பறவைகள் பார்த்தலின்போது நிறைய முறை நடப்பது இது, தொலைவில் உள்ள பறவைகளைப் பார்த்துக்கொண்டேப் போவோம் தீடீரென காலுக்கு கீழிருலிருந்து சர்ரென்று ஏதோ பறந்து போகும். அவை பறந்தபின்தான் அங்கே பறவை இருந்ததையே நாம் உணரமுடியும். அந்த அளவுக்கு உருவ மறைப்புத் தன்மையைப் பெற்றுள்ளவை இந்தக் கௌதாரிகள். இவை தரையோடு ஒட்டியபடி இருக்கும்போது இவற்றின் நிறம் தரையின் நிறத்தோடு ஒத்துபோய் அதற்குப் பாதுகாப்பாக விளங்குவதால் ஓரிரு மீட்டர் தூரத்திலிருக்கும் போது கூட இதனைக் கண்டு கொள்வது கடினம். கௌதாரி சிறிய கோழியைப் போல் இருக்கும் பறவை. இது தவிட்டு நிற உடலைக் கொண்டது. இதன் வயிற்றுப் பகுதியில் கறுப்பு வரிகள் காணப்படும். இதன் வால் சற்றுக் குட்டையாகவும் கால்கள் சிவப்பாகவும் இருக்கும்.
இவை தரையில் முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும். அறுவடை முடிந்த நிலங்களிலும், வெட்ட வெளியிலும் சிறு கூட்டமாக மேய்ந்து கொண்டிருக்கும். தானியங்கள், புல் விதைகள், கறையான் போன்றவற்றை உண்ணும். ஆட்கள் நடமாடும் சத்தம் கேட்டால் பறப்பதற்குப் பதிலாகப் பெரும்பாலும் குடுகுடுவென்று ஓடும். குடிக்கத் தண்ணீரை நாடி, இவை கூட்டமாகக் கூடி வெகுதூரம் பறக்கும். தினமும் குறிப்பிட்ட நேரத்தில் நீர்நிலைகளை நோக்கிக் கூட்டமாக வரும் பழக்க முடையவை. நீரில் சில பறவைகள் இறங்கி நீர் குடிக்கும்போது மற்றவை வரிசையில் காத்து நிற்கும். வேட்டைக்காரர்கள் நீர்நிலை அருகே காத்திருந்து இதனை எளிதாக பிடிப்பார்கள். தானியங்கள், புல் விதைகள் முதலியவற்றை மணலோடு கூடத் தின்னும். இது புழு பூச்சிகளைத் தின்பதில்லை. பறக்கும் போது "குட்ரோ..." என்ற குரலில் உரத்துக் கத்தும்.
No comments:
Post a Comment