Wednesday 28 December 2016

செம்மார்பு குக்குறுவான்

செம்மார்பு குக்குறுவான் | COPPERSMITH BARBET | உய்யகொண்டான் கால்வாய், திருச்சி | நவம்பர்'16
நீங்கள் ஆலமரம் ஒன்றின் கீழ் அமர்ந்திருந்தால், இக்குருவியைப் பார்த்திருக்க முடியாவிட்டாலும் இதன் அந்த 'குக்' 'குக்' குரலைக் கேட்டிருப்பீர்கள்.
சிட்டுக்குருவியின் அளவில் உடல் பச்சை நிறத்திலும் மார்பும் உச்சந்தலையும் சிவப்பு நிறத்திலும் இருக்கும். மரத்தின் உயரமான கிளையில் உட்கார்ந்துக்கொண்டு 'குக் குக் குக்' என சளைக்காமல் சத்தம்போட்டுக் கொண்டிருக்கும்.
இது மரத்தை 'டொக் டொக்' என்று தட்டுவது கொல்லர்கள் வேலை செய்யும்போது வரும் ஒலியைப்போன்று இருப்பதால் இதை 'COPPERSMITH BARBET' என்றழைப்பர்.
- பாலா பாரதி






கொண்டைக் குயில் | சுடலைக் குயில்

இசையை அருந்தும் சாதகப்பறவை போல நானும் வாழ்கிறேன்...."
கொண்டைக் குயில் | சுடலைக் குயில் | Pied Cuckoo | Koothappar Trichy | Nov'16
மழை வருவதை முன்கூட்டியே இப்பறவையின் வருகை அறிவிப்பதாக ஒரு நம்பிக்கை உள்ளது. இந்தியாவில் பருவமழை பரவப்பரவ இந்தப் பறவை இந்தியா முழுவதும் புலம்பெயரும். இதனால்
இந்தப் பறவை வந்துப் பாடித்தான் மழைபொழிகிறது என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்க வேண்டும்.
வடமொழி இலக்கியங்களில் இது சாதகப் பறவை எனக் கூறப்பட்டுள்ளது. இது தலையை மேலே உயர்த்தி அலகை விரித்தவாறு வானத்தையே பார்த்து வைராக்கியமாக, வேறு எந்த நீரையும் குடிக்காது மழை நீரை மட்டுமே குடிக்கும் என்று விவரிக்கப்பட்டுள்ளது. மேலும் அவற்றுக்கு தாகம் ஏற்பட்டால் வானத்தைப் பார்த்துப் பாடுவதாகவும் அப்போது வானமே இரங்கி மழையை அனுப்புவதாகவும் பாடப்பட்டுள்ளது.
மற்றப் பறவைகளைப் போலவே இந்தப் பறவையும் நீர்நிலைகளில் இருந்துதான் நீரை அருந்தும். வெறும் மழைநீரை குடித்தோ இசையைக் கேட்டோ வாழ்வதில்லை. அப்படி வாழவும் முடியாது.
- பாலா பாரதி



மஞ்சள் குருகு

நெஞ்சை எடுத்து நெருப்பினில் வைத்து ...
போனவன் போனான்டி ... ஹோய்
நீரை எடுத்து நெருப்பை
அணைக்க...
வந்தாலும் வருவான்டி...
ஹோய்..."
மஞ்சள் குருகு |Yellow Bittern | உய்யகொண்டான் கால்வாய், திருச்சி | Nov'16
சங்ககாலத்தில் மிக நுணுக்கமான முறையில் பதிவு செய்யப்பட்ட பறவைகளுள் இதுவும் ஒன்று.
கபிலரின் குறுந்தொகைப் பாடலில்:
“யாரும் இல்லை; தானே கள்வன்;
தான் அது பொய்ப்பின், யான் எவன் செய்கோ?
தினைத்தாள் அன்ன சிறுபசுங் கால
ஒழுகுநீர் ஆரல் பார்க்கும்
குருகும் உண்டு தான் மணந்த ஞான்றே!”
(குறு – 25)
பிறரறியாமல் தலைவனும் தலைவியும் காதலிக்கின்றனர். ஊரறிய மணம் செய்துகொள்ள நினைக்கின்றாள் தலைவி. ஆனால், தலைவனோ, மணம் புரியக் காலம் நீட்டிக்கின்றான். தலைவிக்கோ, மனதில் குழப்பம். காதலித்தவன் ஒருவேளை தன்னை கைவிட்டு விட்டால் என்ன செய்வது? என்று!
இப்படிப் பதறுகின்ற பெண்ணின் இயல்பான புலம்பலைப் பதிவு செய்திருக்கின்றார் புலவர்.
“நான் அவனுடன் கூடிய அந்நாளில் தினைச்செடியின் அடித்தாள் போல் சிறிய மென்மையான கால்களைக் கொண்ட, ஓடும் நீரில் ஆரல்மீனை பார்த்ததுபோல நின்ற குருகும் அருகே இருந்தது”
இதில் சுவையான செய்தி மறைந்துள்ளது. புதர்களின் ஓரம் மறைந்திருக்கும் இப்பறவையைப் பார்ப்பது சற்று கடினமே. வயல்களிலேயே நடமாடுகிறவர்களுக்குக்கூட அவ்வளவு எளிதில் தென்படாது. கூச்ச சுபாவம் மிக்கது. நாணல்களுக்குள் ஒளிந்து உட்கார்ந்திருக்கும்.
இந்த கண்ணில் படுவதற்கே அபூர்வமான பறவை ஒன்றே எங்கள் காதலுக்கு சாட்சி எனக் காதலியின் கூற்றில் துயரம் மறைந்துள்ளது.
-பாலா பாரதி



