'மூடில்' இருக்கும் ஆண் பறவை திடீரென உயரப் பறந்து, பின் இறக்கையை மடித்துக் கொண்டு தலை கீழாக 'சர்....' என்று விழுந்தும், சுற்றிப் பறந்தும் பெருத்த ஆரவாரம் செய்து பெண்பறவைக்கு விளையாட்டுக் காட்டும். பூச்சிகள், வண்டுகள், ஓணான்கள், சிறு பறவைக் குஞ்சுகள் முதலியனவற்றை உணவாகக்கொள்ளும். இவற்றின் வண்ணச் சிறகுகளே இவற்றிற்கு ஆபத்தாக அமைந்தது. முன்பு இச்சிறகுகள் மேனாட்டுச் சீமாட்டிகள் உடைகளை அலங்கரிக்க வேட்டையாடப்பட்டன. இவை சுடப்பட்டு அவற்றின் நீலச் சிறகுகள் ஏற்றுமதி செய்யட்டன. தற்போது யாரும் பனங்காடையை வேட்டையாடுவதில்லை. பனங்காடையைப் பார்த்தால் நல்ல சகுனம் என்று ஒரு நம்பிக்கையும் உண்டு. பனங்காடை கர்நாடகா, தெலுங்கானா, ஒடிசா, ஆகிய மாநிலங்களின் ‘மாநில பறவை’ என்பது மேலும் சிறப்பு.

        பனங்காடை | Indian Roller | Karattampatti, Trichy | Dec' 23
                                                        - பாலா பாரதி
May be an image of kingfisher
All reactions:
Ashok Renu, Raveendran Natarajan and 45 others