பூமன் ஆந்தை இனத்தைச் சேர்ந்த பறவை. இதை ஊமைக் கோட்டான் என்றும் அழைப்பார்கள். ஊமைக் கோட்டான் கண்களை மூடாது உற்றுப் பார்ப்பதைக் கண்டு, விடை கூறாமல் முறைத்துப் பார்க்கும் மனிதனுக்குப் பெயராக்கினர். இம்முறையாகப் பயமுறுத்துவதற்கு ஊமாண்டி காட்டுதல் என்ற வழக்கும் உள்ளது.
"ஏன்டா இப்படி ஊமக்கோட்டான் மாதிரி முழிக்கிற?"
என்ற வழக்கைக் கேட்டிருப்போம். ஊமைக் கோட்டானைக் கூமன் என்றும் அழைப்பர். இப்போது பூமன் என்றும் அழைக்கின்றனர். ஊமன் கோட்டான் ஊமக்கோட்டான் ஆனது போல கூமன் பூமன் ஆகியிருக்க வேண்டும். சங்க இலக்கியத்தில் ஆந்தையினத்தில் ஐந்து வகைகள் கூறப்பட்டுள்ளன. அவை கூகை, குரால், குடிஞை, ஊமன், ஆண்டலை என்பவையாகும். ஆந்தை அல்லது கோட்டான் என்பது இந்த இனத்திற்கானப் பொதுப் பெயர்களாகும். பூமனுக்குத் தலையில் இரு கொண்டைகள் இருக்கும் இவற்றை வைத்து இதனை அடையாளம் காணலாம். ஊமனை ஆங்கிலத்தில் BROWN FISH OWL என்றும் பறவை நூலார் BUBA ZEY LONENSIS LESCHENAULT என்றும் அழைக்கின்றனர்.
“சிறுகூகை யுட்கவிழிக்க வூமன் வெருட்ட”
-மூத்த திருப்பதிகம், காரைக்காலம்மையார். 2-3
காரைக்காலம்மையாரின் மூத்த திருப்பதிகத்தில் ஊமன் என்ற பெயர் ஊமைக் கோட்டான் என்ற இந்தப் பெரிய ஆந்தையையே குறிப்பிட்டுள்ளதைக் கவனிக்க வேண்டும். இதை ஊமத்தங் கூகை என்றும் நாட்டுமக்கள் அழைப்பர். ஊமடங்குருவி, ஊமத்தங்கோழி என்றும் அழைப்பதுண்டு. இந்த ஊமன் என்ற பேராந்தையைக் கடற்கரையோரங்களிலும் நீர் நிலையருகிலும் மரச்சூழலில் காணலாம். மீன்களை மட்டுமே உணவாக உட்கொள்ளும் இந்தப் பேராந்தை ‘ஊம்-ஊம் என்று குரலோசை செய்வதால் இதற்கு ஊமன் என்று பெயரிட்டனர். ஊமன் கூவுவதைத் கிராமங்களில் நல்ல சகுனமாகக் கருதுவதுண்டு. ஊமன் கூவினால் குழந்தையைத் தாலாட்டக் கூவுவதாகவும், குழந்தை பிறக்கும் என்றும் நம்பும் வழக்கமும் காணப்படுகிறது.
No comments:
Post a Comment