பொன்முதுகு மரங்கொத்தி

" நீ முன்னாலே போனா நான் பின்னாலே வாரேன்... "
பொன்முதுகு மரங்கொத்தி | Black-rumped flameback | Trichy | Oct'16
மற்ற பறவைகளைப் போலில்லாமல் இவற்றிற்கு முன்புறம் இரண்டும் பின்புறம் இரண்டும் விரல்கள் இருக்கும். இதனால் இவற்றால் மரங்களில் மேலும் கீழுமாக இயங்க முடியும்.
- பாலா பாரதி




தகைவிலான்

"தலையில்லாமல் ஒரு குருவியால் இருக்கமுடியுமா?"
தகைவிலான் | Barn Swallow |கொட்டப்பட்டு குளம், திருச்சி |நவம்பர்'16

சிட்டுக்குருவியின் அளவுள்ள இக்குருவிகள் பெரும்பாலும் பறந்துக்கொண்டேதான் இருக்கும், சில நேரங்களில் சாலையோரங்களில் மின்கம்பிகளில் கூட்டமாக உட்கார்ந்திருக்கும். இவற்றின் வால் இரண்டாகப் பிளந்து கம்பிபோல் நீட்டிக்கொண்டிருப்பதை வைத்து இவற்றை இனம் காணலாம்.
இந்தியாவின் வடபகுதியிலிருந்து ஆகஸ்ட், செப்டம்பரில் வலசை வரத்தொடங்கும் இவை ஏப்ரல், மே மாதத்தில் திரும்பிச்சென்றுவிடும்.
ஆங்கிலத்தில் Swallows என அழைக்கப்படும் இவை தகைவிலான், தலையில்லாக் குருவி, தம்பாடி என பல பெயர்களால் அழைக்கப்படுகின்றன.
எப்போதும் பறந்துகொண்டே பூச்சிகளைப் பிடித்துக்கொண்டு இருப்பதால் தரையில் இல்லாத குருவி எனும் பொருள்படும்படி 'தரைநில்லா குருவி' என அழைக்கப்பட்டு பின்பு அப்பெயர் 'தலையில்லா குருவி' என மாறியிருக்க வேண்டும்.
ஐரோப்பாவில் இக்குருவிகள் மிகவும் பிரபலம். ஐரோப்பியர்கள் இவற்றை "தங்கள் பறவை" (Our Bird) என பெருமையுடன் அழைக்கின்றனர்.
நம்ம மக்கள் இக்குருவியைப்பற்றி என்ன கூறுகிறார்கள் எனத் தெரிந்துகொள்ள நானும், இவற்றைப் படமெடுக்கும்போது அருகில் ஒரு வீட்டில் இருந்தவர்களைக் கேட்டேன,
"அதோ அந்த கம்பியில ஒக்காந்திருக்கே அந்த குருவியப் பத்தி சொல்லுங்களேன்."
"அதா சார்...அது ரொம்ப டேஸ்டா இருக்கும், வீட்ல சின்ன புள்ளங்களுக்கு சளி புடிச்சுச்சின்னா இதபுடிச்சி சூப்பு வெச்சி குடுத்தா சட்னு சரியாயிரும், மத்தபடி ரொம்ப நல்ல குருவி சார்..."
- பாலா பாரதி











பொறி உள்ளான்

"காகித ஓடம் கடலலை மீது
போவது போலே மூவரும் போவோம்...
அழுவதை கேட்க ஆட்களும் இல்லை...
அம்மா எங்களை அழைத்திடு தாயே..."
பொறி உள்ளான் | Wood Sandpiper | Trichy | Oct'16
நீர்நிலைகளின் ஓரமாக புறாவைவிட சிறிய அளவிலானப் பறவை தனது வாலை ஆட்டியவாறு தலையை மேலும் கீழும் அசைத்துக்கொண்டு புழு, பூச்சிகளைப் பிடிப்பதைப் பார்த்தீர்கள் என்றால் அதுதான் 'உள்ளான்'. உள்ளான் என்பது பொதுப்பெயர்.
பொதுவாக இவற்றின் அலகுகள் சேற்றில் இரைதேடுவதற்கு ஏதுவாக இருக்கும். பெரும்பாலும் நீர்நிலைகளின் ஓரங்களில் சிறிய முதுகெலும்பிகள், மண் புழுக்கள் போன்றவைகளை உணவாக உட்கொள்கின்றன.
ஐரோப்பா, ஆசியா கண்டங்களின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து இங்கு குளிர்காலத்தில் வலசை வருகின்றன.
- பாலா பாரதி


மஞ்சள் வாலாட்டி



மஞ்சள் வாலாட்டி | Yellow Wagtail | Kottappattu Tank | Trichy | Nov'16
மெலிதானஅழகிய உடலமைப்பும், நீண்ட மெல்லிய வாலை அடிக்கடி ஆட்டிக்கொண்டே நீர் நிலைகளின் கரைகளில், சதுப்பு நிலங்களில், புல்வெளிகளில் சிறு பூச்சிகளை, புழுக்களைத்தேடி உணவாக உட்கொள்ளும் குருவிகளைப் பார்த்திருப்பீர்கள். இவை வாலாட்டிக் குருவிகள்(Wagtails) ஆகும்.
இவற்றில் பெரும்பாலானவை மழைக்காலத்தில் வலசை வருபவை. வெள்ளை, மஞ்சள், சாம்பல் ஆகிய நிறங்களில் வாலாட்டிக் குருவிகள் காணப்படுகின்றன.
- பாலா பாரதி




