மாண்டாகுவின் பூனைப் பருந்து என்பது ஹாரியர் (பூனைப் பருந்து) குடும்பத்தைச் சேர்ந்த புலம்பெயர் கொன்றுண்ணிப் பறவை (Birds of Prey / Raptor) ஆகும். கொன்றுண்ணிப் பறவை அல்லது ஊனுண்ணிப் பறவை என்பது எலி, முயல் போன்ற பாலூட்டி வகை விலங்குகளையும், கோழி, புறா போன்ற பிற பறவைகளையும் கொன்று தின்னும் பறவையினம் எனலாம். இப்பறவைகள் தம் கூரிய, வலுவான நகங்களால் தம் இரையைப் பற்றி கிழித்து உண்ண வல்லன. பெரும்பாலான ஊனுண்ணிப் பறவைகளில், பெண்பறவைகள் ஆண்பறவைகளைவிட அளவில் பெரியனவாக இருக்கும்.
உலகம் முழுவதும் பதினாறு வகையான பூனைப் பருந்து இனங்கள் உள்ளன. அவற்றில் மாண்டாகுவின் ஹாரியர், பேல்லிட் ஹாரியர், யுரேசியன் மார்ஷ் ஹாரியர் உள்ளிட்ட சுமார் ஐந்து வகையான பறவைகள் தமிழ்நாட்டுக்கு வலசை வந்து செல்கின்றன.
ஜார்ஜ் மாண்டாகு (George Montagu) என்ற ஆங்கிலேய இயற்கை ஆர்வலர் 1802 இல் வெளியிடப்பட்ட பறவையியல் அகராதி தயாரித்ததில் முன்னோடியாகத் திகழ்ந்தவர். இவர் தனது ஆய்வில் தெற்கு இங்கிலாந்தில் பூனைப்பருந்துகள் இனப்பெருக்கம் செய்கின்றன எனக் கண்டுபிடித்தார். அதனால் இவ்வினப் பறவைகளுக்கு அவரின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. குளிர்காலத்தில் வலசை வரும் இவற்றை அக்டோபர் முதல் ஏப்ரல் வரை தென்னிந்தியா முழுதும் சமவெளிகளிலும், மலைகளில் 2600 மீட்டர் உயரம் வரையும் காணமுடியும்.
மாண்டாகுவின் பூனைப் பருந்துகள் பெரும்பாலும் தனித்துக் காணப்படும். இவை தரையில் இருந்து சுமார் ஒரு மீடடர் உயரத்தில் சுற்றிப் பறந்தபடி இருக்கும். மேடு, பள்ளங்களுக்கு ஏற்ப தாழ்ந்தும், உயர்ந்தும் பறக்கும். விளைநிலங்கள் மேலேயும் வட்டமிடக் காணலாம். ஏதாவது இரை கண்டவுடன் அதனைக் காலால் பற்றி வயல் பரப்பிலோ ஏரிக்கரையிலோ அமர்ந்து தின்னும். மற்ற பறவைகளோடு சேர்ந்து உழுத நிலங்களிலோ, புல்வெளிகளிலோ, தரையிலேயே அமர்ந்து இரவு முழுவதையும் கழிக்கும். தவளை, ஓணான், எலி ஆகியவற்றோடு நோய்வாய்ப்பட்ட சிறு பறவைகளையும் பிடித்துத் தின்னும்.
மாண்டாகுவின் பூனைப்பருந்து ஐரோப்பா, ரஷ்யா, தென் சீனா போன்ற பகுதிகளிலிருந்து குளிர்காலத்தில் ஆப்பிரிக்கா, இந்தியா போன்ற இடங்களுக்கு வலசை வருகின்றன. வலசைக் காலங்களில் வறண்ட, புல்வெளி நிலங்களில் இவற்றைக் காணலாம். வெட்டுக்கிளிகள் போன்றவற்றை வேட்டையாடி உண்பதன் மூலம் இவை விவசாய சூழலை சமநிலையில் வைத்திருக்க உதவுகின்றன.
No comments:
Post a Comment