Thursday, 30 November 2017

தினைக்குருவி

தினைக்குருவி | Scaly-Breasted Munia 
முனியா.... ஏ... முனியா...
என்ன...யாரையோ கூப்பிடுவதாக நினைத்து விட்டீர்களா?
முனியா என்றழைக்கப்படும் தினைக்குருவிகள் சிட்டுக் குருவியை விடச் சிறியவை, தேன்சிட்டைவிட சற்றே பெரியவை. இவற்றின் அலகு மொத்தமாகவும் கூம்புவடிவிலும் இருக்கும். தானியங்களையும் மெல்லிய தோலுள்ள விதைகளையும் தோலை நீக்கிவிட்டு உண்ணும். சிட்டுக் குருவிகளை மாதிரி இல்லாமல் இவற்றைக் கூண்டில் அடைத்து வீட்டில் வளர்க்க முடியும். ஆமாம், வீட்டில் கூண்டில் அடைத்து வளர்க்கிறோமே அதேதான்.
நம்நாட்டில் ஆறு வகையான முனியாக்கள் காணப்படுகின்றன. தினையன், கருப்புவரையன் சிட்டு ஆழ்வார் சிட்டு, நெல்லுக் குருவி என்றெல்லாம் நாட்டு மக்களால் அழைக்கப்படுகின்றன.
'நிரைபறைக் குரீ இ யினம்'
'கிளையமல் குரீ இ'
என இக் குருவிகளை சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.
இவற்றுள் பொரிராட்டினம் என்றழைக்கப்படும் புள்ளி முனியா (Spotted Munia)வும் ஒன்று.
மனிதர்கள் தாங்கள் உயிர் வாழ இந்த முனியாக்களை பலியிட்டிருக்கிறார்கள். ஐம்பதுகளில் நிலக்கரி சுரங்கங்களில் வெடி வைத்துத் தகர்த்தப் பின் அந்த இடத்தில் ஆட்களுக்கு அபாயம் விளைவிக்கக் கூடிய விஷவாயு இருக்கிறதா என்று கண்டறிய ஒருவர் ஒரு கூண்டில் முனியாவை எடுத்துக் கொண்டு முன்னே செல்வாராம். முனியாவின் தலை சாய்ந்து உயிர் விட்டால் உடனே ஆட்கள் எல்லோரும் பின் வாங்கி விடுவார்களாம்.
'அறம்' படத்தில் குழந்தை சிக்கிக்கொள்ளும் போர்வெல் குழாயினுள் விஷவாயு இருக்கிறதா எனத் தெரிந்துகொள்ள கயிற்றில் கோழியைக் கட்டி இறக்கிப் பார்ப்பார்களே ... அதுபோலத்தான்.
பின்னர் குழாய்கள் மூலம் வெளிக் காற்றினை சுரங்கத்திற்குள் செலுத்தி விஷவாயுவை வெளி ஏற்றுவார்களாம்.
"மனிதன் உயிர் பிழைப்பதற்காக பாவம் இந்தப் பறவைகள் உயிர் விட்டிருக்கின்றன."
- பாலா பாரதி

No comments:

Post a Comment