Tuesday 27 December 2016

சாம்பல் நாரை

நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே....
நீங்களெல்லாம்
சொப்பனந்தானோ? ...
பல தோற்ற மயக்கங்களோ? ..."
சாம்பல் நாரை | Grey Heron | மணிகண்டம் திருச்சி | Dec'16
நீருக்கு அருகாமையில் வாழும் இப்பெரிய பறவையினம் உயரமாகவும், மெல்லிய நீண்ட வளைந்த கழுத்துடனும், நீண்ட கால்களுடனும் இருக்கும்.
இவை கருநாரை, நாராயணப் பட்சி, நரையான் பெருங்கொக்கு, சாம்பல்கொக்கு எனவும் அழைக்கப்படுகின்றன.
நீண்ட நேரம் அசைவின்றி ஆழமற்ற நீரில் நின்றுகொண்டு மீன் வேட்டையாடும். மீன், தவளை, பாம்புகள்,பல்லிகள், சிறுபாலூட்டிகள் ஆகியவை இவற்றின் உணவுப் பட்டியலில் உள்ளன.
இறக்கைகளை வேகமாக அடித்துக்கொள்ளாமல் மெதுவாக பறக்கும் இயல்புடைய இவை பறக்கும் போது ஆங்கில எழுத்தான "S" வடிவில் கழுத்தை மடித்து வைத்துக்கொண்டு பறக்கும்.
- பாலா பாரதி

ஊதாத் தேன்சிட்டு

வான் பறந்த தேன்சிட்டு நான் புடிக்க வாராதா..."
ஊதாத் தேன்சிட்டு | Purple Sunbird | Kottapattu Tank Trichy |Nov'16
தேன்சிட்டு உலகின் சிறிய வகை பறவை. மலர்களிலிருந்துத் தேனை எடுத்து உண்ணும் எனினும் குஞ்சுகளுக்கு உணவளிக்கும் போது மட்டும் சிறு பூச்சிகளை வேட்டையாடும். மிகவும் வேகமாக பறக்கும் தன்மையும் ஓரிடத்தில் நிலையாகப் பறக்கவும் திறனும் கொண்டது.
இவற்றின் அலகு மலர்களில் உள்ள தேனை எடுப்பதற்கு ஏற்றவாறு நீண்டதாய் வளைந்திருக்கும். இயற்கை இப்பறவைகளுக்கு தேனை உறிஞ்சுவதற்காக அவற்றின் அலகை இப்படி வடிவமைத்துக் கொடுத்துள்ளது.
ஆண் தேன்சிட்டுகள் ஆபரணங்களைப் போல மின்னும் வண்ணங்களை உடலில் கொண்டிருக்கும். பெண் தேன்சிட்டுகளின் நிறம் ஆண் தேன்சிட்டுகளைவிட பழுப்பாக இருக்கும்.
இவை வலசை வராத பறவையினமாக இருந்தாலும் பூக்களைத்தேடி சிறிது தூரம் பயணம் செய்யும் இயல்புடையன.
- பாலா பாரதி


ஊர் தேன்சிட்டு

"சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு ஒரு சிறகு முளைத்தது ..."
ஊர் தேன்சிட்டு | Purple-rumped Sunbird | Koothappar Trichy | Nov'16
ஆண்சிட்டுகளின் இறக்கைகள் ஊதா நிறத்திலும், வயிற்றுப் பகுதி மஞ்சள் நிறத்திலும், பெண்சிட்டுகள் முழுவதும் மாம்பழ நிறத்திலும் இருக்கும்.
இந்தச் சிட்டுகள் நமது வீட்டுக்கு விருந்தாளியாக வரவேண்டும் என்றால், வீட்டைச் சுற்றி பூக்கள் உள்ள மரம், செடிகள் இருந்தால் போதும். குறிப்பாக செம்பருத்திப் பூக்களைத் தேடி இவை வருவதுண்டு. செம்பருத்தி போன்ற செடிகளை சிறிய இடத்திலேயே நம்மைச்சுற்றி எளிதாக வளர்க்கலாம்.
தேன் சிட்டுகள் பூக்களில் மாறி மாறி அமர்வதால் மகரந்தச் சேர்க்கைக்கு பெரிதும் உதவுகின்றன.
நம் உள்ளங்கை அளவே உள்ள தேன் சிட்டு எந்த விளம்பரமும் இல்லாமல் எவ்வளவு வேலைகள் செய்கிறது பாருங்கள் நண்பர்களே !
- பாலா பாரதி






செந்நாரை

அங்கே நாரை கூட்டம்
செம்மீன் தேடுதே...
இந்நேரம்..."
செந்நாரை | Purple Heron | Kottappattu Tank Trichy | Nov'16
செந்நிறத்திலிருக்கும் இந்த உயரமாக பறவைகள் நீர்நிலைகளைச் சார்ந்தவையாகும்.பல மணி நேரங்கள் அசைவின்றி ஆழமற்ற நீரில் சிலைபோல நின்றுகொண்டு மீன்பிடிக்கும். மீன்கள்,பாம்புகள், பல்லிகள், சிறு பாலூட்டிகள், சிறு பறவைகள் ஆகியவை இவற்றின் உணவுப்பட்டியலில் உள்ளன.
இவை கூட்டம் கூட்டமாக கோரைப்புற்கள் மீது கூடுகட்டும் பழக்கமுடையவை, எனவே இவைகளுக்கு சதுப்புநிலம் போன்ற பெரிய நீர்நிலைகள் தேவைப்படுகின்றன.
- பாலா பாரதி


