Wednesday 3 January 2024

பேர்ட் வாட்ச்சிங் மேன் வாட்ச்சிங்கான கதை

 பேர்ட் வாட்ச்சிங் மேன் வாட்ச்சிங்கான கதை தெரியுமா?


இந்தப் பறவைங்களப் பத்தி படிக்கிறோமே ஒரு எட்டு அதுகங்ள நேராப்போய் பாத்துருவோமேன்னு பேர்ட் வாட்ச்சிங் கிளம்பும்போது நம்ம வாட்ஸ்அப் குழு நண்பர்கள் ஞாபகத்தில் வந்தாங்க. எங்க போனாலும் தனியாவே போறீங்களே சொன்னா நாங்களும் வரமாட்டமான்னு ரொம்ப உரிமையா கோவிச்சிக்கிறாங்களே இந்த தடவை அவங்களயும் கூட்டிப் போகலாம்னு யோசனை வந்துச்சு.

ஞாயிற்றுகிழமை போறதா திட்டம் போட்டு பேர்ட் வாட்ச்சிங் வர்ரவங்க காலைல 6 மணிக்கு வந்துரங்கன்னு மெசேஜ் போட்டேன். சரி கொஞ்சப் பேராவது வருவாங்ன்னு நம்பிக்கையில இருந்தால் கடைசியில ஒருத்தரும் வரலை. சரி போகாம லீவுப் போட்டுரலாம்னு யோசிச்சா, வீட்டுக்காரம்மா போறேன்னு சொனீங்களே போகலியான்னு கேட்டு நம்மை அனுப்புறதிலேயே குறியா இருக்க ஒரு வழியா தன் முயற்ச்சியில் சற்றும் மணம் தளராத விக்ரமாதித்தன் ரேஞ்சுக்கு தோளில வேதாளத்துக்குப் பதிலா கேமராப் பையை தூக்கிப் போட்டுக்கொண்டு கிளம்பினேன். இதுல ஒருத்தர் போன் பன்னி போங்க பின்னாடியே வர்ரேன்னு சிரிக்காம, போகிற இடத்தக்கூட கேக்காம, அங்க வந்திடரேன்னு சொல்லி நம்ம மெர்சலாக்கிட்டார். சரி பின்னாடி வர்ரேன்னு சொன்னாறேன்னு நானும் திரும்பி திரும்பி பாத்துக்கிட்டே போனேன்.


பறவைகலெல்லாம் மரத்துல கும்பலா ஓக்காந்துருக்கும் நாமெல்லாம் அதுங்களப் பாத்துக்கிட்டே போகலாம்னு கற்பனையோட இருந்தேன்.
அன்னிக்கின்னு பாத்து நெறய பறவைங்க மரத்துல ஒக்காந்திருந்தன. நான் போனவுடன் எல்லாம் அதுங்க வேலைய நிறுத்திட்டு எல்லாம் சேந்தமாதிரி திரும்பி பாத்தன. எனக்கு ஒருமாதிரியாயிருச்சி. சரி போட்டாவாவது எடுக்கலாமேன்னு கேமராவ எடுத்தா , இதுல கேமரா வேறயான்னு கேக்குறமாரி சில பறவைங்கப் மொறைக்க, கடைசில என்னா ஆச்சின்னா பறவைங்லெல்லாம் சேர்ந்து மேன் வாட்ச்சிங் பன்னிருக்குங்க.

...பாலா





பறவைகள் பலவிதம்...செங்குறிச்சி

 


பறவைகளைப் பார்க்க திருச்சி மதுரை சாலையிலுள்ள செங்குறிச்சி எனும் ஊரிலுள்ள குளத்திற்கு 28-02-16 அன்று சென்றிருந்தேன். அதிகாலையில் அந்தக் குளத்தையும் அங்கு வந்திருந்தப் பறவைகளையும் பார்த்தது மகிழ்ச்சியாக இருந்தது.
இப்போதுதான் பறவைகளைப் பார்க்க ஆரம்பித்துள்ளேன். புத்தகங்களில் படங்களாகப் பார்த்த பறவைகளை நாமே நேரடியாகக்கண்டு அடையாளம் தெரிந்து கொள்வது உண்மையில் மகிழ்ச்சியான தருனங்கள்தான்.
கொக்கு, நாரை, சம்பக்கோழி, நீர்வாத்து, நீர்காகம், முக்குளிப்பான், அக்காண்டி முதலிய பறவைகளை குளத்திலும். கரிசான் குருவி எனப்படும் ரெட்டைவால் குருவி, மைனா முதலிய பறவைகளை கரைகளிலும் காணமுடிந்தது. 
கிராம மக்களிடம் இருக்கும் பறவைகளைப்பற்றிய அவர்களின் அறிவு வியப்பானது. அங்குக் காணப்பட்ட எல்லா பறவைகளும் அங்கிருந்த அனைவராலும் தனித்தனியாக இணம்காணமுடிகிறது. வயல் வேளைக்குக் கையில் கூடைப்பையுடன் சென்றப் பெண்கள் தொலைவில் தண்ணீரில் கொக்குககளுக்கிடையே நின்றுக்கொண்டிருந்த பறவைகளைக்காட்டினார்கள். வெள்ளை உடல் , கருமையான இறக்கை, நீண்ட கால்களுடன் காகம் அளவிற்கு இருந்த அந்தப் பறவையை அவர்கள் அக்காண்டி என்றழைக்கின்றனர். அக்காண்டி என்ற இப்பெயர் அவர்கள் பயன்படுத்தும் உள்ளுர் பெயர் எனத்தெரிகிறது. அக்காண்டியபத்தி ஒரு பாட்டு இருக்கு பாடவா என்றுக் கேட்டவாறு குழுவாகப் பாட ஆரம்பித்தனர்.

