Tuesday 28 November 2017

கிளியூர் பறவைகள்

கிளியூருக்குப் படையெடுக்கும் வெளிநாட்டுப் பறவைகள்...
திருச்சியில் ஒரு 'வேடந்தாங்கல்'!
விகடன்
Posted Date : 17:38 (22/11/2017) Last updated : 17:38 (22/11/2017)
ஜெ.பஷீர் அஹமது
கோ.ராகவேந்திரகுமார்
பறவைகள் என்றதுமே வேடந்தாங்கல்தான் நமக்கு நினைவுக்கு வரும். பறவைகள் சரணாலயமான இங்கு வருடந்தோறும் ஆயிரக்கணக்கான வெளிநாட்டுப் பறவைகள் வந்துசெல்லும். இதேபோல, தற்போது திருச்சியில் இருக்கும் கிளியூருக்குப் படையெடுத்துள்ளன வெளிநாட்டுப் பறவைகள்.
கிளியூர் பறவைகள்
ஐரோப்பாவில் இருந்து வருகைதரும் காட்டு வாத்து இனத்தைச் சேர்ந்த நீலச்சிறகு வாத்து, ஆண்டி வாத்து எனப் பல்வேறு இனப் பறவைகள் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகில் உள்ள கிளியூர் கிராமத்தின் குளத்தில் வந்து அமர்ந்துள்ளன. இதனால் அந்தப் பகுதி முழுவதும் ரம்மியமாக காட்சியளிக்கிறது. இந்தப் பறவைகளின் சிறப்பம்சங்கள்குறித்து நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார் பறவைகள் ஆர்வலர் பாலா பாரதி.
"பறவைகளிடமுள்ள வினோதங்களில் ஒன்று, இடம்பெயர்தல் என்ற வலசை போதல் (Bird Migration). ஒவ்வொரு வருடமும் ஒரு பருவ காலத்தில் இது நடக்கும். இடம் பெயர்வது என்றால் ஒன்றோ இரண்டோ அல்ல. விதவிதமான பறவைகள் லட்சக்கணக்கான எண்ணிக்கையில் இடம்பெயரும்.
பாலபாரதிபல்லாயிரம் மைல் தூரத்தைக் கடந்து பறவைகள் வலசை போவதற்கான முதன்மையானக் காரணங்களில் ஒன்று உணவுத்தேடல்; மற்றொன்று, கூடுகட்டி இனப்பெருக்கம் செய்ய ஏதுவான சூழல். ஒவ்வொரு பருவத்திலும், பறவைகள் உணவு குறைவாகக் கிடைக்கும் இடத்தில் இருந்து உணவு அதிகம் கிடைக்கும் இடத்தை நோக்கி இடம் பெயர்கின்றன. பருவகாலம் மாறியதும், மீண்டும் இடம்பெயர்ந்துவிடும். இவ்வாறு இவை வெகுதொலைவுக்குப் பறக்கும்போது பல சவால்களைச் சந்திக்க வேண்டும். இதுபோன்ற சவால்களை சமாளிக்குமாறு அவை தகவமைப்பைப் பெற்றுள்ளன.
இடம்பெயர்ந்து செல்வதற்கு முன்பாக சில வாரங்களுக்கு நிறைய உணவை உட்கொண்டு அதைக் கொழுப்பாக மாற்றி உடலில் சேமித்து வைத்துக்கொள்ளும். இக்கொழுப்பையே நீண்ட தொலைவுக்குப் பறக்கும்போது தேவைப்படும் ஆற்றலாக மாற்றிக்கொள்கின்றன. இப்போது கூட, இங்கே கிளியூரில் அவை ஓய்வெடுப்பதுபோலத் தெரிவது, அவற்றின் கொழுப்புச் சேர்தலுக்காகவே (Fat Accumulation). ஆர்டிக் ஆலா போன்றப் பறவைகள் ஒரே முயற்சியில் தாங்கள் செல்ல வேண்டிய பன்னிரண்டாயிரம் கிலோ மீட்டர்கள் தொலைவையும் கடக்கும் திறன்பெற்றவை. சில பறவையினங்கள் இடையிடையே தங்கி, தங்கள் உடலில் கொழுப்பைச் சேர்த்துக்கொண்டு மீண்டும் பயணத்தைத் தொடர்பவை. இப்படித்தான் ஐரோப்பாவில் இருந்து இங்கே பறவைகள் வந்துசெல்கின்றன. இடம்பெயரும்போது நிறைய பாதைகள் உள்ளன. இவற்றில் வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஓசியானா மற்றும் ஆப்பிரிக்க யூரேசிய வான்வழித்தடம், தென்கிழக்கு ஆசியாவை உள்ளடக்கிய கிழக்காசிய ஆஸ்திரேலிய வான்வழித்தடம் போன்ற வழித்தடங்கள் முதன்மையானவை.
வெளிநாட்டு பறவைகள்
கிளியூர் குளத்தில் தற்போது நீலச்சிறகி, ஆண்டி வாத்து, சீழ்க்கை சிறகி, ஊசிவால் வாத்து உள்ளிட்ட வெளிநாட்டுப் பறவைகள் அதிகளவில் இருக்கின்றன. இவ்வாறாக நீண்ட தொலைவு இடம்பெயர்ந்து வரும் பறவைகள் யாவும் நீர்ப்பறவைகளே, மேலும், இவற்றின் வாழ்வாதாரம் நீரைச் சார்ந்தே உள்ளது. பலர் வாத்துகளுக்குப் பறக்கத் தெரியாது என நினைக்கிறார்கள். ஆனால், பறவைகளில் காட்டு வாத்துகள் அதிகத் தொலைவு பறக்கும் இயல்புள்ளவை. வெறும் 10 சதவிகிதம் மட்டுமே ஆக்சிஜன் உள்ள இமயமலையையே, பட்டைத்தலை வாத்துகள் (Bar-Headed Goose) கடந்துவிடும்.
சூழலியல் அச்சுறுத்தல்கள்
பருவமழை பொய்த்தலும், நீர்மாசுபடுதலும் இவற்றின் வாழ்வாதாரத்தை அதிகம் பாதிக்கும் காரணிகள். இயற்கைப் பேரிடர்களையும் பிற இன்னல்களையும் கடந்து இங்கு வலசைவரும் இவ்வலசைப் பறவைகள் இங்கே நீரில்லாக் குளங்களையும், பிளாஸ்டிக் பைகளால் நிரம்பி இருக்கும் மாசுப்பட்ட நீர்நிலைகளையும் எதிர்கொள்கின்றன. இதுபோன்ற சூழலியல் சீர்கேடுகள் இவற்றுக்கு ஆபத்து விளைவிக்கக்கூடியவை. இந்தக் கிளியூர் குளம் இன்னும் மாசடையாமல் இருக்கிறது. இதைத் தொடர்ந்து இதேபோலப் பாதுகாக்க வேண்டியது அவசியம்.
பறவைகள் இடம்பெயர்வதின் மூலம்தான் மகரந்தச்சேர்க்கை, மண்வளம் பெருகுதல், விதைகள் பரப்பப்படுதல் போன்ற வழிகளில் பல்லுயிர்ப் பெருக்கம் அதிகரிக்கிறது. பறவைகள் இடம்பெயர்ந்து அமரும் இடங்களில் விவசாயம் செழிப்பாகும்; இதன் முக்கியத்துத்தை உணர்ந்து இந்தப் பகுதியை பறவைகள் சரணாலயமாக அறிவிக்கவேண்டும் என்பதே இங்கிருப்பவர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது" என்கிறார் பாலா பாரதி.








No comments:

Post a Comment