Tuesday, 28 August 2018

நெடுங்கால் உள்ளான்

திருச்சி - மதுரை சாலையில் மணிகண்டம் அருகிலுள்ள ஒரு நீர்நிலைக்கருகில் நெடுங்கால் உள்ளான் சோடியை வழக்கமாகப் பார்ப்போம். ஆரம்பத்தில், சோடியாக இரை தேடிக்கொண்டிருந்த இந்தப் பறவைகளில் ஒன்று நம்மைப் பார்த்தவுடன் திடீரென மேலே பறந்து "கீக்கி . . . கீக்கி" என சத்தமாகக் கத்திக்கொண்டே தலைக்கு மேல் வட்டமடிக்கும்.
தினமும் இதே கதைதான் சிலநாட்கள் சென்றவுடன், இவனால் ஆபத்தில்லை என்று உணர்ந்துக்கொண்டு கத்துவதில்லை. போகப்போக நாம் போகும்போது ஒருமுறை ஏறெடுத்துப் பார்த்துவிட்டு இயல்பாகத் தன் வேலையைப் பார்த்துக்கொள்ளும். இப்படியாக எங்கள் நட்பு நாளொரு மேனியும் பொழுதொரு வன்னமுமாக வளர்ந்துவந்த நிலையில்,
ஒரு டுவிஸ்ட்...
அன்று வழக்கம்போல அங்கு போயிருந்தபோது...
"புல்டோசர்" ஒன்று அந்த நீர்நிலையில் மண்ணைப்போட்டு மூடிக்கொண்டிருந்தது.
" இந்த இடம் பைபாஸ் ரோட்டை ஒட்டி இருக்குதுள்ள அதான் இங்க பெட்ரோல் பங்க் வருது சார்"
ஓட்டுநர் இதைச் சொல்லிவிட்டு ரிவர்ஸ் எடுக்க, நம் நினைவுகளும் ரிவர்ஸ் எடுத்தது.
சரி...இந்த சோடி எங்கே போயிருக்கும்? வேறு இடம் தேடிப் போயிருக்குமா? இல்ல இவி்ங்க அடிச்சி சைட்டிஸ் ஆக்கிருப்பானுங்களா? மில்லியன் டாலர் கேள்விகளுடன் அவற்றை ஒவ்வொரு நீர்நிலைகளாகத் தேட ஆரம்பித்தோம். அவை கண்ணில் படாமல் நம்பிக்கை இழந்திருந்த வேலையில்தான்...
இன்று நாகமங்கலம் அருகிலுள்ள ஒரு பள்ளியின் நிகழ்ச்சியை முடித்துவிட்டு திரும்பிவரும் வழியில் சாலையின் இடப்புறமுள்ள ஒரு சிறிய, நீர்த்தேங்கிய குளத்தின் நடுவே இரண்டு பறவைளைக் கண்டவுடன் வண்டியை ஓரமாக நிருத்திவிட்டு, கேமராவில் ஜூம் செய்துப் பார்த்தால்...
அதே சோடி...
அது மகிழ்ச்சியானத் தருணமாக அமைந்தது.
பாலா பாரதி

No comments:

Post a Comment