கூம்பழகன்

ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா...
கண்ட பின்னே உன்னிடத்தில் என்னை விட்டு வீடுவந்தேன்..."
கூம்பழகன் | Rosefinch


குங்குமப் பூச்சிட்டு

"பாட்டு சொல்லி பாட சொல்லி குங்குமம் வந்ததம்மா...
கேட்டுக் கொள்ள கிட்ட வந்து மங்கலம் தந்ததம்மா
குங்குமமும் மங்கலமும் ஒட்டி வந்த ரெட்டை குழந்தையடி...
குங்குமப் பூச்சிட்டு | Orange minivet | Cinnar | Dec'16
குங்குமப் பூச்சிட்டு இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் பரவலாகக் காணப்படும் குருவி வகைகளில் ஒன்று ஆகும். காட்டில் வாழும் இடம்பெயராக் குருவி இது.
- பாலா பாரதி


நீலச்சிட்டு

Asian fairy-bluebird | நீலச்சிட்டு | Cinnar | Dec'16
"நீலக்குயிலே சோலைக்குயிலே...
பாடிப்பறக்கும் என் பாட்டு குயிலே.."


செண்டு வாத்து

"பூவே பூச்சூட வா எந்தன் நெஞ்சில் பால் வார்க்க வா..."
செண்டு வாத்து | Comb Duck | கூந்தன்குளம் | Dec'16
அண்மையில் கூந்தன்குளத்திற்கு சென்றபோது சென்டுவாத்துகளைப் பார்த்தோம். வாத்து இனத்தைச் சேர்ந்த இந்த நீர்வாழ் பறவைகள் ஆப்பிரிக்கா, மடகாஸ்கர், சீனா, பாகிஸ்தான், இந்தியா போன்ற நாடுகளில் காணப்படுகின்றன.
ஆண் பறவைகளுக்கு அலகிற்கு மேலே செண்டு போன்ற அமைப்பு காணப்படுவதால் இவை 'செண்டு வாத்துகள்' என அழைக்கப்படுகின்றன (A curious fleshy knob or comb on base of bill at forehead).பெண் பறவைகளுக்கு செண்டு இருக்காது.
தமிழ் இலக்கியங்களில் இவை 'பூணி' எனக் குறிக்கப்பட்டுள்ளன.
"கருங்காற் குருகுங் கம்புள் கழுமிப்
பெரும்பூட் பூணியும் பேய்வாய்க் கொக்கும்...."
-பெருங்கதை 68 - 72
பூணி, கம்புள் என்பன இறந்த வழக்கென்பார் நச்சினார்க்கினியர். ஆனால் பூணி என்ற பெயர்தான் மறைந்துவிட்டதே தவிர அப்பறவைகள் இன்னும் வேறு பெயர்களில் நம்முன் நட(ன)மாடிக்கொண்டுதான் இருக்கின்றன.
சூட்டுகிளுவை, இரப்பர்மூக்கு தாரா, மூக்கன் தாரா என வட்டாரப் பெயர்களாளும் அழைக்கப்படுகின்றன.
- பாலா பாரதி







பொன்மாங்குயில்

ஓ பொன்மாங்குயில் சிங்காரமாய்
பொன்மாங்குயில் சிங்காரமாய்பண்பாடுதே..."


கருந்தலை மாங்குயில் |Black-hooded Oriole | Cinnar | Dec'16
மஞ்சள்நிற உடலையம் கறுப்புநிற இறக்கைம் கொண்ட வீட்டுக் குருவியை விட சற்றுப் பெரியபறவை. இது மாமரத்தில் காணப்படுவதாலும், மாம்பழம் போல் மஞ்சளாய் இருப்பதாலும் மாங்குயில், மாம்பழச்சிட்டு, மாம்பழக்குருவி என ழைக்கப்படுகிறது.
இதன் இறக்கை, வால் ஒரங்கள் கரிய நிறத்துடன் இருக்கும் இக் குருவியின் அலகு இளச்சிவப்பு நிறத்துடனும், கண்களையும் சிவப்பாகவும் காணப்பபடும். ஆல், அத்தி, அரசு போன்றவற்றின் பழங்களையும் பூச்சிகளையும் விரும்பி உண்ணக்கூடியது. இந்தியா, இலங்கை, இந்தோனேசியா ஆகிய தெற்காசியப் பகுதிகளில் காணப்படும் இதன் குரல் இனிமையாக இருக்கும்.
- பாலா பாரதி


பட்டாணிக் குருவி

"தேங்கா...மாங்கா...பட்டாணி... சுண்டல்..."
பட்டாணிக் குருவி | Great Tit | Cinnar | Dec'16
உங்கள் தோட்டத்தில், கருப்பு வெள்ளை நிறத்தில், சிட்டுக்குருவி அளவுள்ள , நீண்ட வாலையுடைய குண்டுப் பறவை சுறுசுறுப்பாக இங்கும் அங்கும் இரை தேடுவதைப் பார்த்திருக்கிறீர்களா?
ஆம் என்றால் அது 'டிட்' என்ற பறவையினத்தைச் சேர்ந்த இந்த பட்டாணி குருவியாக இருக்கும். கருப்புத் தலை, குட்டிக் கழுத்து, வெள்ளைக் கன்னம் கொண்ட, குருவியின் அலகைப்போல குட்டையான அலகுகைக் கொண்ட இப்பறவைகள் ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள், ஆசியா மற்றும் வட அமெரிக்காவில் அதிகம் காணப்படுகின்றன.
ஆலிவ் பச்சை நிறத்தில் உடலின் மேற்புறமும் மஞ்சள் நிறத்தில் வயிற்றுப் பகுதியும் இருக்கும். புழு, பூச்சிகளையும் குட்டி வெளவால்களையும் விரும்பிச் சாப்பிடும். சிறிய பொந்து போன்ற இடங்களில் கூடு கட்டும். மரப் பொந்துகளிலும் வசிக்கும் இப்பறவைகள் மனிதர்களோடு சேர்ந்து வாழத் தெரிந்தவை. அதனால் பூங்காக்களிலும் வீட்டுத் தோட்டங்களிலும் இவறைப் பார்க்கலாம்.
- பாலா பாரதி

Thursday 22 December 2016

வெண்தொண்டை மீன்கொத்தி

"விச்சிலி, சிச்சிலி, ரசகலி...."

