Tuesday, 28 November 2017

தையல்காரக் குருவி | Tailor Bird


தையல்காரக் குருவி | Tailor Bird | Manikandam | Trichy

சென்றமுறை கசாப்புக்காரரை சந்தித்தோமில்லையா? இன்று தையல்காரரை சந்திப்போமா.

Tailor Bird என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்தத் தையல்காரக் குருவிகளை வீட்டுத்தோட்டங்களிலும் புதர் அடர்ந்த இடங்களிலும் இவரைக் காணலாம். வாலை ஆட்டியபடி சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் இவரைப் பார்த்திருக்காவிட்டாலும் இவரின் குரலை கேட்டிருப்போம். இரண்டு விதமான கீச்சல்களை எழுப்பியபடி கிளைக்கு கிளை தாவிக்கொண்டே இருப்பார். ஆலிவ் பச்சை நிறத்தில் முதுகுப்பகுதியையும் வெள்ளை நிற வயிற்றுப் பகுதியையும் கொண்டிருக்கும் இவருக்குப் பிடித்த டிஸ் புழு, பூச்சிகள். மனிதர்கள் புழங்கும் இடங்களில் இயல்பாக செயல்படும் இவரை படமெடுப்பது சற்றுக் கடினம்தான்.

சிட்டுக்குருவியின் அளவில் இருப்பார், ஆண் குருவியின் வால்இறகுகளில் நடு இரண்டு இறகுகள் நீண்டிருக்கும். இவரை தையல்காரக்குருவி என்று அழைக்கக் காரணம் இவர் தன் கூட்டினை அமைக்கும் முறை. எப்படித் தெரியுமா?...

சற்றே அகலமான இலையைத் தேர்ந்தெடுத்து அதனை வளைத்துப் பிடித்துக் கொண்டு சிலந்தி வலையினைக் கொண்டு சுற்றி ஒட்டுவார். பின்னர் அவ்வாறு தயார் செய்த கூம்பு போன்ற குழாய் உள்ளே பஞ்சினைக் கொண்டு வந்து வைப்பார்.

பிறகு தனது கூர்மையான அலகினைக் கொண்டு இலையின் ஓரத்தில் சிறு துவாரங்கள் செய்து அத்துவாரங்களின் வழியே பஞ்சினை வெளியே இழுத்து அதைத் தட்டையாக்குவார். அதாவது 'ரிவீட்' அடிப்பார். கூம்பின் அடிப்பாகத்தில் பஞ்சால் குழிவாக மெத்தைப்போன்று தயார் செய்து அதில் முட்டைகளை இடுமாறு அமைப்பார்.

- பாலா பாரதி

No comments:

Post a Comment