"அக்காண்டி அக்காண்டி
எங்கெங்கே முட்டயிட்ட
கலயத்துல முட்டையிட்டு
இட்ட முட மூனுமுட்ட
பொரிச்சது நாலு குஞ்சு"

அவர்கள் பாட பாட. அக்காண்டிக்குருவி அவர்களின் வாழ்வியலோடு கலந்திருப்பதை உணரமுடிகிறதல்லவா?
மூனுமுட்ட நாலு குஞ்சு என்பது விடுகதைப் போல ஒன்று.
இவர்களின் பாட்டுக்கு எதிர்பாட்டுப்பாடும் அக்காண்டியின் பாட்டைக் கேட்ட என் கண்ணில் கண்ணீர் திரையிட்டதை மறைக்க முயன்றுத்தோற்றேன்.

"நாலு குஞ்சுக்கு எரதேடி நாடெல்லாம் போய்வந்தேன்
மூனு குஞ்சுக்கு எரதேடி முக்காலமும் போய்வந்தேன்
ரெண்டு குஞ்சுக்கு எரதேடி ரேகமெல்லாம் போய்வந்தேன்
கடைசி குஞ்சுக்கு எரதேடி காடெல்லாம் போய்வந்தேன்
மாயகொறத்தி மவன் வழி மறிச்சி
கண்ணி வச்சான்
காலு ரெண்டும் கண்ணிக்குள்ள
எறகு ரெண்டும் மாரடிக்க
நா விட்ட கண்ணீரு குண்டுகுழி ரொப்பி
குதுர குளுப்பாட்டி ஆன குளுப்பாட்டி
நா விட்ட கண்ணீரு நார்தக்கு பாஞ்சி
எலுமிச்சக்கு பாஞ்சி மஞ்சக்கு பாயயில
மடக்குனு போனதம்மா அம்மாவோட உசிரு"

குருவி பாடுவதைப்போல இப்பாடலை அவர்கள் அமைத்திருந்தாலும் உண்மையில் இது அவர்களின் துயரத்தை, அவரவர்களின் பாடுகளை நினைத்துப் பாடுவதாகத்தான் உள்ளது.

...பாலா





Tuesday 2 January 2024

பறவைகள்... பலவிதம்...நீர்க்காகங்கள்

 

                        சென்றமுறை பறவைகள் பார்த்தலின்போது மிகவும் மகிழ்ந்தேன். 
காரணம் ...
                     ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்ப் புலவர்கள் கண்ட காட்சியை, அவர்கள் சங்க இலக்கியங்களில் பதிவு செய்த காட்சிகளை இப்போது நாம் நேரடியாகக் காணும்போது மகிழ்வது இயற்கைத்தானே!

ஆமாம்...

திருச்சி உய்யகொண்டான் வாய்க்காலில் பறவைகளைப் படமெடுத்துக்கொண்டிருந்தபோது நீர்க்காகங்களின் செயல்பாடுகளைக் காணநேர்ந்தது. பெரியக் கூட்டமாக இல்லையென்றாலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக நீரில் மூழ்கி இரைத் தேடிக்கொண்டிருந்தன.

நீரில் மூழ்கி மீனுடன் வெளியேவரும் அவை அலகிலுள்ள மீனை அப்படியே நேரடியாக விழுங்காமல், அப்படியே மேலே தூக்கிப்போட்டு தலைப்பகுதி முதலில் உள்ளே போகுமாறு விழுங்குவதைக் கண்டபோது, சங்க புலவர்கள் விவரித்தக் காட்சி நினைவில்வர, மீண்டும் அவற்றைப் படிக்க வாய்ப்புக் கிட்டியது.
இந்நீர்க்காகங்கள் சிலப்பதிகாரத்திலும் கம்பராமாயணத்திலும் நீர்க் காக்கைகள் என்று அழைக்கப்படுகின்றன. கம்பராமாயணத்தில் நீர்க் காக்கையினத்தில் காணப்படும் இருவகைகளும் கூறப்பட்டுள்ளன.

“ஒழுகு சாற்றகன் கூனையின் ஊழ்முறை
முழுகி நீர்க்கருங் காக்கை முளைக்குமே”
“எவ்வம் ஓங்கிய இறப்பொடு பிறப்பு இவை என்னக்
கவ்வு மீனெடு முழுகுவ எழுவன கரண்டம்.”

LITTLE CORMORANT என்றழைக்கப்படும் நீர்க்கருங் காக்கை சிலஇடங்களில் கடற்காக்கை என அழைக்கப்படுகின்றன. ‘நீர்க்காகம்’ என்றழைப்பதே சரியானது. இதுபோன்றே இருக்கும் மற்றொரு பறவை INDIAN SHAG கம்பராமாயணத்தில் ‘கரண்டம்’ என்று அழைக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு பறவைகளும் உடல் முழுவதும் கருப்பு நிறமானவை. நீரில் மூழ்கி நீருக்கடியில் நீந்தி மீனைத் துரத்திப் பிடிக்கும். பின்னர் அலகில் மீனொடு எழும்பும். கம்பரும் அழகாக நீர்க்கருங்காக்கை முழுகி முளைக்கும் என்றும்

‘கரணடம் முழுகுவ, கவ்வு மீனொடு எழுவ’
என்றும் கூறியுள்ளார். அப்பரும் தேவாரத்தில்
‘கரண்ட மலி தடம்பொய்கை காழியர்கோன்’
கரண்டி போன்ற மூக்குள்ளதால் கரண்டம் என்ற பெயர் வந்திருக்கலாம்.


பாலா பாரதி