வெண்தொண்டை மீன்கொத்தி | White Breasted Kingfisher | Trichy | Nov16

மீன்கொத்திகள் உலகம் முழுவதும் பரவலாகக் காணப்படும் பறவையினமாகும். பெரியதலை, நீண்டகூரிய அலகு, குட்டைக்கால்கள், சிறியவால், எடுப்பான நிறம் என மீன்கொத்திகள் நம்மை கவர்ந்திழுக்கும். மீன்கொத்திகளில் மூன்று குடும்பங்கள் உள்ளன. அவை
ஆற்று மீன்கொத்தி, மரமீன்கொத்தி, நீர் மீன்கொத்தி என வகைப்படுத்தப்பட்டுள்ளன.
மீன்கள் மட்டுமின்றி, சிறியதவளை, புழு, பூச்சிகள் ஆகியனவற்றையும் தங்கள் கூரிய அலகால் கொத்திப்பிடிக்கும் இப்பறவைகள், தாங்கள் கைப்பற்றிய இரையை மரத்திலோ பாறையிலோ அடித்துக் கொன்ற பிறகே உண்ணும் தன்மை கொண்டவை.
மீன்களைத்தான் அதிகம் உண்ணும் என்றாலும்,தவளை ,ஓணான், மண்புழு, சிலந்திகள், சில சந்தர்ப்பங்களில் சிறிய பாம்புகளையும் உண்ணும். விருப்ப உணவு என்னவோ மீனும், வெட்டுக்கிளியும் தான். பொதுவாக, சிக்கலற்ற, எந்த இடர்ப்பாடும் இல்லாத பிரதேசங்களில் இரையை வேட்டையாட விரும்புகிறது.
வெண்தொண்டை மீன்கொத்தி, வெண்மார்பு மீன்கொத்தி எனவும் அழைக்கப்படுகிற இதற்கு விச்சிலி, சிச்சிலி என்ற பெயர்களும் உண்டு.
மார்புப்பகுதி வெள்ளையாக இருப்பது இவற்றை மற்ற மீன்கொத்திகளிலிருந்து வேறுபடுத்தி காண உதவுகிறது.

- பாலா பாரதி

சிறிய மீன்கொத்தி

"சிறிய பறவை சிறகை விரிக்கத் துடிக்கிறதே...
சிறகை விரித்து நிலவை உரச நினைக்கிறதே..."

சிரல் | சிறிய மீன்கொத்தி | Oriental Dwarf Kingfisher | Vaduvoor | Dec'16 |


மஞ்சள் நிறமான அடிப்புறமும் நீல நிறமான முதுகுப்புறமும் உடைய சிறிய அளவிலான ஒரு பறவை நீர்நிலைகளுக்கருகில் உயரம் குறைவான மரங்களிலும் குச்சிகளிலும் உட்கார்ந்துகொண்டு நீர்ப்பரப்பை நெடுநேரம் நோக்கியிருந்து திடுமெனப் பாய்ந்து நொடிப்பொழுதில் வெள்ளி மீனைச் செம்பொன் அலகில் கௌவிச் செல்லும் காட்ச்சியைப் பார்த்திருப்பீர்கள். இந்த சிறிய மீன்கொத்திப் பறவையைத்தான் சங்கஇலக்கியங்களில் 'சிரல்' என்று அழைத்தனர்.
சங்க காலத்தில் இந்தப் பறவையைக் கண்ட புலவர்கள் மிக அழகாக வர்ணித்துள்ளார்கள். நீலமும் பச்சையும் கலந்த நிறமுடைய மீன்கொத்தியாதலால் நீலமணிக்கு ஒப்பிட்டுச் சங்க நூல்கள் கூறும் ‘மணிச்சிரல்’ (பெரும்பாண்.314)
‘மணி நிறச் சிறு சிரல்’ என்று அழைக்கப்படுகின்றது. இதன் உடல் அழகிய நிறங்களுடன் கூடி இருத்தலையும் குறிப்பிட்டுள்ளனர்.

“வளிசினை யுதிர்த்தலின் வெறிகொள்பு தாஅய்ச்
சிரற்சிற கேய்ப்ப வறற்கண் வரித்த
வண்டு ணறுவீ துமித்த நேமி.”
- அகம். 324

காற்று வலிமையுடன் அடித்தலால் பல நிறப் பூக்கள் மணலில் வரித்திருப்பது மீன் கொத்தியின் சிறகுகள்போல இருந்ததாகக் கூறியதைக் காணலாம்.
இம்மீன்கொத்தியின் உடலில் நீலம், பச்சை, சிவப்பு ஆகிய மூன்று நிறங்களும் இருப்பதைக் காணலாம். இதன் அலகு சிவப்பாக இருப்பதை அழகிய உவமையால் விளக்கியுள்ளனர்.

