Friday, 28 April 2017

INDIAN SKYLARK வானம்பாடி


பாடும் வானம்பாடி..ஹா...
பாடும் வானம்பாடி..ஹா...
மார்கழி... மாதமோ...
பார்வைகள்..ஓ. ஈரமோ..ஓ.
ஏனோ...ஏனோ....

நண்பர் தங்கமணி அவர்களுடன் செங்குறிச்சி குளத்தில் பறவைகளைப் படமெடுத்துக் கொண்டிருந்தபோது 'வானம்பாடி' பறவையையும் படமெடுத்தோம். அப்போதுதான் வானம்பாடி குறித்து மக்களிடையே நிலவிவரும் நம்பிக்கையும் நினைவு வந்தது.

பறவை பாடி மழையா பெய்யும்?

பருவமழையே குறைந்துவருகிற வேளையில், செயற்கை மழை வருவித்தலும் தோற்ற வேளையில், கேட்க நன்றாகத்தான் இருக்கிறது, பறவை பாடினால் மழை பெய்யுமென்பது.ஆனால், வானம்பாடி பறவை வானில் உயரே சென்று பாடினால் மழை பெய்யும் என்ற நம்பிக்கை இன்றும் நம்மிடையே உள்ளது.

வானம் பாடி வறங்களைந் தானா
தழிதுளி தலைஇய புறவிற் காண்வர
                                                                                                                                                      - ஐங்குநுறூறு 418

தற்பாடிய தளியுணவிற்
புட்டேம்பப் புயன்மாறி
- பட்டினப்பாலை வரி 3-4

மேலேயுள்ள பாடல்களில் மழைத்துளியை விரும்பி உண்ணும் பறவையைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது.இப்பறவையை வானம்பாடி என்று கூறுகிறோம். வானம்பாடி மழைக்காக ஏங்கிப்பாடுமென்றும் அதனால் மழை பொழியுமென்றும் ஐங்குறு நூற்றில் கூறப்பட்டுள்ளது. வானம்பாடி பாடியும் மேகம் அருளாது மழை பெய்யவில்லை என்று அகநானூறு கூறியுள்ளது.

வானம்பாடி மழைத்துளியை விரும்பி உயரத்தில் பறந்து பாடினால் மழை வரும் என்ற நம்பிக்கை சங்க காலத்திலேயே இருந்திருக்கின்றது. இந்த நம்பிக்கை நாட்டு மக்களிடையே வழங்கி வந்திருக்கலாம். ஆனால் மழைத்துளியை உணவாகக் கொள்ளும் பறவை இயற்கையில் எதுவும் இல்லை.

'துளிநசைப்புள்என்று புறநானூறு வானம் பாடியை அழைக்கின்றது. வறட்சி மிக்க காலத்தில் மழைத் துளிக்கு அலையும் புள் என்று கலித்தொகை கூறியுள்ளது.
இது 'தற்பாடி' என்றூம் அழைக்கப்படுகிறது. 'தன்' என்பதற்கு 'தண்ணீர்' என்று பொருள். தன்+பூசணி=தற்பூசணி அதாவது நீர்பூசணி என்றழைக்கப்படுவது போல
தன்+பாடி= தற்பாடி என்ற பெயர் வந்துள்ளது.
(தற்பூசணியை நாம் அதன் பொருளறியாமல் தர்பூசணி என்றழைக்கிறோம்.)

வானம்பாடியை ஆங்கிலத்தில் “THE INDIAN SKYLARK” என்றும் பறவை நூலில் ALAUDA GULGULA என்றும் கூறப்பட்டுள்ளது.

- பாலா பாரதி

No comments:

Post a Comment