Friday 28 April 2017

INDIAN EAGLE OWL கொம்பன் ஆந்தை

குடிஞை | கொம்பன் ஆந்தை | INDIAN EAGLE OWL | BUBO BENGALENSIS | APR'17
குடிஞை ஒரு பேராந்தை ஆகும். இது மரங்களிளும் மலை முகடுகளிலும் தூங்கியபடி பகற்பொழுதைக் கழிக்கும். இது இரவாடிப் பறவை, இரவில் வெளிப்பட்டுக் காடை, கௌதாரி முயல், ஓணான், பாம்பு ஆகியவற்றை வேட்டையாடும். மக்கள் குடியிருப்புகளில் அவர்கள் வளர்க்கும் கோழி, புறா போன்றவற்றையும் தூக்கிச் செல்லும். இலக்கியங்களில், நெடுந்தொலைவு கேட்கும் படியாக ஹம் ஹம் எனக் கத்தும் என்ற விளக்கம் பறவையியலார் விவரங்களோடு ஒத்துப்போகிறது.
“மரந்தலை மணந்த நனந்தலைக் கானத்து
அலந்தலை ஞெமையத்து இருந்த குடிஞை

பொன்செய் கொல்லனின் இனிய தெளிர்ப்ப” – நற்றிணை - 394
பொற்கொல்லர்கள் குழல்கொண்டுத் தணலை ஊதும்போது ‘ஹும் - ஹும்' என்ற ஓசை எழுப்புவதுபோலப் குடிஞையின் குரலோசை இருந்ததாக நற்றிணை கூறுகிறது.
‘பொன்செய் கொல்லனின் இனிய தெளிர்ப்ப’ - நற்றிணை - 394
இப்பாடலும் குடிஞையின் குரலைக் கூறுகிறது.
“மயில்க ளாலக் குடிஞை யிரட்டும்
துறுகல் லடுக்கத் ததுவே” - ஐங்குறு நூறு - 291
'குடிஞை இரட்ட' என்பது குடிஞை ‘பூம்- பூம்' என்று குரலோசையிடுவது பொற்கொல்லர்கள் ‘பூம் - பூம்’ என்று ஊதுவதுபோல் மாறிமாறி ஒலிப்பதையே ‘முன்னிய இரட்ட’ என்று பாடல் கூறுவது சுவையானது.
“திரிவயின் தெவிட்டுஞ் சேட்புலக் குடிஞைப்
பைதல் மென்குரல் ஐதுவந் திசைத்தொறும்” – அகநானூறு 283
அகநானூறு 283 ஆம் பாடலில் குடிஞையின் குரலோசை மாவரைக்கும் 'திரிகை' எழுப்பும் ஓசையைப்போல இருந்ததாகக் கூறுவது நுட்பமான விளக்கமாகும்.
“உருத்தெழு குரல குடிஞைச் சேவல்
புல்சாய் விடரகம் புலம்ப வரைய
கல்லெறி இசையின் இரட்டும் ஆங்கண்” – அகநானூறு - 89
மலையின் மீதிருந்து கல் விழுவதைப் போன்றிருந்ததாம் குடிஞை வெகுண்டு எழுப்பும் குரலோசை. கல் உருளும் ஓசையைக் குடிஞை வெகுண்டு செய்யும் ஓசைக்கு ஓப்பிட்டது அழகிய உவமையாகும்.
இவ்வாந்தை மலையாளத்தில் 'காட்டுமூங்கா' எனவும், ஆங்கிலத்தில் ' INDIAN OR HORNED EAGLE OWL' எனவும், பறவை நூலில் 'BUBO BENGALENSIS' அழைக்கப்படுகிறது.
இவ்வாந்தைகள் மாந்திரீக செயல்களுக்காக வேட்டையாடப் படுவதால் இவற்றைப் பார்த்த இடத்தைக் குறிப்பிடவில்லை.

- பாலா பாரதி

No comments:

Post a Comment