“படுமழை பொழிந்த பாறை மருங்கில்
சிரல்வா யுற்ற தளவிற் பரலவற்.” - நற்றிணை.61
“பனிவளர் தளவின் சிரல்வாய்ச் செம்முகை
ஆடு சிறைவண் டழிப்ப.” - ஐங்குறுநூறு.447

செம்முல்லை என்றழைக்கப்படும் தளவின் அரும்பு நீண்டு சிவந்த கூர்மையாக இருக்கும். அதுபோன்று சிரலின் வாய் இருந்ததாகப் புலவர்கள் உவமையாகக் கூறுவது சுவையானது.
மீன் கொத்தியின் சிவந்த வாயை அலகைக் கருதியே பிற்காலத்தில் ‘பொன் வாய்ப்புள்’ என்று பெயர் தந்தனர். தட்டான் பூச்சியைப் போன்று நீர் நிலைகள்மேல் பறந்துகொண்டிருப்பதால் பொன் வாயையுடைய தட்டான் எனும் பொருள்படும்படி 'பொன்னாந்தட்டான்’ என்றும் மக்கள் இவற்றை அழைப்பதும் நோக்கத்தக்கது.
திருக்கள்ளியின் நுனியில் காணப்படும் முள்ளோடு கூடிய சதைப்பற்றான உருண்டையான முறுக்கின தண்டு ஏறக்குறைய மீன் கொத்தியின் தலையைப் போன்று தொலைவில் பார்ப்போருக்குத் தோன்றும் இதையே ‘சிரல்தலைக்கள்ளி’ என்று நற்றிணை கூறியது.
மீனைப் பிடிக்க நீர் நிலையில் செல்லும்போது ‘சிச்சி’ ‘சிச்சி’ என்று அடிக்கடி ஓசையிட்டுச் செல்லும். இந்த ஓசையின் காரணமாகவே ‘சிச்சிலி’ என்ற பெயரும் வழங்களாயிற்று.

- பாலா பாரதி


ஆள்காட்டி

"காட்டிக் கொடுத்தது...நீயா...இல்லை...நானா..."

கணந்துள் | ஆள்காட்டி | Lapwings | Trichy | Dec'16

பறவைகளைப் பார்க்கப் போகும்போது நான் பயப்படுவது இப்பறவைக்குத்தான். தொலைவிலேயே நம்மைப் பார்த்து எச்சரிக்கை அடையும் இந்த ஆள்காட்டிகள் குறிப்பிட்ட தொலைவு நெருங்கியவுடன் பெருங்குரலில் 'Did you do it? ...Did you do it?'... என்று கத்திக்கொண்டே பறந்து மற்ற பறவைகளுக்கு நமது வரவை அறிவித்துவிடும். பிறகென்ன பறவைகளை நாம பார்கிறோமோ இல்லையோ பறவைகளெல்லாம் நம்மைப் பார்த்துக்கொண்டிருக்கும்.
இதன் காரணமாக இந்தப் பறவையை வேட்டையாளர்கள் வெறுப்பர். ஜிம்கார்பெட் என்ற வேட்டையாளர் விலங்குகளுக்கு வேட்டையாளரைக் காட்டிக் கொடுக்கும் பறவைகளில் ஒன்றாக இந்த ஆள் காட்டியைக் குறிப்பிட்டுள்ளார். குரங்குகள், மயில்கள், காரிக்குருவிகளும் இத்தகைய பழக்கமுடையன என்று கூறுகிறார்.
இது இதனுடைய குரலால் இவ்வாறு எச்சரிக்கை செய்யும் செயல்

"ஆற்றிய லிருந்த இருந்தோட டஞ்சிறை
நெடுங்கால் கணந்துள் ஆளறி வுறீஇ
ஆறசெல் வம்பலர் டைதலை பெயாக்கும்"
- மலையுடைக் கானம்
(குறுந்தொகை 350)

இவை கூடுகட்ட அதிக முயற்சி எடுத்துக்கொள்வதில்லை. தரிசு நிலத்தில் சரளைக் கற்களைவட்டமாகக் குவித்து முட்டையிடும்.
இங்கு ஆள்காட்டிக் குருவியில் இருவகைகள் காணப்படுகின்றன. அண்மையில் பழுப்புநிற ஆள்காட்டி காணப்பட்டதாகச் செய்தியும் உள்ளது. கண்ணைச் சுற்றி மஞ்சள்நிறத் தோலைக் கொண்டவை மஞ்சள் மூக்கு ஆள்காட்டி (Yellow Wattiled Lapwing) என்றும் கண்ணைச்சுற்றி சிவப்புத் தோலை உடைய ஆள்காட்டி குருவியைச் சிவப்பு மூக்கு ஆள்காட்டி (Red Wattiled Lapwing) என்றும் அழைப்பர்.
பொதுவாக, மஞசள் மூக்கு ஆள்காட்டி வறட்சியான திறந்த வெளிகளிலும் கற்பாங்கான நிலத்திலும், சிவப்பு மூக்கு ஆள்காட்டி நீர்நிலைகளுக்கு அருகாமையிலும் காணமுடியும்.
இத்தகைய மற்ற பறவைகளின் உற்ற தோழனாக விளங்கும் ஆள்காட்டிக் குருவிகளுடன் பழகிய நாட்டுமக்கள் தங்களுடைய இன்ப துன்பங்களைக்கூட ஆள்காட்டிக் குருவியின் மேலேயேற்றிப் பாடிய அருமை, அழகு போற்றத்தக்கது.

“ஆக்காட்டி ஆக்காட்டி ஆவரம்பூ ஆக்காட்டி
எங்கே எங்கே முட்டையிட்டே
கல்லுத் துளைத்துக் கடலோரம் முட்டையிட்டேன்
இட்டது நாலுமுட்டை பொரித்தது மூணுகுஞ்சு
மூத்த குஞ்சுக் கிரைதேடி மூணுமலை சுற்றி வந்தேன்
இளைய குஞ்சுக் கிரைதேடி ஏழுமலை சுற்றி வந்தேன்
பாத்திருந்த குஞ்சுக்குப் பவளமலை சுற்றி வந்தேன்.
புல்லறுத்தான் புலவிற்குக் காய்தின்னப் போகையிலே
மாயக் குறத்திமகன் வழிமறித்துக் கண்ணி வைத்தான்
காலிரண்டும் கண்ணியிலே சிறகிரண்டும் மாரடிக்க
நானழுத கண்ணீரும் என்குங்சழுத கண்ணீரும்
வாய்க்கால் நிறைந்து வழிப்போக்கா கால்கழுவிக்
குண்டு நிறைந்து குதிரைக் குளிப்பாட்டி
இஞ்சிக்குப் பாய்ஞ்கு இலாமிச்சுக்கு வேரூண்டி
மஞ்சளுக்குப் பாய்ஞ்சு மறித்துதாம் கண்ணீரே”

இந்த நாட்டுப்பாடல் உணர்ச்சியை வடித்தெடுத்து உருவாக்கிப் பாடிய பாட்டு. இதை வெவ்வேறு ஊர்களில் சிறிய மாற்றங்களுடன் பாடக் கேட்டிருக்கிறேன். ஆள்காட்டி தன்துயரைக் கூறுவதாக இப்பாடல் அமைக்கப்பட்டிருந்தாலும். மக்கள் தங்கள் பாடுகளை நினைத்துப் பாடுவார்கள் போலுள்ளது, அவ்வளவு உருக்கம்.
சில இடங்களில் இவற்றை 'அக்காண்டி' எனக் கூறக்கேட்டிருக்கிறேன். இவை ‘இட்டி..இட்டி..’ என்று விட்டுவிட்டு ஒலிப்பதால் இதை ‘இட்டி இட்டிக் குருவி’ என்று மலையாளத்தில் அழைப்பராம்.

- பாலா பாரதி

வெண்புருவ வாலாட்டி

"வாடி ராசாத்தி... புதுசா... இளசா... ரவுசாப் போவோம்
வாடி வாலாட்டி... வரியா... புலியா... தனியா திரிவோம்..."

வெண்புருவ வாலாட்டி | White-Browed Wagtail | Trichy | Dec'16

நம் வீட்டருகே வாலை ஆட்டியவாறு வீச், வீச், வீச் என்று குரல் கொடுத்து உங்கள் கவனத்தை நிச்சயம் இவை கவர்ந்திருக்கும். இவை மற்ற வாலாட்டிக் குருவிகளைவிட சற்று பெரியதாகவும், கருஞ்சிட்டு போல கறுப்பும் வெள்ளையும் கலந்து இருக்கும். இவற்றின் கண் இமை வெண்மையாக இருக்கும். இவை அழகாகப் பாடக்கூடியவை.
பொதுவாக இடம் பெயராத இப்பறவைகள் இரண்டு அல்லது மூன்றாகச் சேர்ந்து அங்குமிங்கும் ஓடித் திரிந்து பூச்சி, புழுக்களை தேடித் தின்னும். நீர்நிலைகளின் கரைகளில் கிடக்கும் கற்களின் மீது சுறுசுறுப்பாக இரை தேடிக்கொண்டிப்பதைக் காணலாம். மேலும் புல்தரை, சதுப்பு நிலம் போன்ற இடகளில்கூட இச்சிறிய குருவிகளைக் காணலாம்.
தன் நீண்ட வாலை நொடிக்கொருமுறை மேலும் கீழும் ஆட்டுவது அங்கு மறைந்துள்ளப் பூச்சிகளை வெளிக்கொணரவே. இப்பறவைகள் தாழ்ந்தெழுந்து பறக்கும். இவை நீரருகில் செடி மறைவில் தட்டு போன்று புல், வேர், குச்சிகள், துணித் துண்டுகள் போன்றவற்றைக் கொண்டு கூடு கட்டும். பொதுவாக இவற்றை நாம் எல்லா இடங்களிலும் காணலாம். நம்நாட்டில் ஏழுவகையான வாலாட்டிகள் காணப்படுகின்றன.

- பாலா பாரதி

காட்டுக் கோழி

"கூவும் கோழி இங்கே வா...
கூவி எழுந்திடச் சொல்லித்தா..."

காட்டுக் கோழி | Junglefowl | Masinakkudi | Nov'16

காட்டுக் கோழிகள் சத்தமாக கத்தும் இயல்புடையவை. இவை அடர்ந்தக் காட்டுப்பகுதியில் காணப்படும். கானக் கோழி என்றும் அடவிக்கோழி என்றும் இதை அழைப்பதுண்டு. இவை நாம் வளர்க்கும் வீட்டுக்கோழியின் அளவே இருக்கும்.
கம்பீரமாகக் காணப்படும் இவற்றின் கொண்டைப் பகுதியும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் தங்க நிறத்திலும், ஆண் சேவலின் வால் பகுதி வளைந்த அரிவாள் போலவும் காணப்படும். சேவல் வெண்புள்ளி கரும்புள்ளி தெளித்த சாம்பல் நிறமாகக் கறுப்பு வால் கொண்டிருக்கும். கழுத்தின் மயிர் போன்ற சிறகுகள் மிக அழகாகக் காணப்படும். பெட்டை மேற்பக்கம் சாம்பல் நிறத்துடன் இருக்கும்.
இவை எப்போதும் தனது ஜோடியுடனேயே காணப்படும். தனது இணையைத் தேடி இவை போடும் சத்தம் தனித்தன்மையுடன் இருக்கும். அதனால், எந்த இடத்தில் காட்டுக் கோழிகள் உள்ளன என்பதை தொலைவில் இருந்தே அறிந்து கொள்ளலாம்.
ஒரு கூட்டத்தில் ஓர் ஆண் சேவல் மட்டுமே இருக்கும். இந்த கூட்டத்திற்குள் மற்ற சேவல் ஏதேனும் நுழைந்துவிட்டால் அவை சண்டையிடும். இச்சண்டை இரண்டில் ஒன்று கொல்லப்படும்வரை தொடரும்.
இவை லண்டானா எனப்படும் உண்ணிச் செடிகளின் பழங்களைச் சாப்பிடுவதால் அவற்றின் கொட்டைகளை அதிக அளவில் பரப்பி இக்களைகள் அதிகரிப்பிற்கு காரணமாக அமைகின்றன.
இவை தரைவாழ் பறவைகளாக இருந்தாலும் மரங்களில் வசிக்கும் காலங்களில் அந்த மரங்களிலுள்ள பூச்சிகளை உண்டு மரங்கள் ஆரோக்கியமாக இருப்பதற்கு மறைமுகமாக உதவுகின்றன.
இவற்றின் இறைச்சிக்கு மருத்துவக் குணம் உள்ளது என்று யாரோ கிளப்பிவிட்ட புரளியால் இவை அதிக அளவில் கொல்லப்பட்டிருக்கின்றன. நம் வீட்டுக்கோழி வகைகள் இக்காட்டுக் கோழியிலிருந்து உதித்தவையே.
- பாலா பாரதி


பஞ்சுருட்டான்

"காக்கா காக்கா மை கொண்டா...
காடைக் குருவி மலர் கொண்டா...
பச்சைக் குருவியே பழம் கொண்டா...
கல்லைக் கையால் தொட மாட்டேன்...
தொல்லை ஏதும் தர மாட்டேன்...
சொல்லால் செயலால் உங்களுக்கே
நல்லன எல்லாம் செய்திடுவேன்..."

பஞ்சுருட்டான் | Green Bee Eater | Cinnar | Dec'16
இவை அளவில் சிறியதாக இருந்தாலும் அழகில் சிறந்தவை. மரகதம் போன்ற பசுமை நிற உடலையும் மஞ்சள்நிற தலையையும் கொண்டிருக்கும். இரண்டு வாற்சிறகுகள் மற்றவையினும் நீண்டு காணப்படும். வேலிகளிலும், தந்திக் கம்பிகளிலும் உட்கார்ந்துகொண்டு சுற்றுமுற்றும் பார்த்திருக்கும் இவற்றின் கண்களிலிருந்து சிறு பூச்சியும் தப்ப முடியாது.
தீடீரெனப்பறந்து பூச்சியைப்பிடித்துவிட்டு மீண்டும் அதே இடத்தில் வந்து அமர்ந்துகொள்ளும். இவை மணற்பாங்கான கரைகளில் மணலில் பள்ளம் பறித்து முட்டையிடும். முட்டையிடாத காலங்களில் மாலையில் கூட்டமாக ஒரு புதர்களில் அடையும். அப்போது இவைகளின் சிறு குரல்கள் சேர்ந்து ஒலிப்பது தூரத்தில் சிறு மணிகள் ஒலிப்பதுபோலிருக்கும்.

- பாலா பாரதி

பட்டைத்தலை வாத்து

பறவைகள் பலவிதம் - பட்டைத்தலை வாத்து
"பாத்தேன் பட்டைத் தலையனை"
பட்டைத்தலை வாத்து | Bar-headed Goose | Karaivetti Birds Sanctuary | De'16
அரியலூரிலிருந்து 15 கி.மீ தொலைவில் உள்ள கரைவெட்டி பறவைகள் காப்பகம் தமிழ்நாட்டிலேயே மிகப்பெரிய பறவைகள் காப்பகமாகும். இங்கு ஆண்டுதோறும் உலகின் பல பகுதிகளில் இருந்தும் பறவைகள் வருகின்றன.

கரைவெட்டிக்கு மத்திய ஆசியாவிலிருந்து பட்டைத்தலை வாத்துகள் வலசை வந்துள்ளன. அவற்றைப்பார்க்க போயிருந்தோம். ஆக்சிஜன் மிகவும் குறைவாக இருக்கும் இமயமலையைக்கூட கடக்கும் இந்த ஆற்றல்மிக்க பறவைகள் பார்ப்பதற்கு கொள்ளை அழகு.
வெண்நிறத்தில் வீட்டுவாத்தின் அளவில் காணப்படும் இவற்றின் பிடரியில் காணப்படும் இரு கரும்பட்டைகளை வைத்து இவற்றை அடையாளம் காணலாம்.
கோடைகாலத்தில் மலை ஆறுகளில் வசித்து அங்குள்ள சிறு புல் பூண்டுகளை உண்டு வாழும் இவை மத்திய ஆசிய நாடுகளான மங்கோலியா, கஜகஸ்தான், மேற்கு சீனா, இந்தியாவில் லடாக், திபெத் ஆகிய இடங்களில் இனப்பெருக்கம் செய்கின்றன. குளிர்காலத்தில் இங்கு வலசை வருகின்றன. அதிக உயரத்திலும் குறைவான ஆக்சிஜன் உள்ள இடங்களையும் எளிதாகப் பறந்து கடக்கவல்ல பரிணாம வளர்சியைப் பெற்றுள்ளன.
- பாலா பாரதி